இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு டெல்லியில் தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்க உலகத் தலைவர்கள் பலரும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்தியா வந்துள்ளார். அவருடன் பெரும் பாதுகாப்புப் படையும் இந்தியா வந்துள்ளது.

அவர்களோடு கூடவே, அதிபர் ஜோ பைடன் தன்னுடன் அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்வதற்கான பெட்டியையும் அவர் தன்னுடன் கொண்டு வந்துள்ளார்.

ஆனால், உண்மையில் அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்வது தொலைக்காட்சி நிகழ்ச்சியை மாற்றுவதுபோல் அவ்வளவு எளிதானதல்ல.

முன்பு டிரம்ப் ஆட்சிக்காலத்தில் இந்த அணு ஆயுத பொத்தான் பேசுபொருளானது. ஆனால், உண்மையில் அமெரிக்க அதிபரிடம் இத்தகைய அணு ஆயுத பொத்தான் ஒன்று இல்லவே இல்லை. மாறாக, அமெரிக்க அதிபர் கையில் ‘அணு ஆயுத கால்பந்து’ இருக்கும்.
விளம்பரம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபோது நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்வது ஏதுவாக இருக்கும்.

அப்போது, பதவிக்காலம் முடிந்த அதிபர் பராக் ஒபாமாவுடன் வந்த ராணுவத்தைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர், டிரம்ப் பதவியேற்ற பிறகு அவருக்கு அருகில் சென்று நின்று கொண்டார்.

 

அதிபர் மாறியபோது, புதிதாகப் பதவியேற்ற அதிபருடன் சென்று நின்றுகொள்ளும் அந்த ராணுவ உதவியாளரின் கையில் ஒரு பெட்டி இருக்கும். அந்தப் பெட்டிதான் ‘நியூக்ளியர் ஃபுட்பால் (அணுஆயுத கால்பந்து)’ என அழைக்கப்படுகிறது.

அமெரிக்கா அணு ஆயுதத்தை ஏவ முடிவு செய்தால், அதைச் செயல்படுத்த அந்தப் பெட்டி தேவை. அது எப்போதும் அந்நாட்டு அதிபருக்கு அருகிலேயேதான் இருக்கும்.

கடந்த 2018ஆம் ஆண்டில் சி.என்.என் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ஒரு முன்னாள் உளவுத்துறை அதிகாரி, “அமெரிக்க அதிபர் கோல்ஃப் விளையாடும்போதுகூட, கையில் பெட்டியுடன் இருக்கும் அந்த ராணுவ உதவியாளரும் அதிபரைப் பின்தொடர்ந்தபடியே இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

அணு ஆயுத கால்பந்தில் என்ன உள்ளது?

இவ்வளவு முக்கியத்துவத்தோடு கையாளப்படும் அந்த அணு ஆயுத கால்பந்து பெட்டியில் என்ன இருக்கிறது என்பதை ஒருவர் பார்க்க நேர்ந்தால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சும். பேச்சு வழக்கில் கூறுவதைப் போல் அதில் அணு ஆயுதத்தை இயக்குவதற்கான பொத்தானோ, கடிகாரமோ இருக்காது.

அதற்குள் தகவல் தொடர்புக் கருவிகளும் போர்த் திட்டங்கள் அடங்கிய சில கோப்புகளும்தான் இருக்கும். விரைவாகத் திட்டமிடுவதற்கு ஏற்ற வகையில் அந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அமெரிக்காவின் அணு ஆயுதத்திற்கும் பிஸ்கட்டுக்கும் என்ன தொடர்பு?

அதிபர் எந்த நேரமும் தன்னிடம் வைத்திருக்க வேண்டிய, சங்கேத மொழி அடங்கிய அட்டையே ‘பிஸ்கட்’ எனப்படும்.

இந்த சங்கேத மொழி அட்டை, அணு ஆயுத கால்பந்துடன் தொடர்பற்றது. ஒருவேளை அணு ஆயுதத்தைப் பயன்படுத்த அதிபர் ராணுவத்திற்கு உத்தரவிடுகிறார் என்றால், அவர்களிடம் பேசுவது அதிபர்தான் என்பதை ராணுவத்தினரை புரிந்துகொள்ள வைப்பதற்கான சங்கேத வார்த்தைகளை ‘பிஸ்கட்’ எனப்படும் அந்த அட்டை கொண்டிருக்கும்.

முன்னாள் ராணுவ அதிகாரியான ராபர்ட் பஸ் பேட்டர்சன், தனது கால்சட்டை பாக்கெட்டுக்குள் தனது கடன் அட்டைகளுடன் ஒன்றாக வைத்திருந்த அந்த பிஸ்கட்டை முன்னாள் அதிபர் பில் கிளின்டன் தொலைத்துவிட்டதாகக் கூறினார்.

மோனிகா லெவன்ஸ்கீ விவகாரம் வெடித்த நாளன்று, அந்த அட்டையைத் தான் சில நாட்களாகப் பார்க்கவில்லை என்பதை கிளின்டன் ஒப்புக்கொண்டதாக பேட்டர்சன் கூறியிருந்தார்.

அணு ஆயுத தாக்குதலை அமெரிக்க அதிபர் எப்படித் தொடங்குவார்?

அமெரிக்காவில் அதிபர் பொறுப்பில் இருப்பவர் மட்டுமே அணு ஆயுதத் தாக்குதலைத் தொடங்க முடியும்.

அமெரிக்காவின் உச்சபட்ச ராணுவ அதிகாரியிடம் பேசுவது அதிபர்தான் என்று பிஸ்கட் அட்டையில் உள்ள சங்கேத மொழிகளின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பிறகு, அணு ஆயுத தாக்குதலுக்கு அதிபர் உத்தரவிடுவார்.

நெப்ராஸ்காவில் உள்ள ஆஃப்ட் விமானத் தளத்தில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும், அமெரிக்க ஸ்ட்ரேட்டஜிக் கமேண்ட் அலுவலகத்திற்கு அந்த உத்தரவு அனுப்பப்படும். பிறகு, அதைச் செயல்படுத்துபவர்களிடம் சங்கேத மொழிகள் மூலம் அந்த உத்தரவு அனுப்பி வைக்கப்படும்.

அதிபரின் உத்தரவை அவமதிக்கலாமா?

அமெரிக்காவின் அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் தலைமைத் தளபதி அதிபர்தான். சுருக்கமாகச் சொன்னால், அவர் என்ன சொல்கிறாரோ அது செயல்படுத்தப்படும். இருப்பினும், அவரது உத்தரவுகள் செயல்படுத்தப்படாமல் இருக்கவும் சில வாய்ப்புகள் உண்டு.

கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக, அணு ஆயுதத் தாக்குதல் நடத்த அதிபருக்கு இருக்கும் அதிகாரங்களை, அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் மறுபரிசீலனை செய்தது.

அமெரிக்க ஸ்ட்ரேட்டஜிக் கமாண்டின் முன்னாள் தலைவரான ராபர்ட் கேலர், அதிபரின் உத்தரவு சட்டபூர்வமானதாக இருந்தால் மட்டுமே “நான் அதைச் செயல்படுத்துவேன்” என்று காங்கிரஸ் முன்பாகக் கூறினார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version