இருக்கும்போது பாடப்பட்ட வசை இறந்தபின் தெரிவிக்கப்பட்ட வருத்தம்
நான்கு இளைஞர்களும் “வணக்கம் ஐயா’ என்றதும் பதில் வணக்கம் சொன்னார மேயர் அல்பிரட் துரையப்பா.
அதுவே அவரது இறுதிவணக்கமும் ஆனது. துரையப்பா என்ன நடக்கப்போகின்றது என்று நிதானிப்பதற்கிடையிலேயே இளைஞர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டார்.
மார்பில் ரவைகள் பாய இரத்த வெள்ளத்தில் விழுந்தார் யாழ்.மேயர்.
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் தொண்டைக்குழாய்களால் தினமும் பிரசார மேடைகளில் சுடப்பட்டுக்கொண்டிருந்த துரையப்பாவின் கதையை இறுதியாக கைத்துப்பாக்கி முடித்து வைத்தது.
1975 ஆம் ஆண்டு ஜுலை 27 ஆம் திகதி துரையப்பா உயிரிழந்த செய்தி காட்டுத் தீயாக நாடெங்கும் பரவியது. அப்போது பிரதமராக இருந்தவர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா. செய்தி கேட்டு அவர் துடித்துப் போனார்.
உடனடியாக கொலையாளிகளை கண்டுபிடிக்குமாறு அரசு உத்தரவிட்டது.அப்போது யாழ்ப்பாணத்தில் பொலிஸ்துறையில் தமிழ் அதிகாரிகள் தான் துப்புத்துலக்குவதில் பிரபலமானவர்களாக இருந்தனர்.
இன்ஸ்பெக்டரகள்; பஸ்தியாம்பிள்ளை , பத்மநாதன் , தாமோதரம்பிள்ளை ஆகியோர் முக்கியமானவர்கள்.
பொலிசாரின் சந்தேகப் பார்வையில் முதலில் விழுந்தவர்கள் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் தான்.
இறுதிச்சடங்கின் முன்னர் கொலையாளிகளை வளைத்துப் பிடித்துவிடவேண்டும் என்று பொலிஸ் தீவிரமாகியது.
“கொலையாளிகள் யார்?|| யாழ்ப்பாணம் எங்கும் வலைவீசித் தேடல் நடந்தது.
அந்த நான்கு இளைஞர்கள் யார் என்று நாடே அறியாத இரகசியத்தை அறிந்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் தான் கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்கள். அவர்களே இலக்கை அடையாளம் காட்டினார்கள். அவர்கள் தான் அந்த இலக்கை அழித்தவர்களையும் அறிந்து வைத்திருந்தார்கள்.
குறிப்பாக தலைவர் அமிர்தலிங்கம் அந்த நான்கு இளைஞர்களதும் வரலாற்றை ஆதியோடு அந்தம் வரை அறிந்தவர்.
நான்கு இளைஞர்களில் ஒருவரான பிரபாகரனை ‘தம்பி’ வாஞ்சையோடு அழைத்துப் பேசுவார் அமிர். அப்போது பிரபாகரனுக்கு ‘தம்பி’, ‘கரிகாலன்’ போன்ற பெயர்கள் வழங்கி வந்தன.
‘துரோகி துரையப்பா’ என்று எதுகைமோனையோடு, சந்தநயத்தோடு தமிழர் விடுதலைக் கூட்டணியால் வசைபாடப்பட்டபோதும் யாழ்ப்பாணத்தில் அவருக்கென்றும் கணிசமான செல்வாக்கு இருந்தது.
கூட்டணி எதிர்ப்பாளர்கள் மற்றும் அவரால் வேலைவாய்ப்புப் பெற்ற இளைஞர், யுவதிகள்,சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களில் கணிசமானோர் துரையப்பாவை ஆதரித்தவர்களில் அடங்கியிருந்தனர்.
சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் அப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழீழக் கோரிக்கை குறித்து அச்சத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
இடது,வலது என்று பிரிந்திருந்தபோதும் சகல கம்யூனிஸ்ட் கட்சிகளுமே தமிழீழக் கோரிக்கையை எதிர்த்துக் கொண்டிருந்தன.
“ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை?’ என காசி ஆனந்தன் கவிதை எழுதியிருந்தாரல்லவா?
