நாட்டில் தற்போது இனக்கலவரங்களும் அழிவுகளும் ஏற்படும் சூழல் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த 24ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் கூறியபோது புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பை ஏற்படுத்த விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் குறிப்பிட்டார்.

இலங்கையின் கடந்த கால வரலாற்றுப் பதிவுகளை பார்த்தோமானால், 1977 ஆகஸ்ட், செப்டம்பர் வரையும் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை பொலிஸாரே நாடு முழுவதும் பரவச்செய்தனர் என்பது புலப்படுகிறது.

1977 ஜூலை 21 தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் இந்த வன்முறை இடம்பெற்றது.

சர்வ கட்சி மாநாட்டின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜே.ஆர்.ஜெயவர்தன இத்தேர்தலில் பிரசாரம் செய்ததால் தெற்கில் தமிழர்களின் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கே பெருமளவு கிடைத்தன. சுதந்திர கட்சி 8 ஆசனங்களையே பெற்றது.

1977 ஆகஸ்ட் 12, 13 ஆகிய இரு தினங்களில் யாழ். புற்றுநோய் மருத்துவமனை கட்டட நிதிக்காக புனித பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் பொலிஸார் சிலர் (சிவில்) தகராறில் ஈடுபட்டதில் இரு பொலிஸார் காயமடைந்தனர்.

கொள்ளைச் சந்தேக நபர்களை கைது செய்யவே அவர்கள் அங்கு வந்ததாக யாழ். பொறுப்பதிகாரி (HQI) குணசேகர கூறினார்.

1977 ஆகஸ்ட் 15 பொலிஸ் அத்தியட்சகர் செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற பொலிஸ் அதிகாரிகள், கான்ஸ்டபிள்கள் கூட்டத்தின் பின்னர், புங்குடுதீவுக்குச் செல்வதாக கடமை புத்தகத்தில் எழுதிவிட்டு நகருக்குச் சென்று தீ மூட்டினர் என கான்ஸ்டபிள் சதானந்தபிள்ளை கூறினார்.

அத்துடன் ஏ.எஸ்.பி. நூர்தீன் ஜீப்பில் சென்று ‘நாய்களை சுடுங்கள்’ என கத்தியதாக ஒருவர் கூறினார்.

சிங்கள பொலிஸார் சோர்ட்ஸ், பெனியன் இலக்கமின்றி சீருடையில் பொல்லுகள், தடிகள், துவக்குகளுடன் நகரின் வர்த்தக நிலையங்களை பழைய சந்தையை டயர்கள் மூலம் எரித்தனர்; கொள்ளையடித்தனர்; மதுபான கடைகளை உடைத்து மது அருந்தினர். யாழ். நகரமே போர்க்களமானது. எங்கும் புகை!

இந்த கலவரத்தில் பொதுமக்கள் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் சிலர் உயிரிழந்தனர்.

சைக்கிளில் சென்றவர்களை வழிமறித்து, சைக்கிளை தூக்கிச் செல்லும்படி கூறி தாக்கினர். கோட்டை அருகில் வந்தவர்களை குளத்தில் தூக்கிப் போட்டனர். பொலிஸ் நிலையத்தில் இருந்தும் கற்களை வீசினர்.

மக்கள் பாதுகாப்பு தேடி மருத்துவமனை போன்ற இடங்களில் தஞ்சமடைந்தனர். பொலிஸாரின் அத்துமீறல்களை நேரில் கண்டதாக சிங்களவரான யாழ். சுகாதார பணிப்பாளர் மருத்துவர் திசநாயக்க ஆகஸ்ட் 17 யாழ்ப்பாண கச்சேரியில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கூறினார்.

1958 கலவரங்களை விட மோசமாகி நாடு முழுவதும் பரவும் என வட பிராந்திய பொலிஸ்மா அதிபர் அனா செனவிரட்ன (ஜே.ஆரின் மருமகன்) அ.அமிர்தலிங்கத்திடம் கூறியிருந்தார்.

