இலங்கை – அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் உயர்தரம் (13ஆம் வகுப்பு) கற்கும் மாணவிகளின் மாதவிடாய் நாட்களைக் கேட்டுக் குறிப்பெடுத்து, தனக்கு வழங்குமாறு சிரேஷ்ட மாணவத் தலைவி ஒருவரிடம் கேட்ட பள்ளி முதல்வர் ஒருவருக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த சிரேஷ்ட மாணவத் தலைவி தனது தாயுடனும், சம்பவம் நடந்த வேளையில் தன்னுடன் இருந்த மற்றொரு மாணவத் தலைவியுடனும் கடந்த 23ஆம் தேதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்திற்குச் சென்று இந்த புகாரைப் பதிவு செய்துள்ளார்.

உயர்தர மாணவிகளின் காதல் தொடர்பு உள்ளவர்கள் குறித்து பள்ளியின் முதல்வர் தன்னிடம் விசாரித்ததாகவும், எந்த மாணவிக்கு எந்த நாட்களில் மாதவிடாய் ஏற்படுகிறது என்பதையும், யாருக்கு எத்தனை நாள் மாதவிடாய் ஏற்படுகிறது என்பது தொடர்பாகவும் கேட்டு – காகிதத்தில் எழுதி, அதைத் தனக்கு வழங்குமாறு பள்ளியின் முதல்வர் தன்னிடம் கேட்டதாகவும் மாணவத் தலைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவத் தலைவியிடம் – அவரின் தாயின் அனுமதியைப் பெற்று, பிபிசி தமிழ் பேசியது.

மாணவிகளின் மாதவிடாய் நாட்களை குறித்து வைக்குமாறு அதிபர் கூறினாரா?

“அன்றைய தினம் மற்றொரு மாணவத் தலைவியுடன் ஒரு வேலையாக பள்ளி அதிபரின் காரியாலயத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு என்னை அழைத்த பள்ளியின் முதல்வர், நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? உங்கள் வகுப்பு மாணவிகளில் யார் யாருக்கு காதல் தொடர்புகள் உள்ளன என என்னிடம் வினவினார்,” என்கிறார் அந்த மாணவி.

குறிப்பிட்ட இரண்டு மாணவிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு காதல் தொடர்பு உள்ளதா என்று அவர் கேட்டதாகவும் ஒரு மாணவியின் பெயரைக் குறிப்பிட்டு அவரது தோளில் காதலன் கைபோட்டுக் கொண்டு சென்றதைத் தான் கண்டதாக அதிபர் கூறியதாகவும் மாணவி தெரிவித்தார்.

அந்த மாணவியின் வீட்டில் அவரின் காதலர் தங்கிச் செல்கிறாரா என்றும் தன்னிடம் பள்ளியின் முதல்வர் கேட்டதாககாவர் கூறுகிறார்.

“இந்த விஷயங்கள் குறித்து எனக்குத் தெரியாது என்றேன். பின்னர் மாணவிகளுக்கு மாதவிடாய் எப்போதெல்லாம் வருகிறது என்பதையும், எத்தனை நாட்கள் வருகிறது என்பதையும் தெரிந்துகொண்டு, அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி, தனக்குத் தருமாறு கேட்டார். இது குறித்து மாணவிகளிடம் பேசி தகவல்களைப் பெறலாம் என்றும் சொன்னார்.”

“பிள்ளைகள் பள்ளிக்கு வந்து, இடையில் செல்வதாகவும், மாணவத் தலைவி என்னும் வகையில் அதை நான்தான் கவனிக்க வேண்டும் என்றும் அவர் என்னிடம் கூறினார்,” என்றார் அந்த மாணவி.

இந்த விஷயங்களை கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் திரும்பத் திரும்ப தன்னிடம் பள்ளியின் முதல்வர் பேசியதாகவும் அந்த மாணவி பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

”இவற்றை ஒழுக்காற்று ஆசிரியைகளிடம் கூறுகிறேன். நீங்கள் செய்யுங்கள் என்றார். நீங்கள் ஆசிரியைகளிடம் கூறுங்கள், அதை நாங்கள் பார்க்கிறோம் என்று பதிலளித்து விட்டு வந்துவிட்டேன்,” என அந்த மாணவி சொல்கிறார்.

இவ்வாறான விஷயங்களை மாணவிகளிடம் ஆசிரியைகள்தான் பேசவேண்டும் எனக் கூறும் அந்த மாணவி, இவ்வாறு தன்னிடம் பேசிய பள்ளி அதிபரின் முகத்தை மறுநாள் பார்ப்பதற்குத் தனக்கு கஷ்டமாக இருந்ததாகவும், சம்பவம் நடந்த அன்றே அவ்விடயத்தை தனது அம்மாவிடமும், மறுநாள் ஆசிரியைகள் இருவரிடமும் கூறியதாகக் குறிப்பிட்டார்.

