ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன.

சனிக்கிழமை காலை முதல் இஸ்ரேல் விமானப்படை நடத்தும் தாக்குதல்களில் 370 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மறுபுறம், ஹமாஸ் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் இதுவரை 600 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஸாவில் என்ன நடக்கிறது?

காஸா மீது இரண்டாவது நாளாக குண்டுமழை பொழியும் இஸ்ரேல், அங்கே ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக தெரிவித்துள்ளது.

காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்களுக்குச் செல்லுமாறு அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.

பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்ததாக அங்கிருப்பவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.

இஸ்ரேலுக்குள் ராணுவம் – ஹமாஸ் சண்டை

இஸ்ரேல் எல்லைக்குள் அந்நாட்டு படைகளுக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் இடையே குறைந்தது 22 இடங்களில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன.

 

இஸ்ரேல் படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. உரிம், பாரி, நஹல் ஓஸ், நேட்டிவ் ஹதாரா, ஜிகிம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இது போன்ற மீட்புப் பணிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் “நிலைமை மதிப்பீட்டிற்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும்” என்று ராணுவம் கூறுகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலிய அதிகாரிகள் தங்களது நாடு “இன்னும் போரைத்” தொடர்வதாகக் கூறியுள்ளனர். [மேலும்] ஹமாஸ் குழுவினரிடம் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களை மீட்கும் நடவடிக்கைகளை இன்னும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக” தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்களைத் தொடங்கி 24 மணி நேரத்திற்கும் மேலாக நாட்டின் தெற்கு பகுதியில் வசிக்கும் சமூகங்களுக்குள் ஊடுருவிய நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் இதுபோன்ற தாக்குதல்கள் குறித்த கூடுதல் விவரங்களைப் பார்ப்போம்.

தெற்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் இஸ்ரேலிய படைகளுக்கும் பாலத்தீன ஆயுதக்குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் தென்பகுதியில் பெரும்பாலான பகுதிகளின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளதாக ராணுவத்தை மேற்கோள் காட்டி ஹாரெட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் காசா எல்லைக்கு அருகில் உள்ள பீரி மற்றும் ஸ்டெரோட் உள்ளிட்ட பகுதிகளில் சண்டை தொடர்கிறது.

ஜேக் மார்லோ என்ற பிரிட்டிஷ் குடிமகன் காணாமல் போனதை இங்கிலாந்தில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தாக்குதல் நடந்தபோது அவர் காசா எல்லைக்கு அருகிலுள்ள வெளிப்புற நடன விழாவில் பாதுகாப்பு ஊழியராக பணிபுரிந்ததாகத் தெரியவந்துள்ளது.

600 இஸ்ரேலியர்கள் பலி, 100 பேர் பணயக் கைதிகளாக சிறைபிடிப்பு

யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேலில் நடந்த வன்முறையிலேயே மிக மோசமான வன்முறையை நிகழ்த்தி, பணயக் கைதிகள் எல்லையைத் தாண்டி காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர்.

ஹமாஸின் தரை, வான் மற்றும் கடல்வழி தாக்குதல்களில் பொதுமக்கள், ராணுவத்தினர் என குறைந்தது 600 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடக்கத்தில் ஏவப்பட்ட 7,000 ராக்கெட்டுகளுடன் கூடுதலாக 3,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

 

இஸ்ரேலுக்கு மேலும் ஒரு முனையில் போர் அபாயம்

ஏற்கெனவே இஸ்ரேலிய நிலைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய சாதாரண பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மட்டுப்படுத்திய நிலையில், லெபனானின் தெற்கு எல்லையில் உள்ள நிலைமை இப்போது அமைதியாக உள்ளது.

