இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தின் தொடக்கத்தில், கர்னல் முயம்மர் கதாஃபியின் காலம் கடந்துவிட்டது.
அவர் 2011 வாக்கில், யாரும் மீண்டும் பார்க்க விரும்பாத பழைய திரைப்படத்தின் கதாபாத்திரம் போல் ஆகிவிட்டார்.
வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், மனிதன் ஏற்கெனவே நிலவில் கால் பதித்துவிட்ட சமயத்தில், ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க அதிபராக இருந்த காலகட்டத்தில் அவர் ஆட்சிக்கு வந்தார்.
அன்றிலிருந்து கேணல் மும்மர் கடாபி இந்த உலகத்தை விட்டுச் செல்லும் வரை அமெரிக்கா ஏழு அதிபர்களையும், பிரிட்டன் எட்டுப் பிரதமர்களையும் கண்டுள்ளது. ஆனால் கதாஃபி எப்பொழுதுமே தன்னை பிரிட்டிஷ் அரசியுடன் ஒப்பிட்டுக் கொள்வார்.
லிபியாவில் கிளர்ச்சி தொடங்கியபோது கேணல் மும்மர் கடாபி தனது உரை ஒன்றில், ‘பிரிட்டிஷ் அரசி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்ய முடியும் என்றால், தாய்லாந்து மன்னர் 68 ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும் என்றால், நான் ஏன் செய்யக்கூடாது?’ என்று கூறினார்.
27 வயதில் செய்த ராணுவக் கிளர்ச்சி
கேணல் மும்மர் கடாபி லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஒரு காலத்தில் வசீகரமான ஆளுமை உடையவராக இருந்த கடாபி, 1969ஆம் ஆண்டில் லிபியாவின் அரசர் இட்ரிஸை ரத்தம் சிந்தா ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியிலிருந்து வீழ்த்தினார். அப்போது அவரது வயது 27 மட்டுமே.
“நான் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். என் சகோதரி என்னை எழுப்பி, எழுந்திரு, எழுந்திரு, ராணுவக் கலகம் நடந்துள்ளது என்றார். நான் ரேடியோவை ஆன் செய்தேன்.
அதில் தேசபக்தி பாடல்கள் ஒலித்தன. கூடவே பலமான முழக்கங்களும் எழுப்பப்பட்டன. நான் என் ஆடைகளை அணிந்துகொண்டு வெளியே சென்றேன்,” என்று அப்போது திரிபோலியில் வசித்து வந்த அஷர் ஷம்சி கூறினார்.
“நான் நகர மையத்தை அடைந்தபோது, தெருக்களில் பலர் கூடியிருந்தனர். லிபியா மற்றும் புரட்சிக்கு ஆதரவாக கோஷங்களை அவர்கள் எழுப்பினர். அதிகாரம் யாருடைய கைக்கு வந்துள்ளது என்பது யாருக்குமே தெரியாது. என்ன நடக்கிறது என்பதை அறிய நான் ஆசைப்பட்டேன்,” என்றார் அவர்.
உலகையே கவனிக்க வைத்த கதாஃபியின் காலம் 2011 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது.
கிளர்ச்சி நடந்த ஏழு நாட்களுக்குப் பிறகு தனது பெயரை அறிவித்தார்
ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த ராணுவக் கிளர்ச்சியின் தலைவர் கடாபி என்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.
நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய முதல் உரையில், ‘ஆட்சியை மாற்றியதன் மூலம் மாற்றம் மற்றும் சுத்திகரிப்புக்கான உங்கள் கோரிக்கைக்கு நான் பதிலளித்துள்ளேன். நாட்டை விட்டு வெளியே செல்ல அரசர் சம்மதித்துள்ளார்.
தேக்கநிலை மற்றும் நிலப்பிரபுத்துவ அரசியல் அமைப்பிற்குப் பிறகு வீசும் இந்தப் புதிய காற்றை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வரவேற்றுள்ளனர்,” என்று குறிப்பிட்டார்.
தனிநபர் வழிபாட்டை வன்மையாக எதிர்ப்பதாக கேணல் மும்மர் கடாபி ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் கட்டுப்பாடில்லாத சர்வாதிகாரியாக மாறினார். மேலும் தனது பாதுகாப்பு தொடர்பான அவரது வெறி ஆபத்தான அளவிற்கு வளர்ந்தது.
