மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த இரண்டு காலகட்டங்களிலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் கடும்போக்காளர் கோட்டாபய ராஜபக்ச ஆவார்.
இவர் இலங்கை இராணுவத்தின் முன்னாள் படைத்தளபதியாகவும் செயற்பட்டவர். இவரது காலகட்டத்திலேயே வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்திருந்தன.
பல வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்டிருந்தனர். சிலர் படுகொலை செய்யப்பட்டனர். பலமான ஆட்சி ஒரு பக்கம் இடம்பெற்று வரும் போது இவ்வாறான சம்பவங்கள் எவ்வாறு நடை பெறுகின்றன என்ற சந்தேகம் பலருக்கும் அப்போது ஏற்பட்டது.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரண்டு சம்பவங்களே இராணுவத்தில் மிகவும் சூட்சுமமான ஒரு பிரிவு இயங்கி வருவதை உறுதி செய்தன.
2008 ஆம் ஆண்டு மே மாதம் ஊடகவியலாளர்களான கீத் நோயர், உபாலி தென்னக்கோன் ஆகியோர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டனர். உபாலி தென்னக்கோனின் விரல்கள் முறிக்கப்பட்டிருந்தன.
லசந்த விக்ரமதுங்க
மறுவருடம் 2009 ஆம் ஆண்டு பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தனது காரில் பயணித்த வேளை சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவங்களின் பிரதான சந்தேக நபராக அப்போது இனங்காணப்பட்டிருந்தவர் மேஜர் பிரபாத் புலத்வத்த என்பவராவார்.
ஆனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய விளங்கிய காரணத்தினால் மேற்படி இரண்டு சம்பவங்களினதும் காரணகர்த்தாக்கள் பற்றி எவரும் வாய் திறக்கவில்லை.
ஆனால் 2017 ஆம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் கீத் நோயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துக்காக மேஜர் பிரபாத் புலத்வத்த கைது செய்யப்பட்டிருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர் பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அதிர்ச்சி தரும் சம்பவமாக 2019 ஆம் ஆண்டு இவர் மீண்டும் இராணுவத்தில் இணைக்கப்பட்டார்.
இது ஊடக அமைப்புகள் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டமை குறித்த விசாரணை நடவடிக்கைகளுக்கு இது மிகவும் பாதகமான விடயம் எனக் சுட்டிக்காட்டப்பட்டாலும் அந்த காலக் கட்டத்தில் மைத்ரிபால சிறிசேன ராஜபக்ச சகோதரர்களுடன் கைகோர்த்திருந்ததால் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் தீர்மானங்களை எடுத்திருந்தார்.
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த மேஜர் பிரபாத் எவ்வாறு மீண்டும் இராணுவப் புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்டார் என்பதை அப்போதைய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவே அறியாமலிருந்தார் என்பதிலிருந்து அவரின் பின்னணி வலிமையை அறியக்கூடியதாக இருக்கின்றது அல்லவா?
இராணுவ புலனலாய்வு அதிகாரியான மேஜர் பிரபாத் புலத்வத்வே, கோட்டாபய ராஜபக்சவின் திரிபோலி பிளட்டூன் பிரிவை வழிநடத்தியவர் என்ற விடயம் பின்பு கசிந்தது.
இலங்கை இராணுவத்தின் பல இரகசிய நடவடிக்கைகளின் கட்டளை தளபதியாக அவர் விளங்கினார் என்ற விடயங்களும் அம்பலமாகின.
இதே வேளை ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட காலத்தில் இலங்கை இராணுவத்தின் பிரதானியாக இருந்த மேஜர் ஜெனரல் கருணாசேகரவும் 2018 ஆம் ஆண்டு இதே குற்றச்சாட்டுக்காக சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டார் என்பது முக்கிய விடயம்.
இந்த கடத்தல் சம்பவம் உண்மை என்பதை நிரூபிக்க மேஜர் பிரபாத் மீது பயணத்தடையை 2022 ஆம் ஆண்டு கொண்டு வந்தது அமெரிக்கா.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கைகளின் படி, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களில் இவர் ஈடுபட்டமை உறுதியானமை தெரியவந்துள்ளதால் இந்த பயணத்தடையை விதித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்த சம்பவமானது மேஜர் பிரபாத் திரிப்போலி பிளட்டூன் பிரிவில் பல இரகசிய அதே வேளை பாரதூரமான நடவடிக்களுக்குப் பொறுப்பாக இருந்தமையை ஊர்ஜிதப்படுத்தியது.