ஆகஸ்ட் 17 யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து தலைமையகத்துக்கு “நாகவிகாரை மீது தாக்குதல்; 4 இ.போ.ச பஸ்கள் எரிப்பு” என்ற தவறான வானொலி (வயர்லஸ்) தகவல் அனுப்பப்பட்டதே தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமாக பரவ காரணமானது. எனினும், இத்தகவல் தவறானது என பின்னரே தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 16 நகரை பார்வையிட காரில் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கம், வி.யோகேஸ்வரன் எம்.பி. ஆகியோரை 30 பொலிஸார் துவக்குமுனையில் மிரட்டினர். பொறுப்பதிகாரி குணசேகர ‘சுட வேண்டாம், போகவிடுங்கள்’ என கத்தினார்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நூர்தீன் முன்பாக இரு பொலிஸார் அமிர்தலிங்கத்தை துப்பாக்கியால் தாக்கினர். 4 பொலிஸார் மேல் நோக்கி சுட்டனர். யாழ். மேலதிக அரச அதிபர் ஏ.ஜோசப் வந்தபோதும் ‘ஹேண்ட்ஸ்அப்’ என்று கூறி மிரட்டினர். பலாலி இராணுவ பவுஸர்கள் மூலம் தீயினை அணைக்க அவர் ஏற்பாடு செய்தார்.

அமிர்தலிங்கம் பிரதி பாதுகாப்பு அமைச்சர் வீரப்பிட்டியவுக்கும் பிரதமர் ஜே.ஆருக்கும் முறையிட்டுத் தடுக்குமாறு கோரினார்.

ஆகஸ்ட் 17ஆம் திகதி இரவு அனுராதபுரத்தில் கொழும்பு – யாழ், யாழ் – கொழும்பு ஆகிய இரு தபால் ரயில்களில் பயணம் செய்த தமிழ்ப் பயணிகள் தாக்கப்பட்டனர்.

அனுராதபுரத்தில் பரம்பரையாக வாழ்ந்த தமிழர்களும் கூட வெளியேறினார்கள். அங்கு பணியாற்றிய தமிழ் அரச ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களும் கூட தாக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர்.

தமிழர்களின் கடைகள், வீடுகள் கொள்ளையிடப்பட்டு வண்டில்களில் எடுத்துச்செல்லப்பட்டன.

அத்தகைய சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்தில் இரு அமைச்சர்கள் இருந்தததாக அப்போதைய சுகாதார அத்தியட்சகர் விஜயவர்தன “லங்கா கார்டியன்” பத்திரிகைக்கு தெரிவித்தார்.

அந்நாட்களில் அனுராதபுரம் பொலிஸ் அத்தியட்சகர் லியனகேயிடம், தமக்கு பாதுகாப்பு தருமாறு தமிழர்கள் கோரியபோது, கேணல் அமிர்தலிங்கத்திடம் கேட்கும்படி கூறினார்.

அவர் யாழ்ப்பாணம் சென்று வந்த பின்னரே இங்கு நிலைமை மோசமானது.

தமிழர்களின் சடலங்கள் குவிந்தன. அவை மரண விசாரணை ஏதுமின்றி அடக்கம் செய்யப்பட்டன என மருத்துவர் அபேசிறி குணவர்த்தன கூறினார்.

இவை யாவும் 1977இல் நடந்த சம்பவங்கள்…

இன்றோ அனுராதபுரம் மருத்துவமனையில் மருத்துவர்கள், தாதியர், ஊழியர்கள் இன்றி மக்கள் துன்பப்படுகின்றனர்.

ஆகஸ்ட் 24 கொழும்பில் இருந்து 3 கப்பல்களில் சுமார் 2 ஆயிரம் தமிழ் அகதிகள் காங்கேசன்துறைக்கு (26) வந்தபோது உறவினர்கள் திரண்டிருந்தனர்.

முதலில் “லங்கா ராணி” கப்பல் வந்தது. கர்ப்பிணிகளும் குழந்தைகளுடன் பெண்களும் அணிந்த ஆடைகளுடன் வந்தனர்.

காங்கேசன்துறை பட்டின சபைத் தலைவரும், கப்பல் முக வருமான க.ஜெயபாலசிங்கமும், அகதிகளை சேர்க்கும் பணிக்கு பொறுப்பான (SP)பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.சுந்தரலிங்கமும் தேவையான சகல உதவிகளை செய்தனர்

கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலையில் இருந்த அனுராதபுரத்தின் 80 இந்திய தமிழர்களுக்கு அதிபர் திருமதி ம.ஆனந்தக்குமாரசாமி பொதுமக்களின் உதவியுடன் நிவாரண உதவிகளை செய்தார்.