ஆனால் இஸ்ரேல்-பாலத்தீன மோதலின் அச்சுறுத்தல் லெபனான் நாடு முழுவதிலும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

இரானிய ஆதரவு குழுவான ஹிஸ்புல்லா தனது இலக்கை கவனமாக தேர்ந்தெடுத்தது. சர்ச்சைக்குரிய 3 நிலைகளில் மட்டுமே அந்த அமைப்பு தாக்குதல் நடத்தியது. ஆனால், அதை விடப் பெரிய அளவில் அந்த அமைப்பு தாக்குதலை நடத்த முடியும்.

இரானைப் போலவே இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் குழுவினருக்கு தற்போதைய தாக்குதல் குறித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளது. ஹமாஸ் குழுவின் முன்னேற்றம் குறித்து “ஆழமாகக் கவனித்து வருவதாகவும்” அந்த அமைப்பு கூறியுள்ளது.

தற்போதைய தாக்குதல்கள் “பாலத்தீன மக்களின் இசைவைப் பெற்றுள்ளது” என்று அதன் அறிக்கை கூறுகிறது.

ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிடம் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. அவை இஸ்ரேலிய எல்லைக்குள் ஆழமாகச் சென்று தாக்கக் கூடியவை.

ஏவுதளம் மற்றும் பிற தளங்களை குறிவைத்து உடனடியாக பதிலடி கொடுத்த இஸ்ரேல், ஏற்கனவே தனது வடக்கு எல்லைக்கு வலுவான ராணுவ குழுக்களை அனுப்பியுள்ளது. அது ஒரு நீண்ட மோதலைத் திட்டமிடுவதாகவும், காஸாவில் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவெடுத்திருப்பதாகவும் கூறுகிறது.

தற்போதைய தாக்குதல்களின் அளவு வரம்பிற்குட்பட்டது. இரு தரப்பினரும் தங்கள் தாக்குதல்களை கவனமாக அளவீடு செய்து மேற்கொள்கின்றனர்.

மேலும் முழு அளவிலான போரைத் தூண்டும் காரணிகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால் ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகளில் உள்ள மறைமுகமான அச்சுறுத்தல், இதே நிலை நீடிப்பதற்குப் பதிலாக நிலைமை மோசடையும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் ஹிஸ்புல்லா அமைப்பு என்பது லெபனான் நாடு அல்ல. அந்த அமைப்பை எதிர்க்கும் பலர் நாட்டில் உள்ளனர்.

இன்னும் அரசியல் முடக்கத்தால் அந்த அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது – தற்போதைய நிலையில் அந்த அமைப்புக்கு சரியான தலைமையும் இல்லை என்பதுடன் கடும் பொருளாதார நெருக்கடியில் அந்த அமைப்பு சிக்கித் தவிக்கிறது.

காசாவில் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர்

எகிப்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்

எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரில் இரண்டு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளும், அவர்களது எகிப்திய சுற்றுலா வழிகாட்டியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த நகரத்தில் இருந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது ஒரு போலீஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த அதிகாரி தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அடையாளம் தெரியாத பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி எக்ஸ்ட்ரா நியூஸ் தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது.

பல தசாப்தங்களில் எகிப்தில் இஸ்ரேலியர்கள் மீதான இத்தகைய தாக்குதல் இதுவே முதல் முறையாகும்.

குறைந்தது 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர் – துருக்கியில் உள்ள தூதரகம்

இதுவரை குறைந்தது 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 12க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று துருக்கியிலுள்ள இஸ்ரேலிய தூதரகம் இஸ்ரேலின் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 2,000 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 19 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை இஸ்ரேலால் நேரடியாக உறுதிப்படுத்தப்படவில்லை.

