யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு ஊசியின் மூலம் மருந்தினை ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது:

காய்ச்சல் காரணமாக குறித்த சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஊசி மூலம் மருந்து ஏற்றப்பட்டுள்ளது.

ஊசி செலுத்தப்பட்ட மறுநாள் இரவு சிறுமி வலியினால் அவதிப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவ்வேளை விடுதியில் கடமையில் இருந்த தாதியர்களிடம் சிறுமியின் நோய் நிலைமை தொடர்பில் தாயார் கூறியபோது, ‘ஊசி ஏற்றப்பட்டால் இப்படித்தான் வலி இருக்கும்’ என தாதியர்கள் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்ததாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சிறுமியின் கை நரம்பு பாதிக்கப்பட்டதை உணர்ந்த வைத்தியர்கள் அதனை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை (02) காலை சத்திர சிகிச்சை மூலம் சிறுமியின் மணிக்கட்டுடனான கையின் பகுதி அகற்றப்பட்டது.

சிறுமி அனுமதிக்கப்பட்ட விடுதிக்கு பொறுப்புடைய வைத்தியர் சம்பவ தினத்தன்று கடமையில் இருந்தாரா என்பது தொடர்பில் சந்தேகங்கள் எழும்பும் நிலையில், அவ்விடுதியில் கடமையாற்றிய தாதியர்களின் அலட்சியப்போக்கும் சிறுமியின் கை அகற்றப்பட்டதற்கு காரணமாகிறது என்ற குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை தொடர்புகொண்டு கேட்டபோது அவர்,

சிறுமிக்கு நடந்த சம்பவம் மனவேதனை ஏற்படுத்துகிறது. இது தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை நியமித்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சுக்கும் இவ்விடயம் தொடர்பாக அறிவித்துள்ளேன்.

விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பாரபட்சமின்றி எடுப்பேன் என தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version