உக்ரேனில் நடைபெற்றுவரும் போர் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் வாய்ப்பு உள்ளது என மக்களை நேசிக்கும் அனைத்துத் தரப்புகளும் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்த வண்ணமேயே உள்ளன.
அது மாத்திரமன்றி, இந்தப் போர் அணுவாயுத யுத்தமாக உருவெடுத்து மனித குல அழிவுக்குக் கூடக் காரணமாகலாம் என்கின்ற எதிர்வு கூறல்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், போரை ஊக்குவிக்கும் மேற்குலக நாடுகள் இந்த எச்சரிக்கைகளையோ எதிர்வுகூறல்களையோ கவனத்தில் கொள்ளத் தயாராக இல்லை.
மாறாக, மேலும் மேலும் போரை உக்கிரமாக நடத்துவதற்குத் தேவையான படைத் தளபாடங்களையும் பொருண்மிய உதவிகளையும் உக்ரேனுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.
மறுபுறம், ரஷ்யா மீதும் அதன் நட்பு நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை மென்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
உக்ரேனில் பதவியில் உள்ள அரசாங்கத்தைக் காப்பதன் ஊடாக உக்ரேன் மக்களைப் பாதுகாக்க முடியும், ரஷ்யா என்கின்ற ‘கொடுமையான அரக்கனிடம்’ இருந்து உலகைக் காப்பாற்ற முடியும் எனப் போதிக்கின்ற மேற்குலகம், அணுவாயுத யுத்தம் ஒன்று வெடிக்குமானால் தனது சொந்த நாட்டு மக்களைக் கூடக் காப்பாற்றிவிட முடியாது என்ற உண்மையை வெளியே சொல்லாமல் மறைத்து வருகின்றது.
மிகச் சரியாகச் சொல்வதானால் அத்தகைய ஒரு சிந்தனை மக்கள் மனதில் எழுந்துவிடாமல் இருப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அதேவேளை ஒரு அணுவாயுத யுத்தம் ஒன்றை நோக்கிய தயார்படுத்தலில் ஈடுபட்டும் வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக பிரித்தானியாவில் அடுத்த ஆண்டில் அணுவாயுதங்களைச் சேமிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தலைநகர் லண்டனில் இருந்து 100 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள லேக்கன்ஹீத்தில் உள்ள விமானப் படைத் தளத்தில் இதற்கான முன்னாயத்த வேலைகள் நடப்பதாகத் தெரிய வருகிறது.
இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக 50 மில்லியன் டொலர் நிதிக் கோரிக்கை அமெரிக்க விமானப் படையினரால் கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்க காங்கிரஸிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
லேக்கன்ஹீத் விமானப் படைத் தளம் 1948ஆம் ஆண்டு முதல் அமெரிக்கப் படையினரின் பாவனையிலேயே உள்ளது.
1954இல் இங்கு முதன்முதலாக அணுகுண்டுகள் களஞ்சியப்படுத்தப்பட்டன. எனினும், பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாகவும், சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்னான அரசியல் சூழல் காரணமாகவும் 2008ஆம் ஆண்டு அங்கு களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த அணுவாயுதங்களை அமெரிக்கா விலக்கிக் கொண்டது.
இந்த விமானப் படைத் தளத்தில் ஏற்கனவே இரண்டு பாரிய விபத்துகள் நடந்துள்ளன. இரண்டு தடவைகளிலும் பாரிய அனர்த்தங்கள் எதுவும் நிகழ்ந்துவிடாத போதிலும் அவை மிக மோசமான விபத்துகள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
1956ஆம் ஆண்டில் நிகழ்ந்த விபத்தின் போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த பி-47 ரக விமானம் ஒன்று அணுவாயுதங்கள் சேமிக்கப்பட்டிருக்கும் கிடங்கின் மீது விழுந்து வெடித்தது.
இதன்போது விமானிகள் நால்வரும் மரணத்தைத் தழுவினர். இந்த விபத்தின் போது அணுகுண்டுகள் எதுவும் வெடிக்காமல் போனமை மிகப்பெரும் அதிசயம் எனக் கருதப்பட்டது.
விபத்து நாளில் அணுகுண்டுகள் வெடித்திருக்குமானால் கிழக்கு இங்கிலாந்து முழுவதும் பாலைவனமாக மாறி இருந்திருக்கும்.
