ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு பரிமாற, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களால் விரும்பி உண்ணப்படும் பாரம்பரிய உணவுகளை நட்சத்திர உணவகங்கள் தயாரித்து வருகின்றன.
டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில்ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமானத்தில் புறப்பட்டார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக டெல்லியில் 1 லட்சத்து 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவர்களுக்கு தங்கம், வெள்ளித்தட்டில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாத்திரங்களில், உணவு பரிமாறப்பட உள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சர்வதேச நாடுகள் மற்றும் உள்நாட்டுத் தலைவா்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முர்மு நாளை விருந்தளிக்கிறார். பிரகதி மைதானில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் உள்ள 78 கலைஞா்களை அடங்கிய ‘இந்தியா இசைப் பயணம்‘ என்கிற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது