வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள விவேக் ராமசாமி தமிழில் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
அடுத்தாண்டு இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை வேட்பாளர் தேர்வே வினோதமாக நடக்கும்.
ஏனென்றால் அங்கே குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி மட்டுமே பிரதான கட்சிகள் ஆகும்.
ஒவ்வொரு கட்சி சார்பிலும் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் நிலையில், அவர்களுக்கு இடையே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும்.
அதில் வெல்லும் நபரே அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
விவேக் ராமசாமி: அங்கே ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்ற விதி இருக்கிறது.
தற்போதைய அதிபர் பைடனுக்கு இன்னொரு வாய்ப்பு இருப்பதால் பெரும்பாலும் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அவரே போட்டியிட வாய்ப்புகள் அதிகம்.
அதேநேரம் குடியரசு கட்சி சார்பில் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில் டிரம்பிற்கு தான் ஆதரவு அதிகம்.
ஆனால், டிரம்பிற்கு அடுத்த இடத்தில் வேகமாக வளர்ந்து வருபவர் விவேக் ராமசாமி.
38 வயதான விவேக் ராமசாமிக்கு அங்குள்ள குடியரசு கட்சியினர் மத்தியில் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது..
பலரும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், விவேக் ராமசாமி தனியாகத் தெரிகிறார்.
ஒவ்வொரு விவாதம் அல்லது நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் அவருக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குடியரசு கட்சியினர் இடையே நடந்த முதற்கட்ட விவாதத்திற்குப் பிறகு, ஒரு மணி நேரத்தில் அவருக்கு நன்கொடை குவிந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் பேசினார்: விவேக் ராமசாமி அமெரிக்காவில் இருந்தாலும் அவர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
குறிப்பாகத் தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர், அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் என்ற இடத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
அங்கே டிரூத் என்ற பெயரில் பிரசார கூட்டத்தை நடத்தினார். அப்போது அவர் அங்கே ஒருவருடன் தமிழில் பேசினார்.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதில் இளைஞர் ஒருவர் விவேக் ராமசாமி அருகில் வருகிறார். அந்த நபர், “உங்களிடம் எனக்கு எந்தவொரு கேள்வியும் இல்லை. உங்களுக்கு வாழ்த்து சொல்லவே இங்கே வந்தேன்.
மிக விரைவில் உங்களை அமெரிக்க அதிபராகப் பார்ப்பேன் என நம்புகிறேன்” என்றார். இதைக் கேட்டு மகிழ்ந்த விவேக் ராமசாமி அந்த இளைஞருக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழ் பேசுவேன்: அப்போது அந்த நபர் தனது பெற்றோரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் வேலூரைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார்.
இதை கேட்டதும் டக்கென சந்தோசப்பட்ட விவேக் ராமசாமி, “நானும் தமிழ் பேசுவேன்.. ஆனால் பாலக்காடு தமிழ்” என்று சொல்லிச் சிரிக்கிறார்.
அதற்கு அந்த இளைஞர், “நிச்சயம் நீங்கள் தலைவராக வேண்டும்” எனச் சொல்லி மீண்டும் தமிழிலேயே வாழ்த்துகிறார்.
அதற்கு நன்றி சொன்ன விவேக் ராமசாமி, அமெரிக்காவை மீண்டும் டாப்பில் கொண்டு வர தனக்கு வாக்களிக்குமாறு அவரிடம் மீண்டும் கேட்கிறார்.
அத்துடன் அந்த சின்ன வீடியோ முடிகிறது. இது தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
யார் இவர்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் 1985 ஆகஸ்ட் 9இல் பிறந்தவர் விவேக் ராமசாமி..
இவரது பெற்றோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவரது தந்தை ராமசாமி இந்தியாவிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தவர்.
இவரது தாய் கீதா மைசூர் மருத்துவக் கல்லூரியில் படித்தவர். விவேக்கின் தந்தை ராமசாமிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தாலேயே இவர்கள் குடும்பத்துடன் அங்கே சென்றார்கள். இவரது குடும்பத்தினர் கேரளா பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ் பேசும் பிராமணர்கள் ஆவர்.