“அந்த விடயத்தை நான் தெரியப்படுத்திய ஆசிரியைகளில் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனின் தங்கை. அவர் இதுபற்றித் தனது சகோதரன் கலையரசன் எம்பியிடம் கூறியுள்ளார்.

அதையடுத்து, இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுக்கு கலையரசன் எம்.பி முறையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஜுலை மாதம் கடைசிப் பகுதியில் இதுகுறித்து விசாரிப்பதற்கு அதிகாரிகள் வந்தார்கள்.

அவர்கள் என்னிடமும், சம்பவம் நடந்த நாளன்று என்னுடன் பள்ளியின் முதல்வர் காரியாலயத்திற்கு வந்திருந்த மாணவத் தலைவியிடமும் விசாரித்தனர்,” என்றார்.

மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் மறுக்கிறார் – பள்ளியின் முதல்வர் குறித்து மாணவியின் தாய் புகார்

மே மாதம் நடைபெறவிருந்த பெற்றோர் கூட்டத்தை நடத்தாமல், பள்ளி முதல்வர் வேண்டுமென்றே தள்ளிப் போட்டுக் கொண்டு வந்ததாகவும், இறுதியில் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி, அந்தக் கூட்டத்தை நடத்தியதாகவும் மாணவியின் தாயார் குறிப்பிடுகின்றார்.

குறித்த மாணவியின் தாயிடமும் பிபிசி தமிழ் பேசியது.

நடந்த விஷயத்தைத் தனது மகள் – அன்றைய தினமே தன்னிடம் கூறியதாகவும், அதை பள்ளியில் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என நினைத்து, பெற்றோர் கூட்டமொன்று (Parents Meeting) நடைபெறும் நாளில் இதுபற்றிப் பேசுவதற்கு எண்ணியிருந்ததாகவும் அவர் கூறினார்.

ஆனாலும், மே மாதம் நடைபெறவிருந்த பெற்றோர் கூட்டத்தை நடத்தாமல், பள்ளி முதல்வர் வேண்டுமென்றே தள்ளிப் போட்டுக் கொண்டு வந்ததாகவும், இறுதியில் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி, அந்தக் கூட்டத்தை நடத்தியதாகவும் மாணவியின் தாயார் குறிப்பிடுகின்றார்.

”அந்தக் கூட்டத்தில் இதுகுறித்து பள்ளி முதல்வரிடம் பகிரங்கமாக விசாரித்தேன். ஒரு பெண் பிள்ளையிடம் மாதவிடாய் தொடர்பில் நீங்கள் எப்படிப் பேச முடியும் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் தான் அவ்வாறு கேட்கவில்லை என்றார். அவரை அவமானப்படுத்துவதற்காக ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொரு கதையைக் கொண்டு வருவதாக பள்ளி முதல்வர் சொன்னார்,” என்று மாணவியின் தாய் தெரிவித்தார்.

ஆனால், மறுநாள் பள்ளியில் தனது மகளிடம் சென்று, தான் எந்தவித தவறான நோக்கத்துடனும் குறித்த விடயத்தைப் பேசவில்லை என்று பள்ளி முதல்வர் கூறியதாக மாணவியின் தாய் சொல்கிறார்.

“அந்த நேரம் பள்ளிக்கு நானும் சென்றேன். என்னிடமும் பள்ளி முதல்வர் பேசினார். எனது மகளிடம் அவர் பேசியதை என்னிடம் ஒப்புக் கொண்டார். அவர் எந்த கெட்ட நோக்கத்துடனும் அந்த விஷயங்களைக் கேட்கவில்லை என்றார். பிறகு மன்னித்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் கூறினார்.”

“பெற்றோர் கூட்டத்தில் எல்லோருக்கும் மத்தியில் எனது மகளிடம் அவ்வாறு நீங்கள் பேசவில்லை என்றும், எனது பிள்ளை பொய் சொல்வதாகவும் கூறிவிட்டு, இப்போது நான்கு சுவர்களுக்குள் எப்படி நீங்கள் மன்னிப்பு கேட்க முடியும் என்று அவரிடம் கேட்டேன்,” என்கிறார் மாணவியின் தாய்.

“இது தொடர்பில் என்னிடம் சில பெற்றோர் விசாரித்தனர். நடந்த விஷயத்திற்கு பள்ளியின் முதல்வர் மன்னிப்புக் கேட்டுவிட்டார் என்பதைக் கூறினேன். ஆனால், அதிபரோ எனது மகளிடம் அவ்வாறு எதுவும் பேசவில்லை என்று திரும்பவும் கூறுகிறார். என்னிடம் மன்னிப்புக் கேட்கவுமில்லை என்றும் சொல்கிறார்.

