தமிழ்த் திரையுலகில் அழிக்க முடியாத தடத்தைப் பதித்த மிகச் சில நடிகர்களில் சிவாஜி கணேசனும் ஒருவர்.

பல மொழிகளிலும் சுமார் 300 படங்களில் நடித்திருந்த சிவாஜி கணேசனுக்கு சினிமா என்பது தொழில் அல்ல; வாழ்க்கை.

மிகச் சிறந்த நடிகராக அறியப்பட்ட சிவாஜி கணேசன் கடைசி வரை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கவே இல்லை. அவர் இறுதியாக நடிக்க விரும்பிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடிக்கவில்லை. அது என்ன கதாபாத்திரம்?

தமிழ் திரையுலகில் அழிக்க முடியாத தடத்தைப் பதித்த மிகச் சில நடிகர்களில் சிவாஜி கணேசனும் ஒருவர். 1952இல் தனது 24வது வயதில் துவங்கி, 1999 வரை அரை நூற்றாண்டுக்கு தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தார் அவர்.

பராசக்தியில் துவங்கி, பூப்பறிக்க வருகிறோம் படம் வரை சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களைப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்திருக்க வேண்டியது இரண்டாவது அம்சமாகத்தான் இருந்தது. சிவாஜியின் முகமே, பலவற்றை உணர்த்திவிடும்.
விளம்பரம்

 

சிவாஜிக்கு பெயர் சூட்டிய பெரியார்

1928வது வருடம் அக்டோபர் 1ஆம் தேதி விழுப்புரத்தைச் சேர்ந்த சின்னைய்யா – ராஜாமணி தம்பதிக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார் சிவாஜி.

இதை முன்னாள் பிரதமர் வாஜ்பாயியே சுட்டிக்காட்டினார். 2001ஆம் ஆண்டில் சிவாஜி மறைந்தபோது அவர் அனுப்பிய அஞ்சலிக் குறிப்பில், “கட்டபொம்மனாக அவர் நடித்ததைப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

கூர்மையான வசனம், கத்தியைவிட ஆழமாகப் பாயும் என்பதை உணர்த்திய அற்புதமான நடிகர் சிவாஜி,” என்றார் வாஜ்பாயி.

சிவாஜி கணேசன், 1928வது வருடம் அக்டோபர் 1ஆம் தேதி விழுப்புரத்தைச் சேர்ந்த சின்னைய்யா – ராஜாமணி தம்பதிக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார்.

அவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் கணேசமூர்த்தி. சிறு வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி, யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளை என்பவர் நடத்திய மதுரை ஸ்ரீ பாலகான சபாவில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் சிவாஜி.

சில ஆண்டுகளுக்குப் பிறகு எம்.ஆர். ராதாவின் நாடகக் கம்பெனிக்கு மாறியவர், பின்னர் சகஸ்ரநாமத்தின் நாடகக் கம்பனியில் சேர்ந்தார்.

அங்கிருந்த போதுதான் ‘திராவிட நாடு’ அலுவலகத்தில் பிற்காலத்தில் முதலமைச்சரான அண்ணாவை அவர் சந்திக்க நேர்ந்தது. அவர் எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்தில் சிவாஜியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து.

சுயமரியாதை இயக்க மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட அந்த நாடகத்தைப் பார்த்த பெரியார், சிவாஜியாக நடித்த கணேசனுக்கு ‘சிவாஜி’ என்று பெயர் சூட்டினார்.

ஆனால், நாடகங்களில் நடிக்கும்போது சற்று அதிகமாக நடித்தது பற்றியும் அது குறித்து பெரியாரே சுட்டிக்காட்டியதைப் பற்றியும் தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார் சிவாஜி.

பெங்களூருவில் சிவாஜி நடித்துக்கொண்டிருந்த ‘விதி’ என்ற நாடகத்தைப் பார்க்க பெரியார் வந்திருந்தார். அதில் சிவாஜி வில்லனாக நடித்துக்கொண்டிருந்தார். அவரை நாயகி சுட்டுவிடுகிறாள்.

“ஆனால், நான் சுட்டதும் உடனே விழமாட்டேன். ஆ.. ஊ… என்று சத்தம்போட்டு அப்படி இப்படி என்று சுத்தி, பல்டி அடித்துத்தான் கீழே விழுவேன். அப்படி நடித்தால்தான் மக்கள் கைதட்டுவார்கள்.