கடாபியின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்களான டேவிட் பிளண்டி மற்றும் ஆண்ட்ரூ லிசெட் தங்களது ‘கடாபி அண்ட் தி லிபியன் ரெவெல்யூஷன்’ என்ற புத்தகத்தில், “கடாபி முதலில் ஆட்சிக்கு வந்தபோது அவர் ஒரு பழைய ‘வோக்ஸ் வேகனில்’ திரிபோலியை சுற்றி வந்துகொண்டிருந்தார்.
அவரும் அவரது மனைவியும் உள்ளூர் பல்பொருள் அங்காடிக்கு வந்து ஷாப்பிங் செய்தனர். ஆனால் படிப்படியாக எல்லாம் மாற ஆரம்பித்தது,” என்று எழுதியுள்ளனர்.
“அஃஜிசியா பாராக்ஸில்’ இருந்து அவர் வெளியே வரும்போது ஆயுதம் ஏந்திய கார்களின் அணிவரிசை இரண்டு வெவ்வேறு திசைகளில் செல்லும். ஒன்றில் அவர் இருப்பார். மற்றொன்று மற்றவர்களை ஏமாற்ற பயன்படுத்தப்பட்டது.
அவர் விமானத்தில் எங்காவது சென்றால் இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டுச் செல்வது வழக்கம். அவர் பயணிக்க வேண்டிய விமானம், புறப்பட்ட இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு திரும்ப தரையிறக்கப்படும். பின்னர்தான் அவர் அதில் அமர்வார்.
அந்த விமானத்தில் ஏதேனும் வெடிகுண்டு இருந்தால் அவர் உட்காரும் முன்பே அது வெடித்துவிடும் என்பதற்காக இந்த ஏற்பாடு. ஒருமுறை தான் துனீஷியாவுக்கு காரில் வருவதாக அவர் செய்தி அனுப்பினார்.
அவரை வரவேற்க அநத நாட்டின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் எல்லைக்குச் சென்றது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் விமானம் மூலம் துனீஷியாவை அடைந்துவிட்டார் என்று பின்னர் தெரிய வந்தது.”
“விமானம் தரையிறங்குவதற்கு முன் அதில் யார் இருக்கிறார்கள் என்று விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை கேட்டபோது, கதாஃபியின் பெயரைக் குறிப்பிடாமல், ‘எங்கள் விமானத்தில் மிக முக்கியமான நபர் ஒருவர் இருக்கிறார்’ என்று பைலட் கூறினார்.”
பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், யாருடன் கை குலுக்கினாலும் கையுறை அணிவதை கதாஃபி வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கைகுலுக்கும் முன் கையுறைகளை அணிவது வழக்கம்
சொந்த பாதுகாப்பின் மீதான கடாபியின் வெறி பற்றி மேலும் பல செய்திகள் வெளிவரத் தொடங்கின.
“கடந்த 2009இல் அமெரிக்க தூதர் ஜீன் க்ரான்ட்ஸ், யுக்ரேனிய நர்ஸ் கெலினா கொலோட்னிஸ்கா மீதான கடாபியின் சார்பு பற்றி ஒரு தூதாண்மை கேபிளில் குறிப்பிட்டுள்ளார். கெலினா கதாஃபியின் காதலி என்று சொல்லப்பட்டது,” என்று தான் எழுதிய ‘சாண்ட் ஸ்ட்ராம் – லிபியா இன் தி டைம் ஆஃப் ரெவெல்யூஷன்’ என்ற புத்தகத்தில் லிண்ட்சே ஹில்சம் குறிப்பிட்டுள்ளார்.
கடாபி தொடும் எல்லா பொருட்களும் முன்பே கிருமி நீக்கம் செய்யப்படுவதை கெலினா உறுதி செய்தார். அவரது நாற்காலி மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவரது மைக்ரோஃபோனும் கிருமி நீக்கம் செய்யப்பட்டது.
