அரேபியர்கள் பெரும்பான்மையாக இருந்த பாலஸ்தீனத்தில் யூதர்களின் ஆகப்பெரும் குடியேற்றம் எப்படி நிகழ்ந்தது? உலக அளவில் யூதர்களின் எண்ணிக்கை என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.
சர்வதேச அளவில் நசுக்கப்பட்ட யூதர்கள் தங்களுக்கென தனி நாடு கோரிக்கையை பல ஆண்டுகளாக முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடான பாலஸ்தீனத்தில் அரேபியர்கள், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகவும், யூதர்கள் சிறுபான்மையாகவும் வாழ்ந்து வந்தனர்.
முதல் உலகப்போரில் பாலஸ்தீனத்தை தன் கையில் வைத்திருந்த ஆட்டோமான் பேரரசு தோல்வியை தழுவிய நிலையில், பாலஸ்தீன பகுதியை தன் கைக்குள் எடுத்துக்கொண்டது பிரிட்டன் அரசு.
நெடுங்காலமாக யூதர்கள் தனி நாடு கேட்ட நிலையில், பாலஸ்தீன மண்ணில் யூதர்களுக்கென தனி நாட்டை உருவாக்கும் பால்ஃபர் ஒப்பந்தைத்தையும் முன்மொழிந்தது பிரிட்டன்.
இதனால் கொதித்தெழுந்த பாலஸ்தீன மக்களுக்கும், யூதர்களுக்கும் இடையே போர் தொடர ஆரம்பித்த காலத்தில், பாலஸ்தீன மண்ணில் யூதர்களின் குடியேற்றம் அதிகரிக்கத் தொடங்கியது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து 1920 – 1946ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 3 லட்சத்து 76 ஆயிரம் யூதர்கள் இஸ்ரேலில் குடியேறினர்.
மக்கள் தொகை கணக்கில் 6 சதவீதம் மட்டுமே இருந்த யூதர்கள், பாலஸ்தீனத்தின் 33 சதவீத பரப்பளவை தங்கள் வசமாக்கியிருந்தனர்.
1947 காலகட்டத்தில் 94 சதவீதமான பாலஸ்தீனம் அரேபியர்களின் கைவசம் இருந்த நிலையில், அதிலிருந்து 56 சதவீத நிலப்பரப்பை எடுத்து இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கி அந்த நாட்டிற்கு கொடுக்க திட்டம் வகுத்தது ஐ.நா சபை.
பாலஸ்தீன மக்களுக்கும் – யூதர்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்த நிலையில், ஒட்டுமொத்தமாக பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன் அரசு. இதனைத் தொடர்ந்து, மே 15, 1948ல் இஸ்ரேல் எனும் தனி நாடு உருவாகிவிட்டதாக தன்னிச்சையாக அறிவித்துக்கொண்டது இஸ்ரேல்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு இஸ்ரேலில் யூதர்களின் குடியேற்றம் அசுர வேகத்தில் நடந்தேறியது.
நடப்பு ஆண்டில் வெளியான புள்ளி விவரத்தின் படி உலகம் முழுவதும் ஒரு கோடியே ஏழு லட்சம் யூதர்கள் இருக்கின்றனர்.
இதில் இஸ்ரேலில் மட்டும் சுமார் 70 லட்சம் யூதர்கள் இருக்கின்றனர். மற்றவர்கள் அயல்நாடுகளில் இருக்கின்றனர்.
இஸ்ரேலை தவிர்த்து அயல்நாட்டில் அதிகபட்சமாக பிரான்ஸில் 4 லட்சத்து நாற்பது ஆயிரம் பேர் இருக்கின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, உலக அளவில் யூதர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 1 லட்சம் உயர்ந்துள்ளதாகவும் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.