வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த பணிப்பெண் ராஜன் ராஜகுமாரி, கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜன் ராஜகுமாரியின் கொலை தொடர்பான வழக்கு கொழும்பு புதுக்கடை இலக்கம் 04 நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ராஜன் ராஜகுமாரி கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியினால் இன்று மன்றுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமது வீட்டில் பணிபுரிந்த போது தங்க நகையை திருடியதாக தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரான சுதர்மா ஜயவர்தன வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டிற்கு அமைய, கடந்த மே மாதம் 11 ஆம் திகதி 42 வயதான ஆர்.ராஜகுமாரி என்பவர் வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தனது மனைவியின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்தமைக்கமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.