கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர், தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட ஒவ்வாமையால் உயிரிழந்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நோயாளி வெட்டுக் காயங்களுடன் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டார். பின்னர், அவர் 72 ஆம் இலக்க சிகிச்சை அறையில் அனுமதிக்கப்பட்டதாக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

50 வயதுடைய குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெட்டுக் காயங்களை ஆற்றுவதற்காக, செலுத்தப்பட்ட கோ அமொக்ஸிகிளேவ் என்ற தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சிகிச்சை அறையில் உள்ள 32 நோயாளர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.(Co Amoxiclav) என்ற இந்த தடுப்பூசி உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. இது தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது குறித்த தடுப்பூசி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பயன்பாட்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த நோயாளரின் பிரேத பரிசோதனையின் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version