கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரப் போகிறாரா? இந்தக் கேள்வி கடந்த வாரம் அரசியல் வட்டாரங்களில் பரவலாக காணப்பட்டது.
இந்த விடயத்தை மையப்படுத்திய செய்திகள் பலவும், ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
அதற்கு முக்கியமான காரணம், மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக தொழிலதிபர் திலித் ஜயவீர பொறுப்பேற்றிருப்பது தான்.
திலித் ஜயவீர
அச்சு, இலத்திரனியல் ஊடக நிறுவனங்களைச் சொந்தமாக கொண்ட, திலித் ஜயவீர அரசியலுக்கு வரப் போகிறார் என்பது புதிய தகவல் அல்ல. அதற்கான முன்னேற்பாடுகளை அவர் பல காலமாகவே மேற்கொண்டு வந்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னோடியாக, அவர் கடந்த ஏப்ரல் மாதம், யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்திருந்தார்.
இப்போது அவர், ஹேமகுமார நாணயக்காரவின் தலைமையில் இருந்த மௌபிம ஜனதா கட்சியின் உரிமையை வாங்கி, அதன் தலைவராக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
திலித் ஜயவீர, கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய சகாக்களில் ஒருவராக இருந்தவர்.
கோட்டாபய ராஜபக் ஷ, 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னரே, தன்னை முன்னிலைப்படுத்தக் கூடிய துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய ‘வியத்மக’ மற்றும் ‘எலிய’ போன்ற அமைப்புகளை நிறுவியிருந்தார். திலித் ஜயவீரவும், வியத்மகவில் முக்கிய பங்காற்றிய ஒருவர்.
அவர் 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக் ஷவின் வெற்றிக்குத் துணை நின்றதுடன், அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் எடுத்த பல முடிவுகளுக்குப் பின்னாலும் இருந்தவர்.
அவ்வாறான ஒருவர், மௌபிம ஜனதா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதை அரசியல் வட்டாரங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.
திலித் ஜயவீரவின் அரசியல் நுழைவுக்குப் பின்னால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருக்கலாம் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது.
திலித் ஜயவீர பணபலம் கொண்டவர். அது அரசியலுக்கு முக்கியமானது. ஆனால், வெறும் பணபலத்தைக் கொண்டு மாத்திரம் அரசியலில் வெற்றி பெற்று விட முடியாது.
ஹெட்டிகொட குழுமத்தின் தலைவராக இருந்த விக்டர் ஹெட்டிகொட, 2005 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். அவரால் வெற்றிபெற முடியவில்லை.
திலித் ஜயவீரவைப் போலவே, தனக்கென ஊடக கட்டமைப்பையும் உருவாக்கி அரசியலில் நிலைபெறும் இலக்குடன் முன்னேறியவர் இலங்கையின் பெரும் பணக்காரர் என்று அறியப்பட்ட உபாலி விஜேவரத்தன.
அவர் நிதியமைச்சராக நியமிக்கப்படவிருந்த நிலையில், விமான விபத்து ஒன்றில் காணாமல் போனார்.
அவர் உயிருடன் இருந்திருந்தால், 1988 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருக்கவும் கூடும்.
திலித் ஜயவீரவைப் பொறுத்தவரையில், பணபலம், ஊடக பலம் ஆகியவற்றுடன் அரசியலில் வெற்றி பெறலாம் என்று எதிர்பார்க்கவில்லை.
அவர், கோட்டாபய ராஜபக் ஷவுக்கு பின்னால் உள்ள ஆதரவுப் புலத்தையும், ராஜபக் ஷவினருக்கு எதிராக உள்ள அலையையும் பயன்படுத்த முனைகிறார்.
இங்கு தான் அவர் நுணுக்கமான அரசியலை முன்னெடுக்கிறார். கோட்டாபய ராஜபக் ஷ ஆட்சியில் இருந்த போது அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிகளில், திலித் ஜயவீரவும் அங்கம் வகித்திருந்தார்.
அவர் கோட்டாபய ராஜபக் ஷ உருவாக்கிய வியத்மகவைப் போலவே, தனக்கு ஆதரவு அளிக்க கூடிய துறைசார் நிபுணர்களின் அணியொன்றை உருவாக்கி வருகிறார்.
அவர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை நடத்துகிறார். அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதன் மூலம் நிபுணத்துவ அரசியலை முன்னெடுக்கலாம் என்று திலித் ஜயவீரவும் நம்புகிறார்.
ஆனால், நிபுணத்துவ ஆலோசனை என்பது அரசியலுக்குத் தேவையே தவிர, நிபுணத்துவ அரசியல் நடைமுறையில் சிக்கலானது.
ஜனவசிய அரசியல் தான் முக்கியமானது, முதன்மையானது. கோட்டாபய ராஜபக் ஷ நிபுணத்துவ அரசியலை முன்னெடுக்க முயன்றாலும், ஈஸ்டர் தாக்குதல் விளைவும், புலிகளைத் தோற்கடித்தவர் என்ற ஹீரோ அந்தஸ்தும், அவருக்கு ஜனவசியத்தை ஏற்படுத்தியது.
அந்த அரசியல் தான் அவரது பிரமாண்ட வெற்றிக்கு காரணமாக அமைந்தது. தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்ட விடயத்திலும் கோட்டா தவறிழைத்தார்.
தவறான ஆலோசனைகளை நம்பினார், அதன் வழி முடிவு களை எடுத்தார். அதனால் அவரால் இடைநடுவிலேயே பதவியை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது.
