கோவை: இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் இன்று தமிழ்நாட்டுக்கு வந்தடைந்தனர். கோவை வந்த மாணவி ஒருவர் தங்களது பகுதிகளில் எந்த மாதிரியான போர் சூழல் இருந்தது என்பது குறித்து பேட்டி அளித்துள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்கள் பலர் தாயகம் திரும்ப இயலாமல் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.

இதனையடுத்து இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரு மத்திய அரசு முடிவு செய்து, ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை அறிவித்தது.

உடனடியாக இந்தியர்களை மீட்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கியது.

இஸ்ரேலில் தமிழர்கள்: இஸ்ரேலில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் வெளியிட்டு அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திடமும் பகிரப்பட்டு அவர்களை தாயகம் மீட்கும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த தமிழர்களில் தாயகம் திரும்புவதற்காக பதிவு செய்த நபர்களில் கோயம்புத்தூர், திருவாரூர், கடலூர், திருச்சி, தேனி, கரூர், விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 21 தமிழர்கள் மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் முதற்கட்டமாக நேற்று இஸ்ரேலில் இருந்து புறப்பட்டு சிறப்பு விமானத்தில் இன்று காலை 6 மணிக்கு டெல்லிக்கு வந்தடைந்தனர்.

கோவை வந்த 7 பேர்: டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்பு மையம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் தமிழ்நாடு அரசு செலவில் விமான பயண சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு 14 நபர்கள் சென்னை விமான நிலையத்திற்கும், 7 நபர்கள் கோயம்பத்தூர் விமான நிலையத்திற்கும் பாதுகாப்பாக வந்தடைந்தனர்.

இஸ்ரேல் நாட்டில் தங்களது பகுதிகளில் எந்த மாதிரியான போர் சூழல் இருந்தது என்பது குறித்து, இஸ்ரேலில் இருந்து கோவை திரும்பிய டாக்டர் ராஜலட்சுமி பேட்டி அளித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இஸ்ரேலில் பொதுமக்களுக்கு பெரிதாக எந்த அச்சுறுத்தலும் இல்லை.

குறிப்பாக மாணவர்களுக்கு இஸ்ரேலிய அரசு முழு ஆதரவு கொடுத்து வருகிறது. அங்கு பொதுமக்களுக்காக ஒரு மொபைல் ஆப் இருக்கிறது.

அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ?: ஏவுகணை தாக்குதல் நடந்தால், அதில் எச்சரிக்கை விடுக்கப்படும்.

நாங்கள் பங்கருக்கு சென்றுவிட வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை பங்கர்களில் தான் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும் நிறைய பங்கர்கள் இருக்கும். ஆனாலும், அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ என்ற அச்சம் இருந்துகொண்டே இருந்தது.

அங்கு எங்கள் பேராசிரியர்களும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தனர். இதுவரை பல முறை ஏவுகணை தாக்குதல்கள் நடந்திருந்தாலும், அவர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்தது இல்லை.

இந்த முறை இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்தியதால் தான் அதிக அச்சம் நிலவுகிறது.

ஹஸ்புல்லா பயங்கரவாத குழுவும் உள்ளே இறங்கினால் நிலைமை சிக்கலாகும் எனக் கருதப்படுகிறது.

பங்கர் எப்படி இருக்கும்?: இஸ்ரேலில் ஒவ்வொரு விடுதி அல்லது கட்டிடங்களிலும் பங்கர்கள் இருக்கும். சாதாரண அறை தான், ஆனால் வலிமையான இரும்பு அமைப்பால் சூழப்பட்டிருக்கும்.

ஒரு வீட்டில் ஹால், கிச்சன், பெட் ரூம் என இருந்தால், அந்த பெட்ரூம் பங்கராகத்தான் இருக்கும். எனவே இரவு தூங்கும்போது பயமின்றி இருக்கலாம்.

ஒவ்வொரு கட்டிடத்திலும் பங்கர்கள் இருக்கும். குறைந்தபட்சம் தரைத் தளத்திலாவது பங்கர் இருக்கும். நமது இருப்பிடத்தில் என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது என்பது குறித்து அந்த ஆப் மூலமாக அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.

எல்லோரும் பங்கருக்கு சென்று சேர்வதற்கும் 1 நிமிடம் நேரம் கிடைக்கும். எச்சரிக்கை வந்தவுடன் அங்கு சென்று பதுங்கிக் கொள்ளலாம். தற்போது வரை குடிநீர், மின்சாரம் நாங்கள் இருந்த பகுதியில் பாதிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version