நியூயார்க்: அமெரிக்க மரைன் கார்ப்ஸுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான சக்தி வாய்ந்த போர் விமானம் ஒன்று காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு கரோலினாவில் வழக்கமாக அமெரிக்க மரைன் கார்ப்ஸ் படையினர் போர் விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரிவுகளில் ஒன்றுதான் இந்த மரைன் கா்ப்ஸ் பிரிவு. இவர்கள் கடற்படையினருக்கும், விமான படையினருக்கும் இடையே செயல்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பட்ட விபத்திலிருந்த தப்பிக்க மரைன் கார்ப்ஸ் விமானி விமானத்திலிருந்து அவசர எக்ஸிட் மூலமாக வெளியேறி பாராசூட் உதவியுடன் பத்திரமாக தரையிறங்கினார். இதுவரை எல்லாம் ஓகே.

ஆனால் தரையிறங்கிய விமானி திரும்பி பார்த்தபோதுதான் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இவர் ஓட்டி வந்த Lockheed Martin F-35 Lightning II ஜெட் விமானம் காணவில்லை.

 

பொதுவாக இது போன்ற சமயங்களில் விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறிவிடும். ஆனால் விமானி தரையிறங்கிய இடத்தில் இதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை.

விமானி தனது ராணுவ தளத்திற்கு தகவல் கொடுத்து உனடியாக விமானத்தை தேட தொடங்கியுள்ளார்.

ஆனால் விமானம் காணாமல் போய் 24 மணி நேரம் ஆன பின்னரும் கூட அதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த Lockheed Martin F-35 Lightning II விமானம் ஐந்தாம் தலைமுறையை சேர்ந்ததாகும். அதிநவீன கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இது மணிக்கு 1,228 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடியதாகும்.

மறைந்திருந்து ரேடார் கண்ணில் மண்ணை தூவி தாக்கும் வகையில் இந்த விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இப்படி பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்ட இந்த விமானம்தான் தற்போது காணாமல் போயுள்ளது.

இதனை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என்று ராணுவம் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.

அதேபோல விமானி பாதுகாப்பாக வெளியேறிய பகுதியில் இருக்கும் நீர் நிலைகளிலும் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற எம்பி ஒருவர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

எவ்வித கண்காணிப்பு கருவியும் இல்லாமல் விமானத்தை தொலைத்துவிட்டு வந்து பொதுமக்களிடம் அதை கண்டுபிடித்து தருமாறு எப்படி கேட்க முடிகிறது? என்று நான்சி மேஸ் எனும் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விமானத்தை தரையிறக்கவும், பறக்க வைக்கவும் மிகவும் குறைவான தூரமே போதுமானதாகும். அதேபோல இது எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும்.

இதன் விலை ரூ.665 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version