சவூதியின் சுற்றுச்சூழல் ஆர்வலர் குலூத் அல்-பழ்லி என்ற பெண், பசுமையான சவூதி அரேபியா என்பதை எடுத்துக் காட்டும் வகையில் 500,000 பிளாஸ்டிக் போத்தல் மூடிகளைப் பயன்படுத்தி 383 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட உலகின் மிகப்பெரிய சுவரோவியத்தை உருவாக்கி இரண்டாவது முறையாக கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தி சவூதி அரேபியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பிளாஸ்டிக்கை மீள் பயன்பாட்டுக்கு உட்படுத்துவதன் மூலமும் குறைப்பதன் மூலமும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்பதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த ஓவியத்தை உருவாக்க இவர் எட்டு மாதங்களை எடுத்துக் கொண்டுள்ளார். இந்தப் பணியில் இவருக்கு உதவியாக சவூதி அரேபியாவின் கிரீன் லீவ்ஸ் பாடசாலை மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அல்-பழ்லியின் இந்த சாதனைக்கான சான்றிதழ், கின்னஸ் உலக சாதனை அதிகாரிகள், ஜித்தா நகராட்சி அதிகாரிகள் மற்றும் பழ்லியின் குடும்பத்தினர், பாடசாலையை சார்ந்தவர்கள் மற்றும் மேலும் சில நபர்கள் கலந்து கொண்ட ஜித்தா கொர்னிச்சில் நடைபெற்ற சிறப்பு விழாவில் வழங்கப்பட்டது.