வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் சுமார் 10 பேர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்த தகவல்கள் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அறியமுடிகின்றது.

வருடாந்தம் ஆகஸ்ட் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இம்முறை எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை ‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’ என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்த சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் புதன்கிழமை காலை கொழும்பில் அமைந்துள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன் இதனையொத்த நிகழ்வுகள் அன்றைய தினம் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளன.

அதன்படி. கொழும்பிலுள்ள பிரதான அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வின்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் இதுவரையான காலமும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் மூலம் அடையப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

அதுமாத்திரமன்றி வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் சுமார் 10 – 12 பேர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இதுபற்றிய விபரங்கள் புதன்கிழமையன்று நடைபெறவுள்ள நிகழ்வில் அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்தவினால் பகிரங்கமாக அறிவிக்கப்படும் என்றும் அறியமுடிகின்றது.

இதுவரையான காலப்பகுதியில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு மொத்தமாக 21,374 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், அவற்றிலிருந்து காணாமல்போன முப்படைகளைச் சேர்ந்தோர் பற்றிய 3742 முறைப்பாடுகளையும், ஒரே நபர் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதியப்பட்ட 2644 முறைப்பாடுகளையும் (முகத்தோற்றத்தின் அடிப்படையில் கண்டறியப்பட்டவை) கழித்ததன் பின்னர் அலுவலகத்தின்வசம் 12,988 தேறிய முறைப்பாடுகள் இருந்தன.

அவை அச்சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு 2000 – 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பதிவான சம்பவங்கள், 1981 – 1999ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பதிவான சம்பவங்கள், 1980ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவான சம்பவங்கள் என்று மூன்றாக பிரிக்கப்பட்டன. அவற்றில் 2000 – 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவான 6025 முறைப்பாடுகளில் 3900 முறைப்பாடுகள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் தற்போது பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பான இரட்டிப்பு முறைப்பாடுகள் (முகத்தோற்றத்தின் அடிப்படையில் அடையாளம் காணப்படாதவை) மற்றும் முறைப்பாடு வழங்கப்பட்டதன் பின்னர் உயிருடன் இருப்பதாக கண்டறியப்பட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகளை ஒருங்கமைப்பதற்கான வழிகாட்டல் கோவை ஒன்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தயாரித்துவருகிறது.

அதேபோன்று நாட்டின் எந்தவொரு பாகத்திலும் மனிதப் புதைகுழிகளோ அல்லது மனித எச்சங்களோ கண்டறியப்படும் பட்சத்தில், அவற்றை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய சட்டக்கையேடு ஒன்றையும் தயாரித்திருக்கும் இந்த அலுவலகம், அதனையும் எதிர்வரும் புதனன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version