மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் எருக்கலம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டவெளி புனித வேத சாட்சிகளின் இராக்கினி தேவாலயத்தில் உள்ள இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டு பல இலட்ச ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) இரவு இடம்பெற்றுள்ளது.
1544ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை வரலாற்றுச் சிறப்பை கொண்டதாக விளங்கும் இந்த தேவாலயம், சிறியதொரு அமைப்பில் காணப்படுகிறது.
இந்த தேவாலயத்துக்கு நாடளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்கள் வந்து போவது வழக்கம்.
அவர்கள் ஆலய வளாகத்தில் உள்ள மணல் மற்றும் மனித எலும்புத் துண்டுகளை எடுத்துச் சென்று, தமது வேண்டுதல்களை நிறைவேற்றும் புதுமையான வழிபாட்டு முறையும் அங்கு காணப்படுகிறது.
இத்தகைய சிறப்பினை கொண்ட இந்த தேவாலயத்தின் பிரதான உண்டியல்கள் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்டுள்ளது.
உடைக்கப்பட்ட உண்டியல்களில் இருந்த பணம் ஆலய தேவைக்காக கடந்த இரண்டு வருடங்களாக சேமிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு உண்டியல்களிலும் பல லட்சம் ரூபாய் பணம் இருந்திருக்கக்கூடும் என ஆலய காப்பாளர் மற்றும் கிராமத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, எருக்கலம்பிட்டி பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால் பொலிஸார் விசாரணைகளை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.