நான் இப்படி நடித்துக்கொண்டிருக்கும்போது, அதைப் பார்த்த பெரியார் எழுந்து, டேய் மடையா, அவள்தான் சுட்டுவிட்டாளே… கீழே விழுந்து இறந்து போடா என்று சத்தம் போட்டுச் சொன்னார்” என தனது சுயசரிதையில் நினைவுகூர்கிறார் சிவாஜி.

11 நாட்கள் தொடர்ந்து ஸ்டூடியோவில் நடித்த சிவாஜி

1950ல் தொடங்கிய பராசக்தி படம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1952ல் வெளியானது.

இதற்குப் பிறகுதான், பி.ஏ. பெருமாளும் ஏ.வி.எம்மும் இணைந்து தயாரித்த பராசக்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு சிவாஜிக்கு வந்தது. இந்தப் படத்திற்கு மேக்கப் டெஸ்ட் செய்வதற்காக, திருச்சியில் இருந்தவரை, சென்னைக்கு விமானத்தில் வரவழைத்தார்கள்.

விமானப் பயணங்கள் அரிதாக இருந்த அந்தக் காலத்தில், சினிமாவில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தனக்கு விமானப் பயணம் வாய்த்ததாகச் சொல்கிறார் சிவாஜி.

பராசக்தி படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தாலும், பலரும் அவரது திறமை குறித்து தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வந்தனர். “நான் இதைக் கேட்டு ஓ..வென்று அழுவேன். ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நிறைய வேப்ப மரங்கள் இருக்கின்றன.

அந்த மரங்களெல்லாம் நான் விட்ட கண்ணீரில்தான் வளர்ந்தன என்று கூறினால்கூடப் போதாது” என்கிறார் சிவாஜி.

1950ல் தொடங்கிய பராசக்தி படம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1952ல் வெளியானது. அந்தப் படம் அடைந்த வெற்றி சிவாஜியை ஒரு பரபரப்பான நடிகராக்கியது.

1953க்குள் 7 படங்களில் நடித்து முடித்த அவர், 1957க்குள் 45 படங்களில் நடித்து முடித்தார். 1979க்குள் 200 படங்களில் நடித்து முடித்தார் சிவாஜி.

சிவாஜி உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஒரே நாளில் மூன்று ஷிப்டுகளாக படங்களை நடித்துக் குவித்திருக்கிறார். 1962ல் அவர் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டியிருந்தது.

அந்தத் தருணத்தில் ‘பலே பாண்டியா’ படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார் சிவாஜி. அமெரிக்கா செல்வதற்கு முன்பாக படத்தின் படப்பிடிப்பை முடித்தாக வேண்டும். இதனால், 2ஆம் தேதி ஸ்டுடியோவுக்குள் சென்றவர், 12ஆம் தேதிதான் வெளியில் வந்தார்.

11 நாட்களில் ஒட்டுமொத்த படத்தையும் நடித்துக் கொடுத்தார் அவர். இத்தனைக்கும் அதில் சிவாஜிக்கு மூன்று ரோல்கள்.

என்னதான் ஹீரோவாக உச்சகட்டத்தில் இருந்தாலும் பல மாறுபட்ட பாத்திரங்களிலும் அவர் நடிக்கத் தயங்கியதில்லை. திரும்பிப்பார், துளி விஷம், கூண்டுக்கிளி ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்தார் சிவாஜி.

 

தேசிய விருது குறித்து என்ன சொல்லியிருக்கிறார் சிவாஜி?

1995இல் செவாலியே விருதை வழங்கி பிரான்ஸ் அரசு அவரைப் பெருமைப்படுத்தியது.

1954இல் சிவாஜி நடித்த ‘அந்த நாள்’ படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. 1960ல் ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்பட விழா கெய்ரோ நகரில் நடந்தது. அதில் சிவாஜி நடித்த “வீரபாண்டிய கட்டபொம்மன்” படமும் பங்கேற்றது.

இந்தப் படத்தை அந்தப் படவிழாவிற்கே அனுப்பாமல் இருக்க சிலர் முயற்சித்ததாகவும் அதனை மீறி இந்தப் படம் அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார் சிவாஜி. ஆனால், படம் அங்கே திரையிடப்பட்டபோது பெரும் வரவேற்புக் கிடைத்தது. சிவாஜிக்கு சிறந்த நடிகருக்கான விருது அந்த விழாவில் அளிக்கப்பட்டது.

