“பாரத மாதா”

இவள் என்று தோன்றினாள் ?, இவளின் தொடக்கம் எது ?
இவளின் காலம் எவ்வளவு ?,இவளின் நாகரிகம் என்று தொடங்கியது ? இவளின் பயணத்தின் ஆதி எது ? இப்படி பல கேள்விகளுக்குப் பதில் காண்பது கடினம்.

ஆனால் ஒன்றுமட்டும் உண்மை இவள் தன்னகத்தே பல ஞான பொக்கிஷங்களை, நாகரிக வளங்களை, பண்பட்ட சமூகத்தைக் கொண்டவள்.

இவளுக்குப் பல மொழிகள்; பல வழிபாட்டு முறைகள் ; பல சடங்குகள் எனப் பல விதமான சமுதாயக் கூறுகளைக் கொண்டவள்.

எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும் ; எத்தனையோ பிரிவுகள் இருந்தாலும், அத்தனையும் இணையும் ஒரு தேசிய நீரோட்டம் பல காலமாகவே இந்த பாரத தேசத்தில் இன்றுவரை உயர்ப்புடன் இருந்து வருகிறது, இன்னமும் பல நூறு ஆண்டுகள் இருக்கும் .

அந்தத் தெளிந்த புனித நதி போல ஓடும் தேசிய நீரோட்டம் இந்த நாடு முழுமைக்கும் சென்று சேர்ந்துள்ளது. அதை “சனாதன தர்மம்” என்கிறோம் !

உறுதியான எந்த கோட்ப்பாடுகளும் யார் மீதும் இங்கு திணிக்கப்படுவதில்லை, அவரவர் தங்களின் விருப்பதிற்கேற்ப எந்த வழியையும், எந்தக் கடவுளையும் பின்பற்றலாம்.

இங்கு கடவுளை அடைய பல வழிகள் உண்டு ! தினம் தோறும் புதுப் புது வழிகள் உருவாகின்றன, ஒரு இந்துவிற்கு பல கோடி தெய்வங்கள் உண்டு; வாய்புகள் அவனிடம்/அவளிடம் தரப்பட்டு விட்டது அவன் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடலாம், எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம்.

பிரதானமாக ஆறு வழிமுறைகள்

1. காணபத்யம் (விநாயகர் வழிபாடு)
2. சைவம் (சிவன் வழிபாடு);
3. வைணவம் (திருமால் வழிபாடு);
4. சாக்தம் (சக்தி வழிபாடு);
5. கௌமாரம் (முருகன் வழிபாடு);
6. சௌரம் (சூரிய வழிபாடு).

இந்த ஆறு முக்கிய வழிபாட்டு முறைகளும், இன்னும் பற்பல சிறு, சிறு வழிபாட்டு முறைகளும், முக்கியமாக இயற்கை வழிபாடும், உருவ வழிபாடும், ஒன்றிணைந்ததே “சனாதன தர்மம்”, இது ஒரு வாழ்வியல் முறை, வழிபாட்டியல் நெறி, இது ஒரு தர்மம் ! மதம் என்ற வார்த்தை நமக்குப் பொருந்தாது, நம்மை பொருத்தவரையில் இது

“இந்து தர்மம்”. உலக நடைமுறைக்காக இந்து மதம் என்று கூறுகிறோம். சரியான உச்சரிப்பு “இந்து சமயம்” அல்லது “இந்து தர்மம்”.

எண்ணற்ற வழிமுறைகள் ஆகையால் எண்ணற்ற தெய்வங்கள் ! ஆண்,பெண்,விலங்கு,பறவை என எத்தனையோ விதமான தெய்வங்கள், இந்த நடைமுறை ஒரு இந்துவிற்கு தான் பார்க்கும் அத்தனையையும் தெய்வமாக எண்ண வைக்கிறது.

இந்த கலாச்சாரத்தில் பிறந்த ஒரு மனிதனுக்கு காற்று,நீர்,வானம்,நெருப்பு,நிலம் என அனைத்தும் தெய்வமாகவேத் தெரிகிறது.

கல்,மண்,மரம்,விலங்கு என அனைத்துமே தெய்வீகத்தின் இருப்பிடமாகத் தெரிகிறது, ஆகா சக மனிதனும் தெய்வீகம் குடி கொண்டுள்ள கோவில் !
ஒவ்வொரு மனிதனையும் “நான் கடவுள் – என்னுள் இறைவன் இருக்கிறார்” என்று சொல்லவைத்த தத்துவம் “சனாதன தர்மம்”, “தன்னையும் தெய்வமாக ; மற்றவறையும் தெய்வமாக” பார்க்க வைக்கும் ஒரு பக்குவத்தை இது தருகிறது.

எல்லாவற்றையும் எற்றுக் கொள்ளும் ஒரு விரிந்த இதயத்தை; ஓர் உயர்ந்த ஞானத்தை நமக்கு வழங்குகிறது, இது “பாவம்” என்று தீயனவற்றை நிராகரிக்கிறது, “புண்ணியம்” என்று நல்லனவற்றை “அரவணைக்கிறது”.
தாயைப் போற்றுகிறது;
தாய்நாட்டைப் பாதுகாக்கிறது ;
அன்போடு அனைவரையும் அரவணைக்கிறது;
பண்போடு பக்குவப்படுத்துகிறது;

“எல்லையற்ற ஞானத்தை எல்லோருக்கும் வாரி வழங்குகிறது”.

அ.பரிவழகன்

தொடரும்..

Share.
Leave A Reply

Exit mobile version