“சிங்கப்பூர் மக்கள் எனக்கு அளித்துள்ள ஆதரவுக்கு உண்மையிலேயே மதிப்பளித்து அதனை காப்பாற்றுவேன். எனக்கு அளிக்கப்பட்ட வாக்கு சிங்கப்பூருக்கு அளிக்கப்பட்ட வாக்காகும்” என காத்திருந்து அடைந்த தேர்தல் வெற்றிக்களிப்பில், 70.4 சதவீத சிங்கப்பூர் மக்களின் ஏகோபித்த வாக்குகளை பெற்று, சிங்கப்பூர் நாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக தெரிவான தர்மன் சண்முகரட்னம் தெரிவித்தார்.
கடந்த கால சிங்கப்பூர் அரசியல் பதிவுகளின்படி, முதல் முறையாக ஒரு தமிழர் ஜனாதிபதியாக சிங்கப்பூர் மக்களால் தெரிவு செய்யப்பட்டது 1999ஆம் ஆண்டிலாகும். 1999இல் இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த செல்லப்பன் ராமநாதன் சிங்கப்பூரில் ஜனாதிபதியாக பதவியேற்றார். நீண்ட காலமாக அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த ஆட்சியாளராக அவர் கருதப்படுகிறார். அவருக்கு பிறகு, இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஒரு தமிழர் சிங்கப்பூரின் ஜனாதிபதியாகியிருப்பது இதுவே முதல் முறை.
அந்த வகையில், சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியான தர்மன் சண்முகரட்னம் இலங்கை மண்ணைச் சேர்ந்த தமிழர் என்பதில் பெருமையே.
தற்போதைய சிங்கப்பூர் ஜனாதிபதியாக பதவி வகித்துக்கொண்டிருக்கும் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13ஆம் திகதியோடு நிறைவடைகிறது.
இந்நிலையில், புதிய ஜனாதிபதி தெரிவுக்கான தேர்தல் அறிவிக்கப்பட, ஜனாதிபதி வேட்பாளர்களாக தர்மன் சண்முகரத்னம் (66), இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகிய மூவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
அதனையடுத்து, ஜனாதிபதி தேர்தலுக்கான மக்கள் வாக்கெடுப்பு நேற்று செப்டெம்பர் 1ஆம் திகதி நடத்தப்பட்டது.
இம்முறை சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு சிங்கப்பூர்வாழ் மக்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த மக்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள 10 நகரங்களில் அந்நாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்களும் தேர்தலில் வாக்களிப்பதற்கான நடைமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.
வாக்கெடுப்பு நிறைவில் வாக்குகள் எண்ணப்பட்டு, நேற்றைய தினமே (01) முடிவுகள் வெளியாயின.
ஜனாதிபதி தேர்தலை சந்திப்பதற்கு முன்னர் சிங்கப்பூரில் தமிழ் முரசு பத்திரிகையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் சிங்கப்பூரின் எதிர்காலம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
“நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஒவ்வொரு சிறு குழந்தையும், அவர்களின் பின்னணியை பொருட்படுத்தாமல், அவற்றை கண்டறிய ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். சமூக இயக்கம் சிங்கப்பூர் யதார்த்தத்தின் ஒரு பகுதியாக இருப்பதை உறுதிசெய்ய நாம் அதிகம் செயலாற்ற வேண்டும்.
இரண்டாவதாக, நமது கலாசார அடையாளத்தை ஆழப்படுத்த, நாங்கள் மிகவும் செயற்பாட்டுடன் இருக்க வேண்டும். நாங்கள் பேசும் பாணி, அடுத்த கட்டம் அந்த பன்முக கலாசார அடையாளத்தை ஆழமாக்குகிறது’’ என்று கூறிய தர்மன் சண்முகரட்னம், தற்போது அடைந்திருக்கும் ஜனாதிபதி பதவியை, சிங்கப்பூரின் எதிர்காலத்துக்கான தனது இலக்கினை கண்டறிந்து பயணிப்பதற்கு அந்நாட்டு மக்கள் அளித்த ஒரு வாய்ப்பாக கருதுகிறார்.