இதனால், எனது மகள் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இது விஷயத்தில் தான் பொய் கூறவில்லை என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் என்னிடம் சொல்கிறார். அதனால்தான் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்று புகார் செய்தோம்,” என்று மாணவியின் தாயார் கூறினார்.

முதல்வர் வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே கூறியிருந்தேன் – கலையரசன் எம்.பி
எம்.பி கலையரசன்.

இந்த விவகாரம் தொடர்பில் குறித்த பள்ளியில் ஆசிரியராகக் கடமையாற்றும் தன்னுடைய தங்கை தனக்குத் தெரியப்படுத்தியதாகவும், சம்பந்தப்பட்ட மாணவத் தலைவியின் தாயார் தன்னிடம் முறையிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரி. கலையரசன் தெரிவிக்கின்றார்.

இதையடுத்து கோட்டக்கல்வி அதிகாரி, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோருக்கு இந்த விஷயத்தை அவர் தெரியப்படுத்தியதாகவும் கூறினார்.

மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் – முன்னர் பணியாற்றிய பள்ளி ஒன்றில் குழந்தை பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் இடமாற்றப்பட்ட இரண்டு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் அவரை வேண்டாமென்று கூறியதால் அங்கிருந்தும் அவர் குறுகிய காலத்தில் இடமாற்றப்பட்டதாகவும் கலையரசன் எம்.பி குறிப்பிடுகின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் நாவிதன்வெளியைச் சேர்ந்தவர். அந்த ஊரில்தான் குறித்த பள்ளி அமைந்துள்ளது.

“இத்தகைய பின்னணி கொண்ட அந்த முதல்வர் தற்போதைய பள்ளிக்கு மாகாண சபையால் நியமிக்கப்பட்டார். அதையடுத்து இந்தப் பள்ளிக்கு அவரை அதிபராக நியமிக்க வேண்டாம் என்று கல்வி அதிகாரிகளிடம் கூறினேன். அதையும் தாண்டியே அவர் இங்கு வந்துள்ளார்,” எனவும் கலையரசன் தெரிவித்தார்.

மேலும், மேற்படி முதல்வர் தற்போதுள்ள பள்ளியில் பணியாற்றும் சில பெண்களிடம் தவறாக நடக்க முற்பட்டதாகவும், அதில் ஒரு பெண் இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டதாகவும் கலையரசன் எம்.பி கூறுகிறார்.

பழிவாங்குவதற்கான பொய் குற்றச்சாட்டு – பள்ளியின் முதல்வர்

இந்த விஷயம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் குறித்த மாணவி முறையிட்டுள்ளதை, ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பில் மேற்படி பள்ளி முதல்வரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, அந்த மாணவத் தலைவி கூறுகின்றமை போல், அவரிடம் தான் பேசவில்லை என்றும், ஒரு சிரேஷ்ட மாணவத் தலைவி என்னும் வகையில் ஒழுக்க விடயங்கள் குறித்தே, அன்றைய தினம் அந்த மாணவியிடம் கேட்டதாகவும் கூறினார். மேலும், பள்ளிக்குள் தனக்கு எதிராக செயற்படும் ஒரு குழுவினரின் நடவடிக்கையே இது எனவும் குறிப்பிட்டார்.

”இந்தப் பள்ளியின் முதல்வர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் தெரிவானமையைத் தொடர்ந்தே, இங்கு நான் நியமிக்கப்பட்டேன். எனக்கு நியமனக் கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து, கலையரசன் எம்.பியை சந்தித்துப் பேசினேன். இந்தப் பள்ளிக்கு வரவேண்டாம் என்று அவர் என்னிடம் கூறினார். அப்படி அவர் சொன்னதற்கு அரசியல் காரணங்கள் இருக்கக்கூடும்,” எனக் கூறுகிறார் பள்ளி முதல்வர்.

தானும் நாவிதன்வெளியைச் சேர்ந்தவர்தான் என்றும், தான் இப்போது கடமையாற்றும் பள்ளியில்தான் கல்வி கற்றதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

”எனக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். என்னைப் பழிவாங்கும் நோக்கத்தில்தான் இது நடக்கிறது. 32 வருடங்கள் ஆசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். இந்த விஷயம் எனக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனக்குத் தற்போது 57 வயதாகிறது. ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்றாண்டுகள் இருக்கின்றன. ஆனால், இப்போதே ஒய்வு பெற்றுவிடலாமா என்று யோசிக்கிறேன்,” எனவும் அந்த முதல்வர் கூறினார்.

இதேவேளை, இந்த விஷயம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் குறித்த மாணவி புகார் செய்துள்ளதை, ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து குறித்த அதிபரிடம் தாம் விசாரணை நடத்தியதாகவும், தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழ்

Share.
Leave A Reply

Exit mobile version