அசாத் மெளலானா
இந்த விடயத்தை சனல்–4 ஆவணப்படமானது பிள்ளையானின் பிரத்தியேக செயலாளராகவிருந்த அசாத் மெளலானா மூலம் வெளிக்கொணர்ந்திருந்தது. ‘ லசந்த ஒரு நாய் போன்றவன் அவன் கொல்லப்படவேண்டியவன் ‘ என கோட்டாபய ஒரு புலனாய்வு பிரிவினருடனான சந்திப்பின் போது கூறியதாக அசாத் மெளலானா தெரிவித்திருந்தார்.
இப்போது எழுந்திருக்கும் கேள்வி என்னவென்றால் இராணுவப் புலனாய்வு பிரிவின் திரிப்போலி பிளட்டூன் என்ற இரகசிய முகாம் இன்னும் இயங்குகின்றதா என்பதாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளர் அசாத் மெளலானா தெரிவித்த கருத்துகளின் படி ஊடகவியலாளர்கள் மற்றும் சில அரசியல்பிரமுகர்களின் படுகொலை சம்பவங்களுக்குப் பின்னாள், இந்த திரிபோலி பிளட்டூன் என்ற இரகசிய இராணுவ பிரிவினர் இருந்திருக்கின்றனர் என்பது வெளிவந்துள்ளது.
இந்த குழுவினரோடு சந்திரகாந்தன் எம்.பிக்கு தொடர்பு இருக்கின்றது என்பதையும் அசாத் கூறியிருந்தார்.
இதன் காரணமாகவே இந்த அமைப்பைப் பற்றி எழுதும், பேசும் கிழக்கு ஊடகவியலாளர்களை சந்திரகாந்தன் மிரட்டி அச்சுறுத்தி வருவதாகத் பாராளுமன்றில் தெரிவித்த சாணக்கியன் எம்.பி, இந்த திரிபோலி குழுவினரால் தனது உயிருக்கும் ஆபத்து உள்ளதாக பகிரங்கமாகவே தெரிவித்தார்.
அவரின் கூற்றுப்படி 2015 ஆம் ஆண்டிலிருந்து திரிபோலி குழு இயங்கி வருவதாகக் கூறுகின்றார். ஆனால் கோட்டாபய ராஜபக்ச எப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவியேற்றாரோ அன்றிலிருந்து இந்த குழு இகரசியமாக பல நவடிக்கைகளில் தொடர்பு பட்டு வருகின்றது என்பதே உண்மை.
ஆனால் பல இரகசிய தகவல்களின் படி லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்குப் பிறகு இந்த திரிபோலி பிரிவு கலைக்கப்பட்டு விட்டதாகவே தெரிகின்றது. உலக நாடுகளின் இராணுவத்தில் இயங்கும் இவ்வாறான பிரிவுகள் பல்வேறு காலகட்டங்களில் இவ்வாறு கலைக்கப்படுவது இயல்பானதொன்று.
அப்பிரிவினருக்கு வழங்கப்படும் இலக்கு அல்லது செயற்பாட்டுத் திட்டம் (Mission & Operation) முடிவுக்கு வந்தவுடன் அல்லது அதை அவர்கள் செய்து முடித்தவுடன் , குறித்த நபர்கள் இராணுவத்தில் தாம் முன்பு பார்த்த சாதாரண பொறுப்புக்கோ அல்லது நிர்வாக பிரிவுக்கோ மாற்றப்பட்டு சாதாரணமாக மக்கள் மத்தியில் நடமாடிக்கொண்டிருப்பர். மறுபடி அவர்களுக்கு ஒரு பொறுப்புகள் வழங்கப்படும் வரை அவர்கள் சாதாரண நபர்களாகவே இருப்பர்.
இந்த இரகசியங்கள் இராணுவத்தின் உயர் நிலை அதிகாரிகளுக்குக் கூட தெரியாமல் இருக்கலாம்.
இது முழுக்க முழுக்க அரசாங்க உயர்பீடத்தின் கட்டளைகளின் படியே அமையும். அந்நேரம் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச ஒரு சாதாரண அரசியல்வாதி மாத்திரமே.
ஆனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய சகல இராணுவ நுட்பமும் நுணுக்கங்களும் அறிந்தவர். ஆகவே அவரைத் தவிர இந்த பிரிவை வேறு எவரும் உருவாக்கியிருக்கவும் முடியாது.