கடாபி வெளிநாடு செல்லும் போதெல்லாம் ஓட்டல் அறையில் தன்னுடன் எடுத்துச் செல்லும் பெட்ஷீட்களை விரிப்பது வழக்கம். ஒருமுறை அவர் ஒரு பெரிய அரபுத் தலைவரின் கையைக் குலுக்குவதற்கு முன் தன் கைகளில் தொற்று ஏற்படாமல் இருக்க வெள்ளை கையுறைகளை அணிந்தார் என்று ஒரு பிரபலமான கதையும் உள்ளது.
லாக்கர்பி குண்டுவெடிப்பில் கடாபியின் கை
அன்று 1988 டிசம்பர் 21ஆம் தேதி. ஃபிராங்ஃபர்ட்டில் இருந்து டெட்ராய்ட் சென்ற Pan Am விமானம் ஸ்காட்லாந்தின் லாக்கர்பி பகுதிக்கு மேலே வானத்தில் வெடித்துச் சிதறியதில் 243 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் கடாபியின் பெயர் மோசமானது.
விபத்து தொடர்பாக பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் லிபியாவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கடாபியின் மீது கோபம் கொண்டு அவரை ‘வெறிபிடித்த நாய்’ என்று அழைத்தார்.
கடாபியின் அட்டூழியங்கள் பற்றிய செய்திகள் வெளியில் இருந்து மட்டுமின்றி உள்நாட்டில் இருந்தும் வரத் தொடங்கின. பொது இடங்களில் எதிரிகளைத் தூக்கிலிடுவது சாதாரண நிகழ்வாக மாறியது.
”ஒரு நாள் நான் பல்கலைக்கழகத்தை அடைந்தபோது, அதன் பிரதான வாயிலில் நான்கு பேர் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தனர்,” என்று அந்த நாட்களில் திரிபோலியில் வசித்து வந்த பஷேஷ் ஷெகாவி, பிபிசியிடம் தெரிவித்தார்.
“அந்தக் காட்சியை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை. பல்கலைக்கழக வாசலில் கடாபியின் பிரமாண்ட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இரவில் சில மாணவர்கள் வந்து அந்த போஸ்டரில் மையைத் தடவிவிட்டனர். இந்த மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கடாபியின் நிர்வாகம் முடிவு செய்தது. அவர்கள் அனைவரும் பல்கலைக்கழக வாயிலில் தூக்கிலிடப்பட்டனர்,” என்று அவர் தெரிவித்தார்.
அபு சலீம் சிறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 1,270 பேர் கொலை
கடாபியின் வீரர்கள் 1996இல் திரிபோலியின் அபு சலீம் சிறைச்சாலையில் கைதிகளை ஓரிடத்தில் திரட்டி அவர்களை சுட்டுக் கொன்றனர்.
இந்தப் படுகொலையில் 1270 கைதிகள் கொல்லப்பட்டதாக ‘ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்’ அமைப்பு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட கைதிகளின் உறவினர்களுக்கு அவர்கள் இறந்த விஷயம் தெரிவிக்கப்படக்கூட இல்லை.
“அபு சலீம் சிறையில் இருந்த தனது மைத்துனரை சந்திக்க அவரது இரண்டு குழந்தைகளுடன் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தான் அங்கு சென்றதாக ஃபுவாத் அசத் பென் ஓம்ரான் என்னிடம் சொன்னார். அவருக்காக உடைகள் மற்றும் அன்றாடப் பொருட்களையும் ஓம்ரான் தன்னுடன் எடுத்துச் செல்வார்.
ஆனால் அவற்றை பாதுகாப்புப் பணியாளர்கள் தங்களிடமே வைத்துக்கொண்டு விடுவார்கள். தனது மைத்துனரை சந்திக்க அவர் அனுமதிக்கப்படவேயில்லை.
தான் 14 ஆண்டுகள் தொடர்ந்து அங்கு சென்றதாகவும், ஆனால் தனது மைத்துனர் இறந்துவிட்டார் என்ற விஷயம் தன்னிடம் தெரிவிக்கப்படவே இல்லை என்றும் அவர் என்னிடம் கூறினார்,” என்று லிண்ட்சே ஹில்சம் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஒரு படுகொலையின் கொடூரத்தைக்கூட புரிந்துகொள்ள முடியும். ஆனால் 14 ஆண்டுகளாக பொய்யான நம்பிக்கையை, ஒருநாள் தன் அன்புக்குரியவர்கள் திரும்ப வருவார்கள் என்ற குடும்பங்களின் பொய்த்துப்போன நம்பிக்கையைப் பார்க்கும்போது இதை விடக் கொடூரமானது வேறு எதுவும் இருக்க முடியாது என்றே நினைக்கத் தோன்றுகிறது.