கடந்த 1963இல் தமிழ்நாடு அரசு கலைமாமணி பட்டத்தை வழங்கி அவரைச் சிறப்பித்தது. 1966இல் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1984ல் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 1986இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.

இருந்தபோதும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சிவாஜி பெற்றதே இல்லை. மக்களின் அங்கீகாரமே போதும் என்கிறார் சிவாஜி.

“அரசியலாக இருந்தாலும் சரி, கலை போன்ற வேறு துறையாக இருந்தாலும் சரி, ஒரு அங்கீகாரம் வேண்டுமென்றால் லாபி செய்ய வேண்டும் என்ற நிலை நம் நாட்டில் இருக்கிறது.

அது எனக்குப் பழக்கமில்லை. அரசாங்கமே பார்த்து அவர்களாகவே பட்டமோ, பதவியோ கொடுத்தால் மட்டுமே நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். இல்லை என்றாலும் அதைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை.

எப்பொழுதுமே மக்கள் என்னைப் பாராட்டினார்கள். பெருமைப்படுத்தினார்கள். என் நடிப்பிற்கு அவர்களிடமிருந்து ரெகக்னிஷன் கிடைத்தது. அதுவே எனக்கு மாபெரும் விருது” என்று குறிப்பிடுகிறார் சிவாஜி.

கடந்த 1995இல் செவாலியே விருதை வழங்கி பிரான்ஸ் அரசு அவரைப் பெருமைப்படுத்தியது. இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது 1997இல் சிவாஜிக்கு வழங்கப்பட்டது.

 

சிவாஜி ஆசைப்பட்ட வேடம் என்ன?

சுமார் 300 படங்களில் எத்தனையோ வேடங்களில் நடித்துவிட்டாலும் கடைசியாக ஒரு வேடத்தில் நடிக்க வேண்டுமென விரும்பினார் சிவாஜி

ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, பத்து லட்சம் ரூபாய்க்கு நடித்துக் கொடுத்துவிடுவார் என்று சிவாஜியின் நடிப்பை குறிப்பிட்டவர்கள் உண்டு. அந்த அளவுக்கு தனது நடிப்பில் செறிவை கொண்டுவந்தவர் சிவாஜி.

தற்போதைய காலகட்டத்தினருக்கு அவருடைய நடிப்பு மிகை நடிப்பாகப் படலாம். ஆனால், நாடக மேடையிலிருந்து வளர்ந்துவந்த சிவாஜிக்கு, அது இயல்பாகத்தான் இருந்தது.

“மெத்தட் ஆக்டிங் என்பதெல்லாம் வெறும் தியரிதான். அம்மா இறந்துபோன காட்சியில் கொஞ்ச நேரம் கழித்து அம்மா இறந்துவிட்டாயா என்று கேட்பார் நடிகர்.

இது மெத்தட் ஆக்டிங். இது டியூப் லைட் போல. அம்மா இறந்துவிட்டாள் என்று கூறியவுடனே ஐயோ, அம்மா இறந்துவிட்டாயா என்று பதற வேண்டும். கதற வேண்டும். அதுதான் ஜனரஞ்சகமான நடிப்பு. அதுதான் ஆக்டிங்.

உயிரைக் கொடுத்து நடித்தால் ஓவர் ஆக்டிங் என்கிறார்கள். கொஞ்சம் சாது போல நடித்தால் இந்தப் படத்தில் சிவாஜி நடிக்கவேயில்லையே என்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவே கிடையாது.

மக்கள் எதை நம்மிடம் எதிர்பார்க்கிறார்களோ, அதுபோல் நடிக்க வேண்டும். அதுதான் எனக்குத் தெரியும்” என மிகை நடிப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்தார் சிவாஜி.

சுமார் 300 படங்களில் எத்தனையோ வேடங்களில் நடித்துவிட்டாலும் கடைசியாக ஒரு வேடத்தில் நடிக்க வேண்டுமென விரும்பினார் சிவாஜி.

“எத்தனையோ வேடங்கள் போட்டாலும் இனி வரும் நாட்களில் ஒரே ஒரு வேடம் போட வேண்டுமென ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். அது தந்தை பெரியார் போல நடிக்க வேண்டும் என்பதுதான்” என்றார் சிவாஜி.

அவரது அந்த விருப்பம் நிறைவேறவேயில்லை.

 

Share.
Leave A Reply

Exit mobile version