கீத் நோயர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிரபாத் புலத்வத்த யார் என்ற தகவல்களை சி.ஐ.டியினர் மிகவும் நெருக்குதல்களுக்கு மத்தியில் வெளிக்கொணர்ந்திருந்தனர்.
DMI என்று கூறப்படும் இலங்கை இராணுவ புலனாய்வு இயக்குநரகத்தில் (Directorate of Military Intelligence) ஒரு இணைக்கப்பட்ட அதிகாரியாகவே பிரபாத் பணி புரிந்துள்ளார்.
பின்பு அவர் கொம்பனி வீதியை தளமாகக்கொண்டு இயங்கிய திரிபோலி பிளட்டூன் புலனாய்வு படைப்பிரிவுக்கு தலைமை தாங்கியுள்ளார்.
எனவே மகிந்த காலத்தில் இராணுவத்தில் திரிபோலி பிளட்டூன் என்ற நிழல் குழுவை இயக்கியவர் அல்லது கட்டளைத் தளபதியாக இருந்தவர் நிச்சயமாக கோட்டாபய ராஜபக்சவாகத்தான் இருந்திருப்பார் என்பதில் எந்த சந்தேகங்களுமில்லை.
அரச உயர்மட்டம் இடும் கட்டளைகளை செயற்படுத்துவது மாத்திரம் தான் இந்த பிரிவினரின் வேலை. அதில் பாவம் புண்ணியங்களை பார்க்க முடியாது. அதைத்தான் பிரபாத் புலத்வத்த போன்றோர் செய்திருக்கின்றனர்.
லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்குப்பிறகு அநேகமாக கலைக்கப்பட்ட இந்த திரிபோலி பிளட்டூன், கோட்டாபய ஜனாதிபதியானவுடன் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது என்பதை விட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை திட்டமிட, 2015 இலிருந்து நிழலாக இயங்க ஆரம்பித்துள்ளது என்பதே உண்மை.
அதைத்தான் சாணக்கியன் எம்.பி குறிப்பிட்டுள்ளார். எனினும் கோட்டாபாய அரகலய மூலம் பதவியிறக்கப்படுவார் என்பதை எவரும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
இப்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சனல்– 4 ஆவணப்படம் வெளியானபிறகு பல இரகசியங்கள் வெளிவரக்கூடும் என கோட்டாபாய உட்பட மகிந்த ராஜபக்ச சகோதரர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த காணொளி ஒரு திரிபுபடுத்தப்பட்ட பொய் என்ற நீண்ட விளக்கங்களுடன் அறிக்கை விட்டிருக்கும் கோட்டாபய எந்த இடத்திலும் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தன்னை இணைத்து கூறப்பட்ட விடயம் தொடர்பில் ஒரு வார்த்தையேனும் வெளிவிடவில்லையென்பது உற்று நோக்க வேண்டும்.
பி.பி.சியுடனான நேர்காணலின் போது கூட அவர் லசந்த யார் என்பதே தனக்குத் தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
கோட்டாபய பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் மிக் இராணுவ விமான மோசடி குறித்து தொடர்ச்சியாக லசந்த விக்ரமதுங்க தனது சண்டே லீடர் பத்திரிகையில் எழுதி வந்தார். இதன் காரணமாகவே அவர் மீது கோட்டாபய சினம் கொண்டார் என்பது நாடே அறியும்.
இப்போதும் கூட மீண்டும் கோட்டாபய பிரதமர் வேட்பாளராக களமிறங்கப்போகின்றார், மீண்டும் அரசியலுக்கு வரப்போகின்றார் என்ற கதைகள் கிளம்பியுள்ளன. அவர் அரசாங்கத்தின் ஏதாவதொரு பொறுப்பில் இருந்தாலும் திரிபோலி பிளட்டூன் உயிர்பெறும் என்பதை நிச்சயமாகக் கூறலாம்.
அது பல ஊடகவியலாளர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், நீதியான ஆட்சியை எதிர்ப்பார்க்கும் இளம் அரசியல்வாதிகள் ஆகிய அனைவருக்கும் ஆபத்தாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கும் என்பது உறுதி. எனவே மிக ஆபத்தான் இந்த திரிபோலி பிளட்டூன் என்ற இரகசிய இராணுவ பிரிவு மீண்டும் உருவாகாமல் இருக்க வேண்டுமானால் ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சிக்கு வராமலிருக்க வேண்டும் என்பதே உண்மை.
-சி.சி.என்– வீரகேசரி-