யாசர் அராஃபத்துடன் கடாபிக்கு விசேஷ பகை
கடாபி எகிப்திய அதிபர் ஜமால் அப்துல் நாசரை தனது ஹீரோவாக கருதினார். ஆனால் அவருக்குப் பிறகு அதிபராக பதவியேற்ற அன்வர் சதாத் மற்றும் பாலஸ்தீனிய தலைவர் யாசர் அராஃபத் மீது அவருக்கு கடும் எரிச்சல் இருந்தது.
“பாலத்தீன போராளிகளைத் தனது நாட்டில் இருந்து வெளியேற்றியதால் ஜோர்டன் மன்னர் ஹுசைனை கொல்ல வேண்டும் என்று கடாபி கூறியபோது செளதி அரேபியாவின் மன்னர் ஃபைசல் மற்றும் எகிப்து அதிபர் நாசரும் திகைத்துப் போனதாக எகிப்திய பத்திரிகையாளர் முகமது ஹைகால் எழுதியிருந்தார்.
எந்த ஒரு அரபு நாட்டுத் தலைவரையும் கொல்வதில் கடாபிக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அவர் அதற்கு முயற்சி செய்யவில்லை என்று சொல்ல முடியாது,” என்று லிண்ட்சே ஹில்சம் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
யாசர் அராஃபத் மீது அவருக்கு தனிப்பட்ட மரியாதை இல்லை. வெளிநாட்டில் வசிக்கும் தன் எதிரிகளைக் கொல்வதற்கு அராஃபத், ஆட்களை அளிக்காததால் கடாபி அவர் மீது கோபம் கொண்டார்.
கடந்த 1982இல் பெய்ரூட்டில் அராஃபத்தும் அவரது அல்-ஃபத்தாத் தோழர்களும் சுற்றி வளைக்கப்பட்டபோது, கடாபி அவருக்கு பகிரங்கமாக ஒரு தந்தியை அனுப்பினார்.
‘உங்களுக்கு இருக்கும் சிறந்த மாற்றுவழி தற்கொலை செய்துகொள்வதே’ என்று அதில் சொல்லியிருந்தார். அப்போது அராஃபத் அவரது பாணியிலேயே பதிலளித்து, ‘இந்த நடவடிக்கையில் நீங்களும் என்னுடன் பங்குகொண்டால் நான் இதற்குத் தயாராக இருக்கிறேன்’ என்று எழுதினார்.
சக்தி வாய்ந்த பெண்களின் ரசிகர்
கடாபி உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பெரும் ரசிகர் என்பதை மிகச் சிலரே அறிவார்கள். “ஒருமுறை அவர் ஒரு நேர்காணலின் முடிவில் ஒரு பெண் செய்தியாளரிடம், ‘என்னுடைய ஒரு செய்தியை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மேடலின் ஆல்பிரைட்டிடம் தெரிவிக்க முடியுமா?’ என்று கேட்டார்.
அந்தச் செய்தியில், ‘நான் உங்களை விரும்புகிறேன். என் மீது உங்களுக்கும் அதே உணர்வுகள் இருந்தால், அடுத்த முறை தொலைக்காட்சியில் தோன்றும் போது, பச்சை நிற ஆடையை அணியுங்கள்,” என்று எழுதப்பட்டிருந்தது.
அதிபர் புஷ்ஷின் காலத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த காண்டலீசா ரைஸால் அவர் ஈர்க்கப்பட்டார். மேலும் அவரை ‘எனது ஆப்பிரிக்க இளவரசி’ என்று அழைத்தார்,” என்று லிண்ட்சே ஹில்சன் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அங்கு அவர் உலகத் தலைவர்களுடன் நான் இருந்த புகைப்படங்களின் தொகுப்பைக் காட்டினார். இதை நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர் தனது மியூசிக் சிஸ்டத்தில் ‘ ப்ளாக் ஃப்ளவர் இன் த வைட் ஹவுஸ்’ என்ற ஆங்கிலப் பாடலை ஒலிக்கச் செய்தார்,” என்று ரைஸ் தனது சுயசரிதையான ‘நோ ஹையர் ஹானர்’ இல் எழுதியுள்ளார்.