குறித்த நிகழ்வில், “ஆரோக்கியமான ஆட்சி தொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படும். ஆனால், அந்த அனைத்து கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கவேண்டியது அவசியம். இதில் அதிகமானோர் அல்லது அனைவரும் எதில் இணங்கி இருக்கிறார்களோ, அதை வேறுபாடுகளுக்கு இடையிலான பாலமாக பயன்படுத்தி இணைப்புகளை வலுப்படுத்த வேண்டும்” என தர்மன் தெரிவித்ததற்கிணங்க, அந்நாட்டினதும் சிங்கப்பூர் மக்களினதும் சுபீட்சத்துக்கான தனது கனவு அரசியலை நிறைவேற்றும் பொருட்டு, ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து, அவர் ஆற்றவுள்ள பணிகள், முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளும் தொடர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
யார் இந்த தர்மன் சண்முகரட்னம்?
தர்மன் 1957ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தவர். எனினும், அவர் இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
அவரது பாட்டனார் யாழ்ப்பாணத்தின் ஊரெழு பிரதேசத்தையும், பாட்டி இணுவில் பகுதியையும் சேர்ந்தவர்கள்.
தர்மனின் தந்தையான சண்முகரட்னம் ஒரு மருத்துவ பேராசிரியராக கடமையாற்றியவர் ஆவார்.
இவ்வாறு இலங்கைத் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் ஆங்கிலோ சீனக் கல்லூரியில் கல்வி கற்று, லண்டன் பொருளியல் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
தொடர்ந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் பொருளியல் துறையில் முதுமாணிப் பட்டங்களை பெற்றுள்ளார்.
இவர் ஜப்பானிய – சீன வழக்கறிஞரான ஜேன் யுமக்கோ இட்டோகி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு பெண், மூன்று ஆண்கள் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
சிங்கப்பூரில் தனக்கான அரசியல் அத்திவாரத்தை கடந்த சுமார் 22 வருடங்களாக வலுப்படுத்தி வரும் தர்மன் 2001ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்தார்.
2001இல் வணிகத்துறை அமைச்சில் மூத்த மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2003 முதல் 2008 வரை கல்வி அமைச்சராக கடமையேற்றிருந்த இவர், 2007இல் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு 2015 வரை அப்பதவியில் கடமையாற்றினார்.
2002ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
2011இல் சிங்கப்பூரின் துணை பிரதமராகவும் பதவியேற்று, 2019 வரை கடமையாற்றி வந்தார்.
2023 சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எந்தவொரு கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவராக இருக்கக்கூடாது என்கிற அந்நாட்டு தேர்தல் சட்டத்துக்கமைய, வேட்பாளராக களமிறங்கிய தர்மன் ஆளுங்கட்சியிலிருந்து விலகினார்.
கட்சி சாரா நபராக தனது கொள்கைகளை மட்டுமே முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த தர்மன், தனக்கான வெற்றி குறித்த நிலைப்பாட்டை முன்னதாகவே பதிவு செய்திருந்தார்.
அதன் அடிப்படையில் மக்கள் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் ஆட்சி மாற்றம், அதனால் விளையப்போகும் உயரிய குறிக்கோள் குறித்து தெரிவித்திருந்தார், தர்மன்.
“பலதரப்பட்ட பார்வைகளையும், மாறிவரும் அரசியல் சூழலையும் கொண்ட சமூகத்துக்கு ஒற்றுமையின் சின்னமாகவும் அனைவரையும் ஒன்றுபடுத்தக்கூடியவராகவும் ஜனாதிபதி திகழ்வது முக்கியம்.
சிங்கப்பூரின் அடுத்த கட்ட வளர்ச்சியை பொறுத்தவரையில், ஜனாதிபதி பதவியில் ஒரு வேறுபட்ட பண்பு தேவைப்படுகிறது. அதுவே நான் இந்த தேர்தலில் போட்டியிட காரணமாக இருக்கிறது.
என்னுடைய கடந்த கால செயற்பாடு, என் வாழ்க்கையின் நோக்கம், சிங்கப்பூரின் அடுத்தகட்ட வளர்ச்சியில் என்னால் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பவற்றின் அடிப்படையில்தான் நான் போட்டியிடுகிறேன்” என்று உறுதிபட மக்களிடத்தில் வெளிப்படுத்தியவர் இன்று சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இன ஒற்றுமை உணர்வாலும் கொள்கைகளாலும் பலமான சமூகப் பின்னணியாலும் வலுப்பெற்றுள்ள தர்மனின் செயற்றிட்டங்கள், கொள்கைகள், அவர் உத்தியோகபூர்வமாக பதவியேற்றதன் பின்னரான காலங்களில் அந்நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை வளமாக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்…!
(மா. உஷாநந்தினி) Virakasari