விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலரை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குளம், கங்காகுளம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அம்மையப்பர் என்ற விவசாயி, ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை மாவட்ட ஆட்சியர் மாற்றி 4 மாதம் ஆன நிலையில் ஏன் மீண்டும் ஊராட்சி செயலர் வந்துள்ளார் என கேள்வி எழுப்பினார்.

இதனால் கோபமடைந்த தங்கபாண்டியன், விவசாயி அம்மையப்பரை காலால் எட்டி உதைத்தார். மேலும் ஊராட்சி செயலருக்கு ஆதரவாக மற்றொரு நபரும் அந்த விவசாயியின் கன்னத்தில் அறைந்தார்.

இந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் ஊராட்சி செயலாளர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி தங்கபாண்டியனை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version