இந்தியா – லிபியா உறவு எப்படி இருந்தது?
இந்தியாவுடனான கர்னல் கடாபியின் உறவு, சில நேரங்களில் மிக நன்றாகவும் சிலநேரம் மிக மோசமாகவும் இருந்தன.
கடாபி இந்தியாவுக்கு வந்ததே இல்லை. 1983இல் டெல்லியில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க, தனக்கு அடுத்தபடியாக இருந்த ஜலாவுத்தை டெல்லிக்கு அனுப்பினார்.
அவர் இங்கு வந்தபோது ஒரு சர்ச்சையில் சிக்கினார். ”மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, அஹ்தெல் சலாம் ஜலூவுத், ஹைதராபாத் சென்றார்.
அங்கு அவர் ‘நெறிமுறை’யை மீறியது மட்டுமல்லாமல், தனது பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்தினார்.
அவரது வாகன அணி ’சார் மினார்’ முன் வந்ததும், அவர் காரில் இருந்து இறங்கி அதன் கூரையில் ஏறி நடனமாடத் தொடங்கினார்,” என்று பிரபல செய்தியாளர் கே.பி.நாயர், ‘டெலிகிராப்’ நாளிதழில் எழுதினார்.
அவரது இந்தப் புகைப்படம் இந்திய செய்தித்தாள்களில் வெளியானது. இந்திய முஸ்லிம்களுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கான லிபியாவின் முயற்சியாக இதை இந்திரா காந்தி எடுத்துக் கொண்டார்.
இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கதாஃபி கடைபிடித்த புதிய உத்தி
இந்தியாவுக்கும் லிபியாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது. ஆனால் இந்திரா காந்தியை சமாதானப்படுத்துவது எப்படி என்று கதாஃபிக்கு தெரியும். அதற்காக தனது இரண்டாவது மனைவி சஃபியா ஃபர்காஷ் அல் பிரசாயை அவர் டெல்லிக்கு அனுப்பினார்.
கடாபியின் மனைவி டெல்லி வந்தபோது, லிபியாவுக்கான இந்திய தூதராக அர்ஜூன் அஸ்ரானி இருந்தார்.
“திருமதி கடாபியை வழியனுப்ப என் மனைவி திரிபோலி விமான நிலையத்திற்குச் சென்றார். நான் திரும்பியதும் உங்களை சந்திக்கிறேன் என்று அவர் சொன்னார். கடாபியின் மனைவி டெல்லி வந்தடைந்ததும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார்.
இந்திரா காந்தியை சந்திக்கச் சென்றபோது, ’இந்திரா காந்தி லிபியாவுக்கு வருவேன் என்று உறுதியளிக்கும் வரை லிபியாவுக்குத் திரும்ப வேண்டாம் என்று என் கணவர் என்னிடம் கூறியிருக்கிறார்’ என்று சொன்னார்.
மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு இந்திரா காந்தி லிபியா செல்லும் அழைப்பை ஏற்றுக்கொண்டார்,” என்று அர்ஜுன் அஸ்ரானி நினைவு கூர்ந்தார்.
“இதற்கு பதிலாக லிபியாவிடம் ஏதாவது கேட்கலாமா என்று வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் என்னிடம் கேட்டனர்.
‘இரண்டு இந்தியத் தொழிலாளர்கள் ஐந்து மில்லிகிராம் அஃபின் வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
ஏனெனில் அங்குள்ள சட்டங்கள் மிகவும் கடுமையாக இருந்தன. திருமதி கதாஃபி நினைத்தால் கருணை அடிப்படையில் அவர்களை விடுவிக்க முடியும். சஃபியா கடாபி லிபிய மண்ணில் கால் வைத்தவுடன், அந்த இரண்டு இந்தியத் தொழிலாளர்களும் விடுவிக்கப்பட்டனர்.”
