மனைவியை உலக்கையால் தாக்கி காயப்படுத்திவிட்டு, தனது இரண்டு மகள்களையும் வீட்டையும் தாக்க முயன்றதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை, அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவி மீது சந்தேகமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மனைவியை உலக்கையால் தாக்கியதுடன் பிள்ளைகள் மீதும் தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்துள்ளார். இதையடுத்து அவரை மனைவியும் இரு பிள்ளைகளுமாக இணைந்து கட்டி வைத்துவிட்டு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம், ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கான்ஸ்டபிளின் வீட்டிற்குச் சென்று கட்டப்பட்டிருந்த கான்ஸ்டபிளை அவிழ்த்து கைது செய்துள்ளனர்.

பொலிஸ் கான்ஸ்டபிளான கணவர் மதுபோதையில் தாக்குதலை மேற்கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version