மதுரை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், செய்முறைகள் இன்றளவும் நடத்தப்பட்டு வருவது எந்திரத்தனமான இந்த டிஜிட்டல் உலகையும் வியக்க வைக்கும் அளவிற்கும் அமைந்துள்ளது.
காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஆங்காங்கே நடந்து வரும் நிகழ்ச்சிகளே இதற்கு சான்று. அந்த வகையில் தான் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் நட்பே சிறந்தது என்பதை வாடிப்பட்டி அருகே நடந்த காதணி விழா வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இங்கு எந்த ஒரு இல்ல விழாவாக இருந்தாலும், அதனை தனித்துவத்தோடு நடத்துவது மண்ணின் பாரம்பரிய வழக்கம். அதிலும் குறிப்பாக தாய்மாமன் சீர்வரிசை செய்வதில் போட்டியே நடக்கும். அந்த வகையில் தாய் மாமன் சீர்வரிசைக்கு போட்டியாக நண்பர்கள் சீர்வரிசை செய்து அசத்திய நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்-லதா தம்பதியினர். இவர்களது மகன், மகள் இருவருக்கும் காதணி விழா வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் பாலகிருஷ்ணனின் உறவினர்கள் பல்வேறு சீர்வரிசை செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் பாலகிருஷ்ணனின் நண்பர்களான கார்த்திக், சேதுராமன், நாகராஜன், செல்வ பாண்டி, அபுதாஹிர், மதன் மற்றும் திருமுருகன் உள்ளிட்ட ஏழுபேரும் சேர்ந்து பாலகிருஷ்ணனின் குழந்தைகளுக்கு தாங்களும் தாய்மாமன்கள் தான் என நிரூபிக்கும் வகையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய ராட்சத மாலையை கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
மேலும் பொய்க்கால் குதிரை, ஆட்டம் பாட்டம், மேளதாளத்துடன் தாய்மாமன் சீர்வரிசை செய்வது போல் அந்த பொருட்களுடன் ஆடிப்பாடி ஊர்வலமாக வந்தவர்கள் நண்பன் குடும்பத்தினருக்கு ராட்சத மாலையுடன், தம்பதிக்கு 500 ரூபாய் நோட்டுகளால் உருவாக்கப்பட்ட பண மாலையையும் அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் ஜல்லிக்கட்டு காளையையும் சீர்வரிசையாக வழங்கி மிரள வைத்தனர். அப்போது விசேஷ வீட்டார் ஆனந்த கண்ணீர் வடித்தனர். மேலும் ஆட்டம் பாட்டம் என காதணி விழாவையே குதூகலப்படுத்திய நண்பர்களின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் அந்த மலர் மாலையிலும் ‘மதுரையினா பாசம், இனிமேல் இந்த உறவை ஊரே பேசும்’ என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் 150 கிலோ மட்டன், சிக்கன் கறி விருந்தும் அளிக்கப்பட்டது.
இது அந்த பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. உறவுக்காரர்கள் கூட ஒதுங்கி செல்லும் சூழலில் நண்பர் இல்ல காதணி விழாவை உலகறிய செய்தமைக்காக தம்பதியினர் கண்ணீர் மல்க தங்களது நன்றியை உணர்வுப்பூர்வமாக தெரிவித்துக்கொண்டனர்.