இந்திய தூதரின் மனைவிக்கு கடாபியின் மனைவி விடுத்த அழைப்பு
“கடாபியின் துணைவியார், என் மனைவியை காபி சாப்பிட அழைத்தார். லிபியா உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்டார். எல்லாமே மிகவும் நன்றாக இருக்கிறது.
ஆனால் உங்கள் ‘அழகான’ கணவரை என்னால் சந்திக்க முடியவில்லை என்பதே எனக்கு இருக்கும் ஒரே வருத்தம் என்று என்று என் மனைவி பதில் சொன்னார்.
அப்போது கடாபியின் மனைவி எதுவும் பேசவில்லை. அடுத்த நாள் கடாபியின் அலுவலகத்தில் இருந்து எனக்கு போன் வந்தது, இன்று மாலை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று என்னிடம் கேட்கப்பட்டது.
மாலையில் நான் பிரெஞ்சு தூதர் வீட்டிற்கு விருந்துக்குச் செல்கிறேன் என்று சொன்னேன். நாங்கள் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பிரெஞ்சு தூதரகத்திற்கு கர்னல் கடாபியிடமிருந்து அழைப்பு வந்தது. கர்னல் கடாபியை சந்திக்க திருமதி அஸ்ரானி வர முடியுமா என்று என்னிடம் கேட்கப்பட்டது.
நான் திருமதி அஸ்ரானி மட்டுமா என்று கேட்டேன். ஆமாம் அவர் மட்டுமே என்று அங்கிருந்து பதில் வந்தது. நீங்கள் விரும்பினால் ஒரு மொழிபெயர்ப்பாளரை அனுப்பலாம் என்றும் சொல்லப்பட்டது.
என் மனைவி அங்கே சென்றார். கடாபி அவரை மிகவும் அன்புடன் வரவேற்றார். ஒரு கம்பளத்தையும், டயலில் கடாபியின் படம் பொறிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கடிகாரத்தையும் அவர் பரிசளித்தார்.
ஆனால் அவர் விசித்திரமான ஒன்றைச் சொன்னார். “நீங்கள் நாளை லிபியாவை விட்டு வேறு நாட்டுக்கு மாற்றப்படப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால் என் அனுமதியின்றி உங்கள் கணவர் எப்படி லிபியாவை விட்டு வெளியேற முடியும் என்று சொன்னார்.
இந்தக் கேள்வியை நீங்கள் என் கணவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார் என் மனைவி. என் மனைவி காரில் உட்காரும்போது, ’நாளை காலை உங்கள் கணவர் இங்கே அழைக்கப்படுவார் என்று அவரிடம் சொல்லுங்கள்’ என்று கடாபி கூறினார்,” என்று அர்ஜுன் அஸ்ரானி குறிப்பிட்டார்.
கடாபி இந்தியாவிடம் இருந்து அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பெற விருப்பம்
மறுநாள் கடாபி, அர்ஜுன் அஸ்ரானியை அழைக்க தனது காரை அனுப்பினார். அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்தியா அளிக்க வேண்டும் என்று அவர் மூலமாக கடாபி கோரிக்கை விடுத்தார், அதை இந்தியா ஏற்கவில்லை.
“அணுசக்தி தொழில்நுட்பத்தைத் தருவதாக முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அது இன்னும் நடக்கவில்லை என்று கடாபி என்னிடம் கூறினார்.
எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் நான் டெல்லி செல்கிறேன், எனவே இந்த விஷயத்தை கண்டிப்பாகக் குறிப்பிடுகிறேன் என்று நான் சொன்னேன்.
நீங்கள் எந்த நாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளீர்கள் என்று கடாபி என்னிடம் கேட்டார். தாய்லாந்து என்று நான் சொன்னபோது, தாய்லாந்தில் எங்களுக்குத் தூதரகம் எதுவும் இல்லை. அங்கே நீங்கள் எங்கள் தூதர் போலவும் பணியாற்றுங்கள் என்று கடாபி சொன்னார்.
நான் என்ன சொல்ல முடியும்? சரி, சரி என்று நான் பதில் சொன்னேன்,” என்று அஸ்ரானி தெரிவித்தார்.