கோட்டாபய ராஜபக் ஷவுக்கு ஏற்பட்ட அந்த நிலையை ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ முடியாத நிலைக்கு உள்ளாகியிருந்தவர் திலித் ஜயவீர.
கடந்த ஆண்டு அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியில், கோட்டாபய ராஜபக் ஷவை அழித்தது ராஜபக் ஷவினரே என்று குற்றம்சாட்டியிருந்தார்.
மஹிந்த, பசில், நாமல் உள்ளிட்ட ராஜபக் ஷ குடும்பத்தினர், கோட்டாவின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்தனர் என்றும், அவரை சுயாதீனமாக இயங்கவிடவில்லை என்றும், அந்தச் செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை, கோட்டாபய ராஜபக் ஷவின் வெற்றிக்கு துணையாக இருந்த திலித் ஜயவீர, அவர் மீது விமர்சனங்களை முன்வைக்கவும் தவறவிலலை.
மக்களின் ஆணையைப் புறம்தள்ளினார் என்றும், நன்றிக்கடன் காரணமாக அவரால் குடும்பத்தினரின் சொல்லை மீறி ஆக்கபூர்வமாக செயற்பட முடியவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால், ராஜபக் ஷவினரோ, திலித் ஜயவீர மீது குற்றம்சாட்டியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி செயலணிகளில் அங்கம் வகித்த சில ஊடகங்களின் பிரதானிகளே, சேதனப் பசளை திட்டம் குறித்து கோட்டாபய ராஜபக் ஷவுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கினர் என்று சசீந்திர ராஜபக் ஷ குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு, கோட்டாபய ராஜபக் ஷ ஆட்சியில் இருந்த போதே முன்வைக்கப்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
கோட்டாவின் சகாவாக அறியப்பட்ட – அதேவேளை, ராஜபக் ஷ குடும்பத்தினரால் விமர்சிக்கப்பட்ட அல்லது வெறுக்கப்பட்ட திலித் ஜயவீர, அரசியலுக்கு வந்திருப்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்.
ஒரு தரப்பினர் அவர் கோட்டாவின் பதிலியாக அரசியலில் களமிறங்குகிறார் என்று கருதுகின்றனர். கோட்டாவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கம் அவருக்கு இருப்பதாக அவர்கள் அனுமானிக்கிறார்கள்.
இன்னொரு தரப்பினர், ராஜபக் ஷவினரின் வெற்றியை பாதிக்கும் உத்தியாக அவர் அரசியலுக்கு வருவதாக கருதுகின்றனர். ராஜபக் ஷவினரின் வாக்கு வங்கியில் இருந்து கோட்டாவுக்கு ஆதரவான வாக்குகளை பிரித்தெடுப்பது இவரது நோக்கம் என அவர்கள் ஊகிக்கிறார்கள்.
மற்றொரு தரப்பினர், ராஜபக்ஷவினரை வீழ்த்துவதற்கு, அவர்களின் வாக்கு வங்கியை உடைப்பதற்கு திலித் ஜயவீரவை ஒரு தரப்பினர் பயன்படுத்துகின்றனரோ என்று சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், திலித் ஜயவீரவின் அரசியல் நுழைவைப் பற்றி பொதுஜன பெரமுனவின் தரப்பில் இருந்து கருத்து வெளியிடப்படாவிடினும், கோட்டாவின் மீள் அரசியல் பிரவேசத்தை அவர்கள் விரும்பவில்லை என்பது வெளிப்படையாக உள்ளது.
பொதுஜன பெரமுனவினர் ராஜபக்ஷ விசுவாசிகளாக இருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் மஹிந்தவின் விசுவாசிகளாகவே இருக்கிறார்கள்.
கோட்டா மீண்டும் அரசியலுக்கு வருவது கேலிக்கூத்து என்று விமர்சித்திருக்கிறார் எஸ்.எம்.சந்திரசேன. இதுதான் ராஜபக்ஷவினரதும், மொட்டு கட்சியினதும் நிலைப்பாடு.
கோட்டாவுக்கு கிடைத்த 69 இலட்சம் வாக்குகள் அவருக்கான ஆணை அல்ல, அது மஹிந்தவுக்காக அளிக்கப்பட்ட வாக்குகள் என்று குறிப்பிட்டிருந்தார் எஸ்.எம்.சந்திரசேன.
இதன் மூலம் கோட்டாவின் அரசியல் வருகையை ராஜபக் ஷ குடும்பத்தினரோ- பொதுஜன பெரமுனவினரோ விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
அவ்வாறு அவர் மீண்டும் உள்ளே வந்தால் தங்களின் வாக்கு வங்கி உடையும் என்ற அச்சம் அதற்கு காரணமாக இருக்கலாம். அவ்வாறான பயத்தை ராஜபக்ஷவினருக்கு ஏற்படுத்துவது கூட எதிர்க்கட்சியினரின் வியூகமாக இருக்க கூடும்.
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், கோட்டாவை முன்னிலைப்படுத்திக் கொண்டு, திலித் ஜயவீரவினால் அரசியலில் நிலைபெற முடியாது. அவர் கோட்டாவைப் பயன்படுத்த முயன்றால், அது அவருக்கே ஆபத்தாக முடியும். அதேவேளை, கோட்டா அவரைப் பயன்படுத்த முயன்றால், அது ராஜபக்ஷ குடும்பத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த இடத்தில் திலித் ஜயவீர, எந்த நிலைப்பாட்டில் முன்னகரப் போகிறார் என்பதைப் பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.
-சத்ரியன்–