பெங்களூரு: விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலத்துக்கான கவுன்ட்டவுன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட்டுள்ளது. நாளை (செப். 2-ம் தேதி) விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1, சனிக்கிழமை (செப்.2) 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 குறித்த ஆர்வம் நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. நிலவில் கால் பதித்த கையுடன் சூரியனை ஆராய இஸ்ரோ விண்கலத்தை அனுப்புகிறது என்றதும், நெருப்புக் கோளமாக இருக்கும் சூரியனில் விண்கலம் எப்படித் தரையிறங்க முடியும் எனச் சிலர் மலைத்துப்போகின்றனர். இந்த விண்கலம் விண்வெளியில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ‘லக்ராஞ்சியன் புள்ளி எல்-1’ என்னும் இடத்தில்தான் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.