ஹைதராபாத்: தெலங்கானாவில் பூங்கொத்து கொடுக்க காலதாமதம் செய்ததால் மேடையிலேயே உள்துறை அமைச்சர் மகமுத் அலி அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.

அந்த கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவ் முதல் அமைச்சராக உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தெலங்கனாாவில் உள்துறை அமைச்சராக இருப்பவர் மகமுத் அலி. இவர் சிறைத்துறை மற்றும் தீயணைப்பு சேவைகள் துறைகளையும் கூடுதலாக நிர்வகித்து வருகிறார்.

அதேபோல் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் தாலசானி சீனிவாஸ் யாதவ்.

இவர் பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இந்த விழாவுக்கு உள்துறை அமைச்சர் மகமுத் அலி சென்றார்.

மேடைக்கு சென்ற மகமுத் அலி, அமைச்சர் தாலசானி சீனிவாசை ஆரத்தழுவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பிறகு அவர் தனது அருகே உள்ள பாதுகாவலரிடம் பூங்கொத்து கேட்டார். அது அவருக்கு சரியாக கேட்கவில்லை. இதனால் என்ன வேண்டும் சார்? என பாதுகாவலர் கேட்க முயலவே, கோபமடைந்த மகமுத் அலி கையை நீட்டி அவரை அறைந்தார்.

இதை சற்றும் எதிர்பாராத பாதுகாவலர் உடனே அருகில் இருந்தவரிடம் பூங்கொத்து வாங்கி மகமத் அலியிடம் கொடுத்தார்.

அதனை அவர் அமைச்சர் தாலசானி சீனிவாஸ் யாதவிடம் வழங்கினார். இதற்கிடையே தான் பாதுகாவலரை உள்துறை அமைச்சர் மகமத் அலி மேடையில் வைத்து அறைந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமைச்சர் மகமத் அலியின் இந்த செயலுக்கு  எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாஜகவை சேர்ந்த ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில், ‛‛தெலுங்கானா உள்துறை அமைச்சர் பூங்கொத்து கொடுக்க தாமதித்ததால், பொதுமக்கள் முன்னிலையில் அவரது பாதுகாவலை அறைந்தது வெட்கக்கேடானது.

இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. போலீஸ் அதிகாரியின் வேலை என்பது பூங்கொத்து கொடுப்பதா? இல்லை பாதுகாப்பு வழங்குவதா? இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.

இது குடும்ப அரசியல், ஊழலின் ஊற்றாக இருக்கும் பிஆர்எஸ் கட்சியின் விவிஐபிக்களின் திமிர்பிடித்த மனநிலையை எடுத்து காட்டுகிறது.

இவர் தான் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களை இழிவுப்படுத்தினார். இன்று பாதுகாவலரை அறைந்துள்ளார்.

இதனால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்துவிட்டு அனைத்து போலீஸ் அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்க வைக்கப்படுவாரா? இல்லை வாக்குவங்கி அரசியலுக்காக அவரை தொடர்ந்து பதவியில் இருக்க வைப்பார்களா?” என விமர்சனம் செய்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version