இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான முடிவடைந்த 8 மாத காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 1,427 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது 1,500 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டில் வருடமொன்றுக்கு 12,000 பேர் உயிரிழக்கின்றனர். இவற்றுள் நான்கில் ஒரு பங்கு வீதி விபத்துக்கள் என்பதுடன் இதன்போது சுமார் 3,000 பேர் உயிரிழக்கின்றனர்.
மேலும் நாளொன்றுக்கு சுமார் 7 முதல் 8 பேர் வரை வீதி விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அண்மைய புள்ளி விவரங்களின் படி இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான முடிவடைந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 1,427 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது 1,500 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வீதி விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கு மோட்டார் சைக்கிள் விபத்துகளால் ஏற்படுகின்றன.
இந்த காலப்பகுதியில் 612 மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 630 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருளை பயன்படுத்திய பஸ் சாரதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனம் 2030 ஆம் ஆண்டளவில் 50 சதவீதமாக விபத்துக்களை குறைக்க எதிர்பார்த்துள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு முடியும் என்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.