உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்
தன்னுடைய புகழ்மிக்க வெற்றியைப் பற்றி எண்ணமிட்ட துஷ்ட காமனி, அது மகத்தானதாயினும் மனதுக்கு மகிழ்வளிக்க வில்லை என்பதைக் கண்டான். அதன் மூலம் லட்சக்கணக்கானவர்கள் அழிய நேரிட்டது என்பதை அவன் மறக்கவில்லை.
பியாங்கு தீபத்திலுள்ள தேரர்கள் [arahants in Piyahgudipa] இவனுடைய மனதில் உள்ளதை அறிந்ததும், அரசனைத் தேற்றுவதற்கு எட்டு தேரர்களை அனுப்பி வைத்தனர் ” ….. எனக்கு எப்படி ஆறுதல் ஏற்பட முடியும்? வணக்கத்துக்கு உரியவர்களே!” என்று துஷ்ட காமனி கேட்டான், அதற்கு தேரர்கள் “இந்தச் செய்கையின் காரணமாக நீ சுவர்க்கத்துக்குப் போகும் பாதையில் எவ்விதத் தடையும் ஏற்படாது. ஒன்றரை மனிதர்கள் மட்டுமே உன்னால் இங்கு கொல்லப்பட்டார்கள். ஒருவர் மும்மணிகளில், அதாவது புத்தம், தர்மம், சங்கம் ஆகிய திரிசரணத்தில் [three jewels] சரணடைந்து விட்டார்.
உண்மையில் இது தமிழர், சிங்களவர் யுத்தம் அல்ல, ஏனென்றால் அப்ப சிங்கள இனம் என்று ஒன்றுமே இல்லை. ஆக புத்த மதத்தை பின்பற்றுபவன், சிவனை வழிபாடுபவன் என்ற மத வழிபாடே இருந்தது. மேலும் சிவனை வழிபடுபவர்கள் கட்டாயம் தமிழனாய் அல்லது இலங்கையின் தொல்குடிகளான நாகர்களாக இருந்தனர். அதனால் தான் தமிழர்கள் மேல் போர் தொடுக்கப்படுகிறது.
அதாவது துட்ட கைமுனு அநீதிக்கு எதிராக போர் செய்யவில்லை, உன்னத நீதிக்கு எதிராக, புத்தசமயத்தை நிலை நாட்ட, புத்தரின் கொள்கைகளை முற்றிலும் மீறி கையான்ட ஒரு செயல் பாடாகும்.
மகாவம்சத்தில் புத்தரின் முதலாவது வருகையே, புத்தர் தன் கொள்கைகளின் மகிமைகளை, இலங்கையில் நிலை நாட்டி, பிரகாசிக்க வைப்பதற்காக, இயக்கர்களின் மனதில் பயத்தை உண்டாக்கி, அவர்களை அவர்களின் சொந்த வாழ்விடத்தில் இருந்து, அதாவது தாய் நாட்டில் இருந்து துரத்துகிறார்.
இப்படியான கதாபாத்திரங்களின் தாக்கம் தான், கி.பி ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பக்திப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பந்த நாயனாரை, ஈழத்தின் மன்னாரில் உள்ள மாதோட்டத்தின் பாலாவி ஆற்றங்கரையில் அமைந்த திருக்கேதஸ்வர தலத்தை நோக்கி பாடும் பொழுது, “புனையப்பட்ட துகிலை உடையவராய்ப் புறம் பேசும் புத்தர்களாகிய அறிவிலாரும், ஏமாற்றும் இயல்பினராய் நின்றுண்ணும் மரபினர்களாகிய சமணரும், கூறும் அறியாமை உரைகளைக் கேளாதீர்” என ஆலோசனை அல்லது அறிவுரை கூற அவரை தூண்டியதோ யான் அறியேன்.
“புத்தராய்ச் சில புனை துகில் உடையவர், புறன் உரைச்
சமண் ஆதர்,
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை
கேளேன்மின்!
மத்தயானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர்,
மாதோட்டத்து
அத்தர், மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம்
அடைமி(ன்)னே!”
தொடரும்>>>>>
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்