ஆண்ட பரம்பரை என்பது உயர்சாதியினரைத் தான் குறிக்கும்.அவர்கள் மீண்டும் ஆள வந்தால் நீங்கள் சிரட்டையில் தான் தேநீர் குடிக்கவேண்டும்.கைகட்டி வாய் பொத்தி நிற்கவேண்டியிருக்கும் என்றெல்லாம் கம்யூனிஸ்ட்டுக்கள்|| என்று தம்மை அழைத்துக் கொண்டவர்கள் விளக்கம் சொன்னார்கள்.
காங்கேசன்துறைத் தொகுதி எம்.பி.பதவியைத் துறந்து தமிழ்ஈழக் கோரிக்கையை முன் வைத்து அமரர் தந்தை செல்வநாயகம் (தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்) போட்டியிட்டபோது ஒரு தமிழர் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார்.
அவர் தான் சமீபத்தில் கனடாவில் காலமான கம்யூனிஸ்ட் ||வி.பொன்னம்பலம்.
தந்தை செல்வநாயகத்தை செவிடன் என்றெல்லாம் திட்டித் தீர்த்தார்கள் கம்யூனிஸ்ட்கட்சியினர். அப்போது வெளிவந்துகொண்டிருந்த “தினபதி|| பத்திரிகை கூட்டணியினரை கேலி செய்தும் கிண்டல் செய்தும் எழுதியது.
அதனால் தமிழர்களுக்கு எதிரான பத்திரிகை என்று யாழ்ப்பாணத்தில் “தினபதிகருதப்பட்டது.
அனைத்தையும் மீறி தந்தை செல்வா காங்கேசன்துறை இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டினார்.
எனினும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களிடம் கம்ய+னிஸ்ட்டுக்கள் தீவிரமாகப் பணியாற்றியதால் அவர்களிடம் தமிழீழக் கோரிக்கை குறித்து அச்சம் நிலவியது.
சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து பலருக்கு துரையப்பா கூட்டுறவுச் சங்கங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
துரையப்பாவின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பலர் கண்ணீர் விட்டுக் கதறினார்கள்.
தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் துரையப்பா மறைவுக்கு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
கூட்டணி கண்டனம்
“கொலைக்கு காரணமானவர்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக|| தெரிவித்து அகிம்சை வழியே தம் வழி என்று சொல்லிக் கொண்டனர்.
கூட்டணி மீதும் தலைவர் தளபதி அமுதர் மீதும் இருந்த தீவிர நம்பிக்கையால் கூட்டணியினரது அறிக்கையை ‘சாணக்கிய தந்திரம்| என்று இளைஞர்கள் நினைத்தனர்.
விசாரணைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசாரால் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மட்டுமே கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள்.
ஒருவர் கலாபதி, மற்றவர் கிருபாகரன். பிரபாகரனும் பற்குணராஜாவும் கைது செய்யப்படவில்லை.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது கொழும்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழர்விடுதலைக் கூட்டணியில் சட்டத்தரணிகளாக இருந்த தலைவர்களில் அநேகமாக எல்லோருமே சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரானார்கள்.
அவர்களில் முக்கியமானவர்கள் அமரர் ஜி.ஜி.பொன்னம்பலமும் அமரர் திருச்செல்வமும்.
குற்றவாளிக்கூண்டில் நின்ற இளைஞர்கள் சிலர் தமது சட்டையில் உதயசூரியன் ‘பட்ஜ்’ அணிந்திருந்தனர். அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னம்.
தமிழ்ஈழ சுதந்திரக் கொடியாகவும் உதயசூரியன் கொடியை கூட்டணி அறிவித்தது.
பெப்ரவரி 4ஆம் திகதி சிங்கக்கொடிகளை ஏற்றுங்கள் என்று அரசு அறிவிக்கும்.
‘அன்று இல்லங்கள் தோறும் உதயசூரியன் கொடியை ஏற்றி சுதந்திர தாகத்தை வெளிப்படுத்துங்கள’; என்று தமிழர் விடுதலைக் கூட்டணி ஆணையிடும்.
அது சுதந்திரக் கொடியாக நீடித்ததோ இல்லையோ தேர்தல்களில் கூட்டணியின் சின்னமாக இன்றுவரை இருக்கின்றது.
வாக்காளர்கள் சுலபமாக கூட்டணியின் சின்னத்தை இனம் காணவும் கொடி ஏற்றங்களும் ‘பட்ஜ்’ அணிதல்களும் மிக வசதியாகப் போய்விட்டன.
