சர்வாதிகார அடக்குமுறை ஆட்சி நடத்தும் சவூதி அரேபியாவுக்கும் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இன்று வரை எண்ணற்ற குற்றங்களைப் புரிந்து கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உறவுகளை பலப்படுத்துவதற்கான முயற்சிகள் மீண்டும் தொடருகின்றன.
2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மத்திய கிழக்கிற்கு விஜயம் செய்திருந்தபோது இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால், சவூதிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் கடந்த பல தசாப்த காலமாவே நல்லுறவுகள் இருந்து வருகின்றன.
மத்திய கிழக்கில் இடம்பெற்றுள்ள எல்லா யுத்தங்கள், நாடுகளின் ஆட்சியாளர் தெரிவுகள், ஆட்சிக் கவிழ்ப்புக்கள் என எல்லாவற்றிலும் இரு தரப்பினரும் இணைந்து பணியாற்றி வந்துள்ளனர்.
இதில் பெரும்பாலான மக்கள் மறந்து போன விடயம் என்ன வென்றால் முதலாம் உலக யுத்தத்தில் கடைசியாக உலகில் நிலைத்திருந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியமான துருக்கிப் பேரரசு அல்லது ஒட்டோமான் பேரரசு வீழ்த்தப்பட்ட பின்னணியில் தான் சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளுமே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சக்திகளால் உருவாக்கப்பட்டன.
அதன் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சியோனிஸ யூதர்களோடு இணைந்து, உலகம் முழுவதும் நாடோடிகளாக அலைந்து திரிந்த யூதர்களைக் கொண்டு வந்து பலஸ்தீன மக்களின் காணிகளை அபகரித்து அங்கு யூதர்களைக் குடியேற்றினர்.
பலஸ்தீனர்களுக்கு எதிராக இனஒழிப்பை மேற்கொண்டு அவர்களை தமது தாயக பூமியில் இருந்து ஓட ஓட விரட்டினர். தமது காணிகளையும் வீடுகளையும் ஏனைய சொத்துக்களையும் இழந்த அப்பாவி பலஸ்தீன மக்கள் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.
யூதர்கள், பலஸ்தீனர்களிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளை உள்ளடக்கி அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ரஷ்யா என்பனவற்றின் ஆதரவோடு தமது இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டனர்.
1919 இல் முஸ்லிம்களின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா என்பனவற்றின் கட்டுப்பாட்டையும் துருக்கிப் பேரரசு இழந்தது.
இந்தப் பிரகடனம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளையும் சியோனிஸ சக்திகளையும் ஆத்திரமடைய வைத்தது.
எனவே, அவர்கள் அப்போது றியாத்தில் ஒரு சிறிய பழங்குடி இனத் தலைவராக இருந்த அப்துல் அஸீஸ் இப்னு அல் சவூத் என்பவருக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி, மக்கா நகர ஆளுனர் மீது தாக்குதல் நடத்துமாறு கூறினர்.
இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாத அப்துல் அஸீஸ், பிரிட்டிஷ் மற்றும் சியோனிஸ யூத சக்திகளின் உதவியோடு ஆளுனர் ஷரீப் ஹுஸேனுக்கு விசுவாசமான படையினர் மீது தாக்குதல் நடத்தி அவர்களை தோற்கடித்தார்.
அங்கிருந்து தப்பிச் சென்ற அந்தக் கூட்டம் அகபா என்ற இடத்துக்குச் சென்றுவிட்டது அதன் பிறகு துருக்கி கிலாபத்துக்கு எதிராக, சர்ச்சைக்குரிய வஹ்ஹாபிய சவூதி ஆட்சி உருவாக்கப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களை இணைக்கும் மையப் புள்ளியாக இருந்த கிலாபத் ஆட்சி முறை இவ்வாறு தான் அழித்தொழிக்கப்பட்டது.
அதன் பிறகு அப்துல் அஸீஸ் தலைமையில் பிரிட்டிஷ் மற்றும் யூத கொடுங்கோல் சக்திகளின் கரங்கள் சவூதி இல்லம் என்ற புள்ளியின் மூலம் இந்தப் பிராந்தியத்தில் ஸ்திரப்படுத்தப்பட்டது.
அல் சவூதி குடும்பத்தின் அமெரிக்காவுடனான உறவுகள் 1930ஆம் ஆண்டளவிலேயே தொடங்கி விட்டன.
தனது நாட்டின் எண்ணெய் வளங்களை சூறையாட அமெரிக்க கம்பனியொன்றை இப்னு சவூத் தெரிவு செய்ததன் மூலம் இந்த உறவுகள் தொடங்கின. அந்த காலகட்டத்தில் சவூதி அரேபியா ஏழ்மை மிக்க ஒரு நாடாக இருந்தது.
இந்த உறவுகளைப் பயன்படுத்தி அமெரிக்கா, அரபிகள் மத்தியில் யூதர்களின் நலன் பற்றிய பிரசாரங்களையும், அவற்றை பிராந்தியத்தில் ஊக்குவிப்பதற்கான சூழ்ச்சிகளையும் மேற்கொண்டது.
1943ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட், 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இப்னு சவூத்துக்கு கொடுத்து,
பலஸ்தீன மக்களுக்கு சொந்தமான பூமியில் இஸ்ரேலை ஸ்தாபிக்கும் திட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் அவரது செல்வாக்கை பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் மீது பிரயோகிக்குமாறு கேட்டுக் கொண்டார்
இதே காலப்பகுதியில் பெற்றோலிய வளங்களும் கண்டு பிடிக்கப்பட்டதால் இரவோடு இரவாக எல்லாமே மாறிப் போய்விட்டன. மிகப் பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை ஆரம்பித்த சவூதி அரேபியா, தனது செல்வத்தின் பெரும் பகுதியை அமெரிக்காவில் முதலீடு செய்தது.