5 ஆண்டுகளின் பின்னர் அடுத்த விபத்து நிகழ்ந்தது. அணுகுண்டைக் காவிச்சென்ற விமானம் ஒன்று விமானியின் தவறு காரணமாகத் தீப்பிடித்துக் கொண்டது.
என்றாலும் மிகுந்த சிரமத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு குண்டு வெடிக்காமல் காப்பாற்றப்பட்டது.
இந்த விபத்துகள் தொடர்பான செய்திகள் பிரித்தானிய அரசாங்கத்தினாலும் அமெரிக்க அரசாங்கத்தினாலும் வெளியே தெரியாமல் பல வருடங்களாக மறைக்கப்பட்டிருந்தன. முறையே 1979 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளிலேயே இந்தச் செய்திகள் வெளியிடப்பட்டன.
தற்போதைய நிலையில் பிரித்தானியாவுக்கு மீண்டும் அணுகுண்டுகளை நகர்த்தும் அமெரிக்காவின் முயற்சி காரணமாக பிரித்தானிய மக்களுக்கு மாத்திரமன்றி ஐரோப்பியப் பிராந்தியம் முழுவதற்குமே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஐந்து நாடுகளில் அமெரிக்கா அணுகுண்டுகளைச் சேமித்து வைத்துள்ளது. ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள ஆறு விமானப் படைத் தளங்களில் 100 அணுகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அணுவாயுதங்களை வைத்திருப்பது தொடர்பில் உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட போதிலும் அது தொடர்பில் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை.
ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் கூட அமெரிக்காவின் அணுவாயுதங்கள் தங்கள் நாட்டில் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அவற்றை அகற்றிக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்துள்ளன. இருந்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
உலகின் பல நாடுகளில் மின்சாரம் உள்ளிட்ட தேவைகளுக்காக அணுசக்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.
இத்தகைய சக்தித் தேவைகளுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதற்குக் கூட உலகம் முழுவதும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
பல்வேறு தன்னார்வத் தொண்டு அமைப்புகள் இதற்கெதிராகத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றன. ஆனால், பிரித்தானியாவில் அமெரிக்கா மீளவும் கொண்டு வரவுள்ள அணுகுண்டுகள் தொடர்பில் இதுவரை பாரிய சலசலப்புகள் எதனையும் காணவில்லை.
இதேவேளை, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தொடர்பில் ரஷ்யா கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா இத்தகைய நகர்வுகளை மேற்கொள்ளுமானால் பதிலுக்கு ரஷ்யாவைப் பாதுகாக்கும் நோக்கில் தமது நாடும் அணுவாயுதங்களை நட்பு நாடுகளுக்கு நகர்த்த வேண்டிய சூழல் உருவாகும் என்ற எச்சரிக்கை ரஷ்யாவிடம் இருந்து வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, ரஷ்ய அணுவாயுதங்களை பொலாரஸ்ஸுக்கு அனுப்பும் முடிவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எடுத்துள்ளார் என்பது தெரிந்ததே.
இந்த வேளையில், அமெரிக்கா அணுவாயுத யுத்தம் ஒன்றுக்கு உண்மையிலேயே தயாராகிறதா என்ற கேள்வி எழுகின்றது.
அவ்வாறான ஒரு யுத்தத்தை அமெரிக்கா எதிர்பார்த்து இருக்குமானால், அதிலும் ரஷ்யா போன்ற ஒரு அணுவாயுத வல்லரசு ஒன்றுடன் மோதத் தயாராகுமானால் அதனால் உலகமே அழிந்துபோகும் வாய்ப்பு உள்ளது என்பதை அமெரிக்கா அறியாதா? அல்லது மனித குலமே அழிந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்துவிட்டதா என்ற கேள்விகள் எழுகின்றன.
ஏற்கெனவே, 1945ஆம் ஆண்டில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்களில் அணுகுண்டு வீசித் தாக்குதல் நடத்திய வரலாறு அமெரிக்காவுக்கு உள்ளது.
உலக வரலாற்றில் இன்றுவரை அணுவாயுதத் தாக்குதல்களை மேற்கொண்ட ஒரேயொரு நாடாகவும் அமெரிக்காவே உள்ளது.
தனது கடந்தகாலத் தவறுக்காக ஏலவே மன்னிப்புக் கோரியுள்ள அமெரிக்கா மீண்டும் அதே தவறைச் செய்வதற்கு முனைப்புக் காட்டுவதை எவ்வாறு புரிந்து கொள்வது?
-சுவிசிலிருந்து சண் தவராசா-