காசாவில் 313 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, சனிக்கிழமை முதல் இஸ்ரேலிய பதில் வான்வழித் தாக்குதல்களால் காஸாவில் 313 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; கிட்டத்தட்ட 2,000 பேர் காயமடைந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் பலி; பலர் கைது – இஸ்ரேல்

காசாவில் இருந்து நடந்த தக்குதலுக்கு பிறகு, பாலஸ்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி, இஸ்ரேலிய சமூகங்களைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன அறிக்கையின்படி, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தர்கள் தற்போது கொல்லப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

இதுவரை எட்டு இடங்களில் தீவிரவாதிகளுடன் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல்

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது

இஸ்ரேல் – பாலத்தீனம் இடையே நூறாண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனால், அங்கே குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடுகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

எனினும், 2021-ம் ஆண்டு இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான 11 நாள் போருக்குப் பிறகு ஒப்பீட்டளவில் பெரிய அளவில் அங்கே மோதல்கள் நடக்கவில்லை. அதற்கு ஹமாஸ் அமைப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

இருபதே நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலின் பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. இதில், 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 740 பேர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல், லெபனான் மற்றும் சிரியா ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மவுண்ட் டோவ் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

லெபனான் ஹிஸ்புல்லா இயக்கம் இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டாம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஹிஸ்புல்லா ஒரு ஷியா இஸ்லாமிய அரசியல், ராணுவ மற்றும் சமூக அமைப்பு. இது லெபனானில் கணிசமான அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஹமாஸை போலவே, இது இஸ்ரேலின் பரம எதிரியான இரானால் ஆதரிக்கப்படுகிறது. 2006இல் இஸ்ரேலுடன் ஒரு மாத காலப் போரை நடத்தியது.

ஜூலை மாதம், லெபனானில் இருந்து ஒரு சிறு ஏவுகணை ஏவப்பட்டதை அடுத்து, இஸ்ரேலின் ராணுவம் பீரங்கித் தாக்குதலால் பதிலளித்தது.


காசா மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்

“அத்துடன், இது ஒரு போர், இந்த போரில் நாங்கள் வெல்வோம். எங்கள் எதிரிகள் அவர்கள் இதுவரை அறிந்திராத பெரும் விலையை கொடுக்க நேரிடும்” என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, காசா பகுதியில் பதிலடி தாக்குதலை தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன், பல ஆயிரம் ரிசர்வ் படை வீரர்களையும் இஸ்ரேல் ராணுவம் பணிக்கு அழைத்துள்ளது.

இஸ்ரேல் விமானப்படையின் 12 போர் விமானங்கள் காசா பகுதியில் பறந்து குண்டு மழை பொழிந்தன. இதனால், காசா பகுதியில் பல கட்டடங்கள் தீப்பற்றி எரிகின்றன. ஹமாஸ் இயக்கத்தின் 17 ராணுவ முகாம்களையும், 4 மண்டல தலைமை அலுவலகங்களையும் குறிவைத்து குண்டுவீசியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் கூற்றை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

அதேவேளையில், காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலால் 161 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் ஆயிரம் பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு

 

இஸ்ரேல் மீது பாலத்தீன ஆயுதக் குழுவினர் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“இஸ்ரேல் குடிமக்களுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எந்த வித காரணமும் இன்றி நடத்தும் தாக்குதல்களை அமெரிக்கா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது” என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறினார்.

“பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. நாங்கள் இஸ்ரேல் அரசு மற்றும் மக்களுடன் உறுதியாக நிற்கிறோம், இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த இஸ்ரேலியர்களுக்காக எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்.”

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாச்சி ஹானெக்பியுடன் பேசியதாகவும், “எங்கள் இஸ்ரேலிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா நெருங்கிய தொடர்பில் உள்ளது” என்றும் அவர் கூறினார்.

பாலத்தீன தாக்குதலுக்கு இரான் ஆதரவு

இரானின் தலைவர் அலி கமேனியின் ஆலோசகர், இஸ்ரேல் மீதான பாலத்தீனியர்களின் தாக்குதலை ஆதரிப்பதாக எங்களுக்குச் செய்திகள் வந்துள்ளன.

“பாலத்தீன போராளிகளை நாங்கள் வாழ்த்துகிறோம்” என்று ரஹீம் சஃபாவி கூறியுள்ளதாக ISNA செய்தி நிறுவனம் கூறுகிறது.

“பாலத்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை நாங்கள் பாலத்தீன போராளிகளுக்கு துணை நிற்போம்” என்று அவர் கூறினார்.

