வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கும் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வெப்ப குறிகாட்டி எனப்படும் மனித உடலினால் உணரக்கூடிய வெப்பத்தின் அளவு, அவதானமாக செயற்பட வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் வெப்ப குறிகாட்டி 39 மற்றும் 45 செல்சியஸ் இடையே காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் காணிகளில் தொழில்புரியும் நபர்கள் போதுமான அளவு நீரை அருந்துமாறும் நிழலான இடங்களில் போதுமான அளவு ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீடுகளில் உள்ள வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் சிறுவர்களை வாகனங்களில் தனியாக விட்டுச்செல்ல வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திறந்த வௌிகளில் அதிக நேரம் செலவிடும் நபர்கள் அதிக களைப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி, நிழலான இடங்களில் ஓய்வெடுப்பதற்காக போதுமான அளவு நீரை அருந்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.