தேர்தல் சின்னத்தையே தேசியக் கொடி என்று அறிவித்து பிரபலப்படுத்திய கூட்டணித் தலைவர்களது விவேகத்தை இப்போது கூட மெச்சத் தோன்றுகின்றது.
அது மட்டுமல்ல, துரையப்பா கொலை வழக்கையே பாரிய பிரசாரமாகவே மாற்றியமைத்துவிட்டனர் கூட்டணியினர்.
மறுபுறம், ‘எங்களைக் காக்க கூட்டணியினர் இருக்கின்றார்கள். சட்டம் எதுவும் செய்ய இயலாது’ என்ற நம்பிக்கையும் தீவிரவாத இளைஞர்களிடம் ஏற்பட்டது.
“நீங்கள் செய்யுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்|| என்ற மறைமுகச் செய்தியும் துரையப்பா கொலை வழக்கில் அணி அணியாக ஆஜரான சட்டத்தரணிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது எனலாம்.
தமிழ் ஈழம் ஒரு தனிநாடு. இறைமையுள்ள நாடு. ஸ்ரீலங்கா சட்டங்கள் அதனைக் கட்டுப்படுத்த முடியாது என்று ஆதாரங்களை அள்pளி வைத்து வாதாடியவர் திருச்செல்வம்.
திருச்செல்வம் பற்றிய ஒரு சுவையான குறிப்பு-
1972 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு பிரதியமைச்சர் சோமவீர சந்திரசிறி விஜயம் செய்தார்.அவரது காருக்கு குண்டு வீசப்பட்டது. வீசியது சிவகுமாரன்.
அதனைத் தொடர்ந்து சிவகுமாரன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் மல்லாகம் மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சிவகுமாரன் சார்பில் ஆஜரானவர் அமரர் சுந்தரலிங்கம்
‘அடங்காத் தமிழர்’ என்று அழைக்கப்பட்ட சுந்தரலிங்கம் “பணம் தராவிட்டால் வழக்காடமாட்டேன்|| என்று சிவகுமாரின் தாயார் திருமதி அன்னலட்சுமி பொன்னுத்துரையிடம் அடம் பிடித்தார்.
தருவதாகச் சொன்னார் சிவகுமாரின் அம்மா. ஆனால் கொடுக்க வசதியில்லை.
சுந்தரலிங்கத்தின் கார்சாரதி தினமும் சிவகுமாரின் வீட்டு வாசலில் காவல் நின்று நச்சரிப்பார்.
“ஐயா வாங்கி வரச் சொன்னார் என்பார் சாரதி. மல்லாகம் நீதிமன்றம் தனக்கு சிவகுமாரன் விடயத்தில் பிணை வழங்கும் அதிகாரம் இல்லை என்று விட்டது.
உடனே தலைவர் அமிரை சிவகுமாரன் வீட்டார் சந்தித்தனர்.
அவர் கொழும்பில் இருந்த திருச்செல்வத்திற்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். மேல்நீதிமன்றத்தில் மனுப்போட்டு பிணை வாங்கிக் கொடுக்குமாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடிதத்தோடு வந்த இளைஞர் கொழும்பில் திருச்செல்வத்தை சந்தித்தார்.
கடிதத்தைப் படித்துவிட்டு திருச்செல்வம் அந்த இளைஞரைப் பார்த்துக் கேட்டார்.
“எங்களைக் கேட்டோ செய்தனீங்கள்?||
பிணை கேட்க மறுத்துவிட்டார் திருச்செல்வம்.
செத்தபின் வாழ்த்து
பின்னர் பல மாதங்கள் சென்று சிவகுமாரன் விடுதலையானார்.
1974 ஜுலை 5 ஆம் திகதி இறந்த சிவகுமாரனுக்கு கொழும்பில் ஒரு அஞ்சலிக்கூட்டம்.
இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடந்த அந்த அஞ்சலிக்கூட்டத்தை தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
பிரதான பேச்சாளர் திருச்செல்வம், அவர் தனது உரையில் கரகோஷத்தின் மத்தியில் கூறினார்.
“தம்பி சிவகுமாரன் எங்களுக்கு வழிகாட்டிவிட்டார்||
முன்னர் கடிதத்தோடு திருச்செல்வத்தை சந்தித்த அந்த இளைஞரும் அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தார் என்பது தான் இன்னும் சுவாரசியம்.
(தொடரும்)