ஹமாஸ் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா ஆதரவு

லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, காஸாவின் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், “பாலத்தீன ஆயுதக் குழுவினரின் தலைமையுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும்” கூறியுள்ளது.

அது ஹமாஸ் தாக்குதல்களை “இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு தீர்க்கமான பதில் மற்றும் இஸ்ரேலுடன் இயல்புநிலைக்கு வர விரும்புவோருக்கான ஒரு செய்தி” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆயுதக் குழு இஸ்ரேலின் முக்கிய எதிர்ப்பாளராகத் திகழ்ந்து வருவதாகவும், 2006 இல் அந்நாட்டுடன் போருக்குச் சென்றது என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானின் இராணுவ மற்றும் நிதி உதவியை நம்பிச் செயல்பட்டு வருகிறது.

காசாவை விட்டு இஸ்ரேல் வெளியேறிய பிறகு நடந்த மோதல்கள

1.ஆகஸ்ட் 2005 – மத்திய கிழக்குப் போரில் எகிப்திடம் இருந்து காசாவைக் கைப்பற்றிய 38 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேலியப் படைகள், அனைத்தையும் பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு காசாவிலிருந்து வெளியேறின.

2. ஜன. 25, 2006 – பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மை இடங்களை வென்றது. ஆயுத போராட்டத்தை கைவிடவும், இஸ்ரேலை அங்கீகரிக்கவும் ஹமாஸ் மறுத்ததால் பாலஸ்தீனர்களுக்கான உதவிகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் நிறுத்தின.

3. ஜூன் 14, 2007 – மேற்குக் கரையில் இருக்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு விசுவாசமான ஃபத்தா படைகளை வீழ்த்தி காசாவை ஹமாஸ் கைப்பற்றியது.

4. டிசம்பர் 27, 2008 – தெற்கு இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட் மீது பாலஸ்தீனர்கள் ராக்கெட்டுகள் வீசியதை அடுத்து, காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. 22 நாள் நடந்த தாக்குதலில் சுமார் 1,400 பாலஸ்தீனியர்கள் மற்றும் 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

5.நவம்பர் 14, 2012 – ஹமாஸின் ராணுவத் தளபதி அஹ்மத் ஜபாரியை இஸ்ரேல் கொலை செய்தது.

6.ஜூலை-ஆகஸ்ட் 2014 – மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்தி ஹமாஸ் கொலை செய்தது. இதைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் நடந்த போரில் 2,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மற்றும் 73 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

7.மார்ச் 2018 – பாலஸ்தீனிய அகதிகளை தங்கள் நிலங்களில் மீண்டும் குடியேற அனுமதிக்க வேண்டும் என பாலஸ்தீனியர்கள் காசாவில் உள்ள இஸ்ரேல் எல்லையில் போராட்டம் நடத்தினர்.

8. பல மாதங்கள் நடந்த போராட்டத்தில் 170க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியது.

8. மே 2021 – ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.

9. ஆகஸ்ட் 2022 – மூத்த இஸ்லாமிய ஜிஹாத் தளபதி தய்சீர் அல்-ஜபரியை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி நடத்தியது. மூன்று நாட்கள் நடந்த மோதலில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர்.

10.ஜனவரி 2023 – இஸ்ரேலிய படைகள் ஒரு அகதிகள் முகாமைத் தாக்கி ஏழு பாலஸ்தீன ஆதரவு தாக்குதல்தாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்களையும் கொன்றதை அடுத்து இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இஸ்ரேலை நோக்கி இரண்டு ராக்கெட்டுகளை வீசியது.

இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேல் பதில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

11. அக்டோபர் 2023 – தற்போது எல்லை தாண்டிச் சென்று மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியுள்ளது. தனது போராளிகளும் இந்தத் தாக்குதலில் இணைந்துள்ளதாக இசுலாமிய ஜிஹாத் அமைப்பு கூறியுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version