பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி மீண்டும் இலங்கையை சர்வதேச கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது, கடந்த 5ஆம் திகதி சனல்4 வெளியிட்டிருக்கும் ஆவணப்படம், இரண்டு பிரதான சம்பவங்களை மையப்படுத்தியிருக்கிறது.
முதலாவது, 2019இல் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்கள்.
இரண்டாவது, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை.
இந்த இரண்டு பிரதான சம்பவங்களும், இடம்பெற்றது கொழும்பில் தான். ஆனால், இடம்பெற்ற காலப்பகுதிக்கு இடையில் ஒரு தசாப்தகால இடைவெளி இருக்கிறது.
ஆனால், இவையிரண்டையும், ஒன்றாகப் பொருத்தி- ஒரே ஆவணப்படத்துக்குள் சனல் 4 கொண்டு வந்திருப்பதற்கு, இரண்டு நிகழ்வுகளிலும் தொடர்புபட்டிருக்கின்ற தரப்புகள் ஒன்றாக இருப்பது தான் காரணம்.
முதல் தரப்பு, ராஜபக் ஷவினர்.
இரண்டாவது தரப்பு பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்.
மூன்றாவது தரப்பு இராணுவப் புலனாய்வுத்துறை.
இந்த மூன்று தரப்புகளும் தொடர்புடைய காட்சிகளை விவரித்து, கிட்டத்தட்ட 50 நிமிட ஆவணப்படுத்தை தயாரித்திருக்கிறது சனல் 4.
இலங்கையின் கொலைக்களங்கள், தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள், போர் தவிர்ப்பு வலயம்-, இலங்கையின் கொலைக்களங்கள் போன்ற பெயர்களில், இறுதிப் போர்க்கால மீறல்களை அம்பலப்படுத்தும் ஆவணப்படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சனல் 4, இப்போது, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறது.
இந்த காணொளியில் முக்கியமான சாட்சியங்களாக குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் இரண்டு பேர்.
பிள்ளையானின் ஊடகப் பேச்சாளராக இருந்து, கடந்த ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி, ஐரோப்பாவில் தஞ்சமடைந்துள்ள ஹன்சிர் அசாத் மௌலானா என்பவர் முதலாவது நபர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவில் முக்கியமான விசாரணையாளராகப் பணியாற்றி, கோட்டாபய ராஜபக் ஷவின் ஆட்சிக்கால த்தில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று ஐரோப்பாவில் புகலிடம் தேடியுள்ள நிசாந்த டி சில்வா இரண்டாவது நபர்.
இந்த இரண்டு பேரும் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியை விவரித்துக் கூறியிருக்கிறார்கள்.
இவர்கள் முதன் முதலாக ஊடகம் ஒன்றின் முன்பாக, இதுபற்றிப் பேசியிருக்கிறார்கள். அதுவும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் இவர்கள் பல இரகசியத் தகவல்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்த போது, கோட்டாபய ராஜபக் ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலகட்டத்தில், கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் லசந்த விக்கிரமதுங்க. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகப் போகின்ற போதும், அவரது படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை.
பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் கொலையாளிகள் கண்டறியப்பட்டு, தண்டிக்கப்படவில்லை.
கொழும்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட திரிபோலி என்ற இரகசிய முகாமில் இருந்தவர்கள் தான் இந்தப் படுகொலையை மேற்கொண்டனர் என முன்னர் தகவல்கள் வெளியான போதும், அவை உறுதிப்படுத்தப்படவில்லை.
மிக் போர் விமானக் கொள்வனவு ஊழல் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தியதால், லசந்த மீது கோட்டாபய ராஜபக் ஷ கடும் கோபமடைந்திருந்ததாகவும், உடனடியாக ஒரு உயர்மட்ட கொலைக் குழுவை உருவாக்கி லசந்தவைக் கொல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டார் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அசாத் மௌலானா.
அந்தச் சந்திப்பில் தாமும் இருந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான, நிசாந்த டி சில்வா அளித்துள்ள வாக்குமூலத்தில், லசந்த கொலை வழக்கை விசாரித்த போது, திரிபோலி முகாம் பற்றி அறிந்து கொண்டதாகவும், அதையடுத்து தனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கி றார்.
லசந்தவை படுகொலை செய்வதற்காக திரிபோலி முகாம் உருவாக்கப்பட்டது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ள போதும், அந்தப் படுகொலையில் அங்கிருந்த ஐவர் தொடர்புபட்டிருந்தனர் என்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ள போதும், படுகொலையில் ஈடுபட்ட நபர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
அதிகாரத்தில் உள்ள தரப்பினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ முன்னெடுக்கப்படக் கூடிய குற்றச் செயல்களை கண்டறிவது கடினமானது. கண்டுபிடிக்கப்பட்டாலும், அதுபற்றி துப்புத்துலக்கி குற்றவாளியை நெருங்குவது சாத்தியமில்லை என்பதை நிரூபித்திருக்கிறது இந்தப் படுகொலை.
இந்தப் படுகொலை நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையின் போது தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் வெடித்த குண்டுகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் பல தகவல்களையும் வெளியிட்டிருக்கிறது சனல் 4.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், நாட்டின் பாதுகாப்பு சூழல் முற்றாக மாறியது. பாதுகாப்பற்ற நிலையில் நாடு இருப்பதாக தோற்றப்பாடு உருவானது. அதன் விளைவாக, மீண்டும் ராஜபக்ஷவினர் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
அதன்பின், சிங்கள பௌத்த மக்களின் தலைவராக கோட்டாபய ராஜபக்ஷ எழுச்சி பெற்றார். நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக அவர் தெரிவானார்.
ஆனாலும் அவரால், இரண்டரை ஆண்டுகள் தான் பதவியில் இருக்க முடிந்தது.
