கூலிப்படைத் தலைவனாகச் செயல்பட்ட குள்ள விஸ்வா கடந்த 16-ம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது, `குள்ள விஸ்வாவிடம் கையெழுத்து வாங்கவா அல்லது சுடவா’ என போலீஸ் எஸ்.ஐ ஒருவர் போனில் பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள கிளாய் கிராமம், பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் என்கிற குள்ள விஸ்வா.
இவர்மீது ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், மணிமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் ஐந்து கொலை வழக்குகள், நான்கு கொலை முயற்சி வழக்குகள், 16 கொள்ளை வழக்குகள் உட்பட 25 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
தலைமறைவாக இருந்து வந்த ரௌடி விஸ்வாவைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, சோகண்டி கிராமம் அருகேயுள்ள மாந்தோப்பில் விஸ்வா பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு கடந்த 16-ம் தேதி ரகசியத் தகவல் கிடைத்தது.
உடனடியாக தனிப்படை போலீஸார் அங்குச் சென்று விஸ்வாவைச் சுற்றிவளைத்தனர். அப்போது மறைத்துவைத்திருந்த கத்தியால் தலைமைக் காவலர்கள் வாசுதேவன்,
ராஜேஷ் ஆகியோரை விஸ்வா வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். அதைப் பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் முரளி, துப்பாக்கியால் விஸ்வாவை நோக்கிச் சுட்டார்.
துப்பாக்கி குண்டுகள் விஸ்வாவின் உடலில் துளைத்தன. சுருண்டு கீழே விழுந்த விஸ்வாவை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீஸார் தூக்கிச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வா உயிரிழந்துவிட்டார்.
விஸ்வா என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்து ஏ.டி.ஜி.பி அருண், டி.ஐ.ஜி பொன்னி, எஸ்.பி சுதாகர் உள்ளிட்டோர் நேரில் வந்து விசாரித்தனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த காவலர்கள் வாசுதேவன், ராஜேஷ் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களையும் ஏ.டி.ஜி.பி அருண் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், ரௌடி விஸ்வா தரப்பு ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோ, காவல் நிலையத்துக்குள் எடுக்கப்பட்டிருக்கிறது.
சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் போனில் பேசுகிறார். அந்த சப்-இன்ஸ்பெக்டர், `ரௌடி விஸ்வாவிடம் கையெழுத்து வாங்கவா அல்லது சுட்டுவிடவா?’ என்று போனில் யாரிடமோ கேட்கிறார்.
இந்த வீடியோ ஆதாரத்துடன் கடந்த 28.8.2023-ம் தேதி ரௌடி விஸ்வா, கூடுதல் தலைமைச் செயலாளர், காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு புகார் ஒன்றை அனுப்பிவைத்திருக்கிறார்.
மனு
அதில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த 8.8.2021 முதல் 8.9.2022-ம் தேதி வரை அடைக்கப்பட்டிருந்தேன்.
அப்போது ஒரு வழக்கில் பிடிவாரன்டில் ஸ்ரீபெரும்புதூர் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ரிமாண்ட் செய்யப்பட்டேன்.
இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பிணை பெற்றேன். நான் சிறையை விட்டு வெளியே வந்தவுடன் காவல் நிலையத்தில் கையெழுத்து போடவில்லை.
எனது பிணை மனுவை ரத்து செய்யச் சொல்லி காவல்துறையினர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி வழக்கு போட்டனர்.
நான் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி முதல் சிவகங்கையில் தங்கி அந்தக் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தேன்.
ஆனாலும் எனது பிணை மனு ரத்துசெய்யப்பட்டது. அதை எதிர்த்து நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன்.
எனது வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், நான் தினமும் காலை 10:30 மணிக்கும், மாலை 5:30 மணிக்கும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் நகல் கோரி எனது வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சில காரணங்களால் அந்த நகல் 24-ம் தேதி அன்று கிடைத்தது.
காவல் நிலையத்தில் குள்ள விஸ்வா
அந்த நகலை வழக்கறிஞரிடமிருந்து நான் 26-ம் தேதி பெற்றுக்கொண்டேன். நீதிமன்ற உத்தரவின்படி நான் 27-ம் தேதி அன்று காலை 10:20 மணிக்கும் மாலை 5:30 மணிக்கும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டேன்.
28-ம் தேதி அன்று காலை 10:20 மணிக்கு நான் கையெழுத்திட சென்றபோது என்னிடம் கையெழுத்து வாங்காமல் காவல்துறையினர் என்னை காவல் நிலையத்துக்குள் நிறுத்திவைத்தனர்.
காவல் நிலையத்தில் ஆய்வாளர் சொன்னால்தான் கையெழுத்து வாங்குவோம் என நிறுத்திவைத்தனர்.
காவல்துறையினரின் சிறப்புப் படையினர் என்னிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் மதியம் 12 மணியளவில் காவல் ஆய்வாளரிடம் பேசிய சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்ன செய்வது என்று கேட்டார்.
அப்போது அவர் கையெழுத்து வாங்கவா ‘சுட்டு விடவா’ என்று கேட்டார். இதனால் நான் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன். தயாளன், ஆய்வாளர் பரந்தாமனிடம் பேசிய வீடியோ ஆதாரம் இருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நான் கையெழுத்திடச் சென்றபோது என்னிடம் கையெழுத்து வாங்காமல் என்னைச் சுட்டு விடலாமா… என சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் ஆய்வாளரிடம் பேசியதிலிருந்து என்னை ஆய்வாளர் என்கவுன்ட்டரில் சுட திட்டமிட்டிருப்பதாக அஞ்சுகிறேன்.
எனவே, என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பரந்தாமன், சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் உள்ளிட்ட காவல்துறையினரே பொறுப்பு என்பதை இந்தக் கடிதத்தின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே, என்னை போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலைசெய்ய ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பரந்தாமன், சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் திட்டமிட்டிருப்பது தொடர்பாக தக்க விசாரணை நடத்த வேண்டுகிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது குள்ள விஸ்வா என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு இந்தக் கடிதமும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “கூலிப்படைத் தலைவனாகச் செயல்பட்ட குள்ள விஸ்வா தொடர்பான வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
மேலும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடமும் இது குறித்து விசாரணை நடந்துவருகிறது. அதே நேரத்தில் என்கவுன்ட்டர் சம்பவத்துக்கும் இந்த வீடியோவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்றார்.
என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடக்கும்போது எல்லாம் சர்ச்சைகள் வருவது வழக்கமான ஒன்றுதான். அதைப்போல குள்ள விஸ்வா என்கவுன்ட்டரிலும் வீடியோ, மனு என ரௌடி தரப்பிலிருந்து பகிரப்பட்டு வருவதாக தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.