யாழ்.இந்துக்கல்லூரி, அரியாலை முகாம்களில் கேகாலை, குருநாகல், பிலியந்தல, மாகோ, பொல்காவலை பகுதிகளின் இந்திய தமிழர்கள் 182 பேர் தங்கவைக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தை அறியாதவர்கள்.

கொழும்பு முகாம்களின் தமிழ் அகதிகளை இலவசமாக விமான மூலம் யாழ்ப்பாணம், திருகோணமலை,மட்டக்களப்புக்கு அனுப்புவைக்குமாறு பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா எயர் சிலோன் நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.

D.C-3 என்ற ஜெட் விமானத்தில் (170 பேர்) 5 முறையும், எயர் சிலோன் விமானத்தில் (40 பேர்) 10 தடவையும், உத்தரதேவி மற்றும் விசேட ரயில்கள் மூலமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் அகதிகள் வடக்கே வந்தனர்.

கொழும்பில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை என 1958 ஜூன் கலவரத்திலும் 6 சரக்கு கப்பல்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வடக்கே 5 நாட்கள் அனுப்பிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் பலியான மூவரின் மரண விசாரணை யாழ்.நீதிவான் கே.வி.நவரத்தினம் முன்னிலையில் பல நாட்களாக நடைபெற்றது.

வவுனியாவில் 14 தமிழ்க்கிராமங்களில் தீ வைப்பு,கொள்ளை இடம்பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக எரிந்தன.அனுராதபுரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் கிளிநொச்சிக்கு வந்தனர்.

தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.இந்திய பிரதமர் மொராஜி தேசாயிடம் கவலை தெரிவித்தபோது இலங்கையில் சகஜ நிலையை ஏற்படுத்த இந்தியா உதவும் என கூறினார்.பாதிக்கப்பட்ட இந்திய தமிழர்களின் விபரங்களை இந்தியா கோரியது.

1977 ஆக.13 முதல் செப்.15 வரை நாட்டில் இடம்பெற்ற கலவரங்களை விசாரணை செய்ய ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் எம்.சி.சன்சோனி தனிநபர் ஆணைக்குழு 1977 நவம்பர் 9 நியமிக்கப்பட்டது.1978 பெப்ரவரி 8 முதல் 1979 டிசம்பர் 10 வரை யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி. அனுராதபுரம், திருகோணமலையில் ஆணைக்குழு விசாரணை நடைபெற்றபோது பலரும் நேரில் கண்டவற்றை கூறினர்.

திருகோணமலையில் கலவரம் ஆரம்பித்ததும் பொலிசார் தடுக்கவில்லை.பொலிசார் ஜீப்பில் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தனர்.உப்புவெளி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என இரா.சம்பந்தன் எம்.பி. விசாரணையில் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்து ஓய்வுபெற்ற நீதியரசர் எல்.எம்.இஸ்மயில் தலைமையில் குழுவும் நியமிக்கப்பட்டது. 6 ஆண்டுகளால் மீண்டும் 1983 கறுப்பு ஜூலையும் தொடர்ந்து 30 வருட யுத்தமும் ஏற்பட்டு 2009 முடிந்தது.எந்த இழப்பீடுகளும் நிவாரணமும் இல்லை.தமிழ் மக்களின் காணிகளும் குடியேற விடுவிக்கப்படவில்லை

யாழ்.சம்பவங்கள், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர்கள் பலி குறித்து எதிர்க்கட்சித்தலைவர் அ.அமிர்தலிங்கம் ஆகஸ்ட் 19 பாராளுமன்றத்தில் கூறினார்.

நீங்கள் தனிநாடு கேட்கிறீர்கள். திருகோணமலை தலைநகர் என்கிறீர்கள். கூட்டணியும்,தமிழ் இளைஞர்களுமே இவற்றுக்கு காரணம்.போர் என்றால் போர்! சமாதானம் என்றால் சமாதானம்!! என பிரதமர் ஜே.ஆர்.முரசறைந்து நின்றதால் நாட்டில் என்றுமே சமாதானம் அமைதி ஏற்படப்போவதில்லை என்பது இன்று வரை தொடர்வதை காணலாம்.

(ம. ரூபன்)

Share.
Leave A Reply

Exit mobile version