இவ்வாறான நிலையில் தான், அவரை ஆட்சியில் அமர்த்துவதற்காகவே ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என சனல் 4 ஆவணப்படத்தில் தெரிவித்திருக்கிறது.
இதில் முக்கியமான சாட்சி அசாத் மௌலானா தான்.
2015 இல் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான சூழலில் ராஜபக்ஷவினரும், அவர்களுக்கு உதவியாகச் செயற்பட்ட பிள்ளையான் தரப்பினரும், ராஜபக்ஷ வினருக்கு விசுவாசமாக செயற்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவினரும் நெருக்கடிக்குள்ளாகினர்.
பல்வேறு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது, இரகசியங்கள் பல வெளிப்படும் நிலை உருவானது
அந்தக் கட்டத்தில் தான், கோட்டாபய ராஜபக் ஷவை அதிகாரத்துக்கு கொண்டு வரும் சதித் திட்டம் உருவானதாக கூறுகிறார் அசாத் மௌலானா.
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் திட்டம் ஓரிரண்டு நாட்களுக்கு முன்னர் தயாரானது அல்ல, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த சதித் திட்டத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த- தற்போது, அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக உள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயையும், சஹ்ரான் தலைமையிலான தற்கொலைக் குண்டுதாரிகளையும், ஒன்றிணைக்கும் வேலையை முன்னெடுத்தோம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
புத்தளம் வனாத்தவில்லு, கரடிப்புல் பிரதேசத்தில் சஹ்ரான் தரப்பினருடன், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சந்தித்துப் பேசியது தொடக்கம், குண்டுதாரி ஒருவர் தப்பிச் செல்வதற்கு உதவியது வரை தனது பங்கையும் அசாத் மௌலானா விவரித்துக் கூறியிருக்கிறார்.
அவரின் தகவல்களின்படி, இந்த விபரங்கள் பல வெளியே கசியத் தொடங்க, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் குண்டுத் தாக்குதலில் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு உள்ள தொடர்பை விபரிக்க, அசாத் மௌலானாவின் மீது சுரேஷ் சலேவுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.
அந்தச் சந்தேகம் தொடர்பாக பிள்ளையானிடம் முறையிட அவருக்கும் அந்தச் சந்தேகம் வந்திருப்பதை உணர்கிறார் அவர். அதன் பின்னர் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என உணர்ந்து, வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்கிறார்.
அங்கு தான் அவர் ஐரோப்பிய புலனாய்வு அமைப்புகளிடமும், ஐ.நாவிடமும் பல இரகசிய வாக்குமூலங்களை அளித்திருக்கிறார்.
அவ்வாறு அளிக்கப்பட்ட வாக்குமூலங்களில் ஒருபகுதி தான், இப்போது சனல் 4 ஆவணப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது.
ராஜபக் ஷவினர் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டது என்பதே இந்த ஆவணப்படத்தின் அடிப்படைக் குற்றச்சாட்டு.
இந்த ஆவணப்படத்தில் உள்ள பல விடயங்கள் கோர்வைகளாக ஒத்துப் போகின்றன. சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும், அவற்றை நிரூபிக்கக் கூடிய சான்றுகள் முன்வைக்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுகளை பிள்ளையான் மறுத்திருக்கிறார். அசாத் மௌலானா பொய் கூறுவதாகவும், ஐரோப்பாவில் தஞ்சம் பெறுவதற்காக அவர் இதனைக் கூறியிருப்பதாகவும், அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கோட்டாபய ராஜபக் ஷவும் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருப்பதுடன், சஹ்ரான் தரப்பினருடன் சந்திப்புகளை மேற்கொண்டதாக அசாத் மௌலானா குறிப்பிட்ட காலப்பகுதிகளில் தாம் மலேஷியாவில் பணியாற்றியதாகவும், இந்தியாவில் பயிற்சி நெறியில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
நாமல் ராஜபக் ஷ பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, சனல் 4 ராஜபக் ஷவினரின் மீது பரம்பரைப் பகையை வெளிப்படுத்தியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
2005இல் இருந்து சனல் 4 ராஜபக் ஷ வம்சத்துக்கு எதிராக அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுகிறது என்பது – ராஜபக் ஷ குடும்பத்தின் குற்றச்சாட்டு.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை இலக்கு வைத்து இவ்வாறான ஆவணப்படங்கள் வெளியிடப்படுவதாக மற்றொரு குற்றச்சாட்டு.
இப்படியே சனல் 4 ஆவணப்படத்தை பொய்யானது, திரிபுபடுத்தப்பட்டது என்று கிழித்து தொங்கவிடும் வேலையையும், சனல் 4 ஆவணப்படத்துக்கு எதிரான போராட்டங் களை தூண்டி விடும் வேலையையும் ஒரு தரப்பினர் முன்னெடுக்கின்றனர். சனல் 4 ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை யாரும் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஏனென்றால் இது ராஜபக் ஷவினருடன் மாத்திரம் தொடர்புடையது அல்ல, இராணுவப் புலனாய்வுப் பிரிவுடனும் தொடர்புபட்டது.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை நேர்மை யான அதிகாரி என்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ, ஆனால் சரத் பொன்சேகாவோ, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் சுரேஷ் சலே ஈடுபட்டுள்ளார் என தான் நம்புவதாகவும், அவர் ராஜபக் ஷக்களின் கழிவறைகளை கழுவியவர் என்றும் கூறியிருக்கிறார்.
இவ்வாறான நிலையில், சனல் 4 கிளப்பி விட்டுள்ள சர்ச்சைகள் இப்போதைக்கு ஓயப் போவதில்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மாத்திரமன்றி, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல்களிலும் இந்தக் குண்டின் அதிர்வுகள் எதிரொலிக்கப் போவது நிச்சயம்.