கள்ளக்குறிச்சி: அண்ணனுடைய மகனை தன்னுடைய பிள்ளை என்று சொந்தம் கொண்டாடி, கொலை செய்திருக்கிறார் சித்தப்பா..

அதற்கு காரணம் மகன் மேல் இருந்த பாசம் இல்லை.. மாறாக அண்ணன் மனைவி மேல் இருந்த மோகம் தான் என்கிறார்கள் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராம மக்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது திருப்பாலப்பந்தல் கிராமம். இங்கு உடைந்த ஸ்பீக்கர் பாக்ஸை வைத்து ஒரு குடும்பத்தினர் ஒப்பாரி வைத்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

அந்த மொத்த கிராமமும் நிலைகுலைந்து போயிருந்தது. என்ன நடந்தது.. உடைந்து கிடந்த ஸ்பீக்கருக்குள் இருந்தது என்ன.. என்பது குறித்து பார்ப்போம்.

கள்ளக்காதல் எவ்வளவு மோசமனது என்பதற்கும். அதனால் எவ்வளவு மோசமான சம்பவம் நடந்துள்ளது என்பதற்கும் இதைவிட கேவலமான உதாரணத்தை யாரும் காட்டிவிட முடியாது, வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலப்பந்தல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருமூர்த்திக்கு 24 வயது ஆகிறது.

இவரது மனைவி ஜெகதீஸ்வரி. இந்த தம்பதிக்கு திருமூர்த்தி(2) என்ற மகனும் புவனேஸ்வரி என்ற ஒரு மாத பெண் குழந்தையும் இருந்தனர்.

குருமூர்த்தி சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் அண்ணன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த ராஜேஷ் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்த போதிலும்,கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார்.

அண்ணன் தம்பி ஒரே வீட்டில் வசித்து வந்தாலும், அவர்களுக்குள் சொத்து பிரிப்பது தொடர்பாக நீண்ட காலமாக மனக்கசப்பு இருந்திருக்கிறது.

இந்த நிலையில் தான் அந்த குடும்பம் எதிர்பார்க்காத அந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. சம்பவ நாள் அன்று குருமூர்த்தி வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த திருமூர்த்தி, திடீரென மாயமாகி இருக்கிறார்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த குருமூர்த்திக்கு தன் மகன் வீட்டில் இல்லாதது கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உடனே குருமூர்த்தியும், அவரது தம்பி ராஜேஷ்சும் பொழுதுசாயும் வரை ஊர் முழுக்க தேடி அலைந்திருக்கிறார்கள்.

ஆனால் அதில் எந்த பயனும் இல்லாததால், கடைசியாக திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்திற்கு சென்று,காணாமல் போன மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையில் இறங்கி உள்ளனர். காணாமல் போன மகனை தேடி குருமூர்த்தி ஒருபுறமும், வழக்கு பதிவு செய்த காவல்துறை மறுபுறமும் தீவிரமாக தேடிக்கொண்டிருக்க, 3வது நாள் குருமூர்த்தியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் அடித்தது.

எலியோ, பூனையோ இருந்திருக்கும் என நினைத்த குருமூர்த்தி, வீடு முழுக்க தேடிய பின்னர், அவரது தம்பி ராஜேஷ் அறையில் இருந்து தான் அந்த துர்நாற்றம் வீசியதை கண்டுபிடித்தார்.

ராஜேஷ் அறைக்குள் நுழைந்து அலசி ஆராய்ந்திருக்கிறார் குருமூர்த்தி.. அந்த அறையில் இருந்த ஒரு ஸ்பீக்கருக்குள் இருந்து தான் துர்நாற்றம் வீசி இருக்கிறது.

சந்தேகம் அடைந்தவர், ஸ்பீக்கரை உடைத்து உள்ளே பார்த்த போது, குருமூர்த்தி கண்ட காட்சிகள் அதிர்ச்சியில் தூக்கி வாரிப்போட்டிருக்கிறது.

காரணம்,அதில் இருந்தது குருமூர்த்தியின் மகன் திருமூர்த்தியின் உடல்.. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றியதுடன், அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கினர்.

குருமூர்த்தியின் தம்பி ராஜேஷை விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார். அவரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து போலீசார் தீவிரமாக விசாரித்த போது, சித்தப்பாவே சிறுவனை கொன்று,ஸ்பீக்கரில் சமாதியாக்கியது தெரியவந்தது.

குருமூர்த்தியின் மனைவி ஜெகதீஸ்வரியும் ராஜேஸ்சும் காதலர்களாம். இவர்களது காதல் கைகூடுவதற்குள், ஜெகதீஸ்வரிக்கும் குருமூர்த்திக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்திருக்கிறது.

திருமணத்திற்கு பிறகும் ராஜேஸ் உடன் ஜெகதீஸ்வரி காதலை கள்ளக்காதலாக தொடர்ந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் ராஜேஷ்க்கும், குருமூர்த்திக்கும் சொத்து தொடர்பான வாக்குவாதமும் பூதாகரமாகி இருக்கிறது.

சம்ப நாள் அன்று அண்ணனிடம் ராஜேஷ் செலவுக்கு பணம் கேட்டிருக்கிறார். குருமூர்த்தி தன்னிடம் பணம் இல்லை என்று கூற, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியிருக்கிறது.

தன்னுடைய காதலியையும் பிரித்து, சொத்தையும் அபகரித்து, செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில், அண்ணனுடன் கடுமையாக வாக்குவாதம் செய்திருக்கிறார் ராஜேஷ்.

ஆனால் அங்கு நடந்த எதையும் காதில் போட்டுக்கொள்ளாத குருமூர்த்தி வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

ஆனால் ராஜேஷ் தன் கள்ளக்காதலியான ஜெகதீஸ்வரியிடம் நீதி கேட்டு வாக்குவாதம் செய்திருக்கிறார்.

அத்துடன் திடீர் திருப்பமாக திருமூர்த்தி தனக்கு பிறந்த குழந்தை என்று கூறி ஆவேசப்பட்டிருக்கிறார் ராஜேஷ்.

அதற்கு ஜெகதீஸ்வரி சம்மதம் தெரிவிக்காததால்,ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார் ராஜேஷ். அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து. விளையாடிக்கொண்டிருந்த திருமூர்த்தியை தன்னுடைய அறைக்குள் அழைத்துச் சென்ற ராஜேஷ், குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொலை செய்திருக்கிறார்.

அதனை தொடர்ந்து உடலை மறைக்க திட்டமிட்டவர், ஸ்பீக்கர் பாக்சில் அடைத்து வைத்துவிட்டு, காணாமல் போன அண்ணன் மகனை தேடுவது போல் நாடகம் ஆடியது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஜெகதீஸ்வரிக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Share.
Leave A Reply

Exit mobile version