இதன் தொடராக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவான நிலைக்கு வந்ததோடு சவூதி அரேபியா தனது பாதுகாப்பு தேவைகளுக்காக முழுக்க முழுக்க அமெரிக்காவில் தங்கியிருக்கும் நிலையும் ஏற்பட்டது.
இந்த நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, இஸ்ரேலுடன் சவூதி, இரகசியமான உறவுகளைப் பேண வேண்டும் என அழுத்தம் கொடுத்தது.
வேறு வழியின்றி இந்த அழுத்தத்துக்கு அடிபணிந்த சவூதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் காலப்போக்கில் மிக உறுதியான நிலையில் இன்னமும தொடருகின்றன.
இந்த நிலைமையத் தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேலிய சக்திகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தமது தீய நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற சவூதி அரேபியாவை ஒரு பங்காளியாகப் பயன்படுத்த ஆரம்பித்தன.
குறிப்பாக 1979இல் ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சி அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேலிய சக்திகளை வழிப்படையச் செய்தது.
அந்தப் புரட்சியை முளையிலேயே கிள்ளி எறியும் நோக்கில் அன்றைய ஈராக் அதிபர் சதாம் ஹுஸைனை ஈரான் மீது படையெடுப்பு நடத்துமாறு தூண்டிவிடும் பொறுப்பு சவூதி அரேபியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் சவூதி அரேபியா வெற்றி கண்டது. அதன் விளைவு சுமார் எட்டு வருட கால ஈரான் – ஈராக் கொடிய யுத்தம். இதனால் இரு தரப்பிலும் சுமார் பத்து லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இரு நாடுகளினதும் சுமார் 800 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் அழித்து நாசமாக்கப்பட்டன.
அதன் பிறகு சில வருடங்கள் கழித்து ஈராக் மீது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் நடத்தப்பட்ட படையெடுப்பு மற்றும் தாக்குதல்களுக்கு சவூதி அரேபியா மட்டும் 70 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக பஹ்ரேனை சேர்ந்த செல்வந்த வர்த்தகர் ஒருவர் பிற்காலத்தில் தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு 2010 முதல் 2011 வரையான அரபு வசந்த போராட்டத்தின் விளைவாக எகிப்திய மக்கள் மிக நீண்ட காலத்துக்குப் பின் தமக்கு விருப்பமான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு சாதகமான மொஹமட் முர்ஷியை ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்ட நியாயமான மற்றும் நீதியான தேர்தல் மூலம் தமது ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர்.
சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எகிப்து ஆனது. இஸ்ரேலுக்கு ஆதரவான சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கின் கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றத்தையும் சகித்துக் கொள்ள முடியாத தீய சக்திகள் சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து 11 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு எகிப்தில் செயற்கையான உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பனவற்றை ஏற்படுத்தி முர்ஷியின் ஆட்சியை இராணுவ புரட்சி மூலம் கவிழ்த்து தங்களுக்கு ஆதரவான இராணுவ சர்வாதிகாரி அப்துல் பத்தாஹ் அல் சிசியை ஆட்சிப் பீடத்தில் அமரச் செய்தனர்.
நாகரிக மயமாக்கல் மற்றும் மேற்குலக மயமாக்கல் என்ற பெயரில் சவூதி அரசு அண்மைக் காலங்களில் இஸ்லாத்தை முழுமையாக ஒதுக்கி வைக்கும் திட்டத்தையும் தொடங்கி உள்ளது.
இஸ்லாத்துக்கு விரோதமான இந்த மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சமயத் தலைவர்களையும் போதகர்களையும் கூட விட்டு வைக்காமல் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி அவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
ஈவு இரக்கமற்ற சவூதி அரசு மக்களை மிகத் தீவிரமாக நசுக்கி வருவதால் மக்கள் எதுவும் செய்ய முடியாமல் உள்ளனர்.
இன்று சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏனைய பெற்றோல் ஷேக்மாரும் முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேல் மற்றும் இந்திய முகாம்களுக்கு ஆதரவானவர்களாகவே இருந்து வருகின்றனர்.
இந்த சக்திகள் முஸ்லிம் நாடுகளில் தமது தீய நிகழ்ச்சி நிரலை அமுல் செய்ய துணையாக இருந்து வருகின்றனர்.
பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இழைத்து வருகின்ற கொடூரங்களையும், இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளையும் இவர்கள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.
சவூதி அரசு இஸ்லாத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இவ்வருடம் மார்ச் மாதத்தில் அவர்கள் ஒரேயடியாக 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றினர். அந்த நாட்டின் நீதித்துறையின் அவல நிலையை இது கோடிட்டுக் காட்டுகின்றது
சவூதி அரேபியா 2022இல் 196 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது. கடந்த 30 வருடங்களாக வருடாந்தம் அதிகளவான மரண தண்டனைகளை நிறைவேற்றிய நாடாகவும் சவூதி அரேபியா உள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன.
இவ்வாறான நிலைமைகளின் கீழ் இஸ்ரேலுடனான உறவுகளை சீர் செய்வது எதிர்வு கூற முடியாத பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
முஸ்லிம்களின் மூன்றாவது புனித நகரான ஜெரூஸலத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை, பலஸ்தீன மக்களுக்கு முடிவற்ற தொல்லைகளைக் கொடுத்து வருகின்ற இஸ்ரேலை அங்கீகரிப்பது, நிச்சயம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
லத்தீப் பாரூக்