ASICON 2018 நிகழ்ச்சி நடத்துவதற்கு 29 லட்சம் பணம் பெற்றுவிட்டு ஏஆர் ரஹ்மான் ஏமாற்றிவிட்டதாக இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் கூறியதற்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரஹ்மான் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ASICON 2018 நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான Association of Surgeon of India தரப்பு, 2018ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ரூ29 லட்சம் பெற்றுக்கொண்ட ஏஆர் ரஹ்மான் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்து புகார் அளித்தது.

இந்நிலையில் தான் Association of Surgeon of India தரப்பு வழக்கறிஞர் ஷப்னம் பானுவிற்கு, இசையமைப்பார் ஏ ஆர் ரஹ்மான் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

2018-ல் என்ன நடந்தது?

2018 மாநாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, அரசு அனுமதி வழங்காததால் பின்பு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட ரூ. 29.50 லட்சத்தை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் திரும்ப கேட்டது.

ரஹ்மான் வழங்கிய முன் தேதியிட்ட காசோலையானது பணம் இல்லாமல் திரும்பி வந்ததாக கூறி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

அந்த நோட்டீஸுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ரஹ்மான் தரப்பில் இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நற்பெயரை களங்கப்படுத்தியதற்காக 10 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும்!

ரஹ்மான் தரப்பில் வழங்கியிருக்கும் நோட்டீஸில், “இசைத்துறையில் பல்வேறு விருதுகளை பெற்று மதிப்புமிக்க நபராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் சமூகத்தில் பல தளங்களிலும் பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார்.

ASICON 2018 நிகழ்ச்சி நடத்திய இந்திய சர்ஜன் சங்கம் ரஹ்மான் மீது எழுப்பியுள்ள குற்றச்சாட்டு என்பது, அவரது நற்பெயரை கெடுக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பாகவும் உள்ளது.

அசிக்கான் அமைப்புடன் ரஹ்மான் எவ்விதத்திலும் தொடர்பிலோ, ஒப்பந்தத்திலோ இல்லாத நிலையில் மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள்.

தனக்கு கொடுத்ததாக கூறப்படும் பணத்தை தான் பெறவில்லை என ரஹ்மான் கூறியிருக்கிறார். மூன்றாவது நபரிடம் பணத்தை கொடுத்துள்ள இந்திய சர்ஜன் சங்கம் தேவையில்லாமல் ரஹ்மான் பெயரை இதில் ஈடுபடுத்தி உள்ளது.

ரஹ்மானுக்கு அனுப்பிய நோட்டீசை 3 நாட்களில் திரும்பப்பெற வேண்டும், பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.

ரஹ்மான் மீது சமூகத்தில் உள்ள நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடாக ரூ. 10 கோடி தர வேண்டும், தவறினால் சட்ட ரீதியாக உரிமையியல், குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version