ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான மோதல் காரணமாக காசாவில் மிகப்பெரிய அளவிலான மனிதநேய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். லட்சக்கணக்கானோர் உணவும் நீரும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள பிபிசி தயாரித்த வரைபடங்கள் வழியிலான இந்த விளக்கம் உங்களுக்கு உதவும்.

காசா எங்கே அமைந்துள்ளது?

காசா என்பது இஸ்ரேல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் இருக்கும் குறுகிய நிலப்பகுதியாகும்.

காசா மூன்று புறம் நிலத்தாலும் ஒரு ஒரு புறம் கடலாலும் சூழப்பட்டது.

காசாவின் வடக்கிலும் கிழக்கிலும் இஸ்ரேல் உள்ளது. காசாவின் சிறிய தெற்கு எல்லையில் எகிப்து உள்ளது. மேற்கில் மத்திய தரைக்கடல் உள்ளது.

 

காசாவின் எல்லைகள் எங்கே உள்ளன?

எகிப்துடனான எல்லைப்பகுதி ரஃபா எனப்படும். இஸ்ரேலுடனான எல்லைப் பகுதிகளில் நுழைய தடை இருப்பதால் எகிப்துடனான ரஃபா மற்றும் கெரம் ஷலோம் என்ற சரக்குகள்‌ கடக்கும் எல்லை ஆகியவையே எல்லை தாண்டும் பகுதிகளாக உள்ளன. வடக்கில் இஸ்ரேலுடனான எல்லைப் பகுதி எரேஸ் எனப்படும்.

இஸ்ரேலுடனான எல்லைப் பகுதியில் உள்ள நஹல் ஓஸ், கார்னி மற்றும் சூஃபா கடவுப்பகுதிகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.

காசாவில் மக்கள் எங்கே வசிக்கிறார்கள்?

காசா 41 கி.மீ நீளமும், 10 கி.மீ அகலமும் மட்டுமே கொண்ட நிலப்பரப்பு ஆகும். அதாவது சென்னை எண்ணூரிலிருந்து முட்டுக்காடு வரையிலான தூரம் மட்டுமே. ஆனால் இங்கு சுமார் 20 லட்சம் பேர் வசிக்கின்றனர். உலகின் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள பகுதிகளில் காஸாவும் ஒன்று,

காஸாவின் வடக்கு பகுதியில் உள்ள காசா நகரமே மிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். காஸா நகரத்தில் ஒரு சதுர கி.மீ-ல் 9683 பேர் வசிக்கின்றனர்.
முற்றுகையிடப்படும் காஸா- வரைபடங்கள் மூலம் விளக்கம்

வடக்கு காசா மற்றும் டெய்ர் அல் பாலா பகுதிகள் மிதமான மக்கள் அடர்த்தி கொண்டவையாகும். இங்கு ஒரு சதுர கி.மீ-ல் 5ஆயிரம் முதல் 8000 பேர் வசிக்கின்றனர்.

தெற்கில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் ஒரு சதுர கி.மீ-ல் 3828 பேரும், எகிப்து எல்லைக்கு அருகில் இருக்கும் ரஃபா பகுதியில் 4182 பேரும் வசிக்கின்றனர்.

மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள வடக்கிலிருந்து தெற்கு பகுதிக்கு செல்ல இஸ்ரேல் எச்சரித்துள்ளது. மக்கள் வடக்கு பகுதிகளை விட்டு வெளியேறுவது சிரமமாக உள்ளது.

20 ஆயிரம் மட்டுமே கொண்ட ஹமாஸ்

அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது கொடுங்தாக்குதலை தொடங்கிய ஹமாஸ் அமைப்பின் படைப்பிரிவு‌ அல்-தின் அல்-கஸம் எனப்படுகிறது, இதில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை இருக்கலாம் என தோராயமான கணக்கீடுகள் சுட்டுகின்றன.

அதனோடு ஒப்பிட்டால் இஸ்ரேலின் ராணுவம் மிகப் பெரியது. ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் களத்தில் உள்ளனர். 4 லட்சத்து 65 ஆயிரம் ராணுவத்தினர்‌ தயார்‌ நிலையில் ரிசர்வ் படைகளாக உள்ளார்கள்.

இஸ்ரேலின் வசம் 500 பீரங்கிகள், 400 மெற்காவா டாங்கிகள் உட்பட சுமார் 1600 டாங்கிகள் உள்ளன. 64 ஏவுகணை ஏவூர்திகள் உள்ளன. 354 விமானங்களும், 142 ஹெலிகாப்டர்களும், 49 கடற்படை கப்பல்களும் உள்ளன. இரும்புக் குவிமாடம் என்ற தற்காப்பு ஏற்பாடும் உள்ளது. குறுகிய தூரத்தில் இருந்து வரும் ஆயுதங்களில் இருந்து தற்காக்க உதவுகிறது.
முற்றுகையிடப்படும் காஸா- வரைபடங்கள் மூலம் விளக்கம்

காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்

காசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைகழகம் ஹமாஸ் குழுவினரின் பயிற்சி மையமாக இருந்தது என கூறி இஸ்ரேல் அதனை தகர்த்து விட்டது. அதே போன்று காசாவில் உள்ள பெரிய மசூதி ஒன்றை தனது தாக்குதலில் இடித்து தரைமட்டமாக்கியது இஸ்ரேல்.

 


காசாவின் அகதிகள் முகாம்கள் யாருக்காக?

காசா பகுதிக்கு உள்ளேயே‌ ஐ.நா சபை நிர்வாகத்தில் அகதி‌ முகாம்கள் அடைந்துள்ளன. ஜூன் 1, 1946 முதல் மே 15 வரை பாலஸ்தீனத்தை இருப்பிடமாக கொண்டிருந்தவர்கள். 1948 மோதலுக்கு பிறகு பாலஸ்தீனத்தில் தங்கள் இருப்பிடத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்தவர்களை அகதிகள் என ஐ.நா குறிப்பிடுகிறது.

இவர்களுக்கான முகாம்கள் காசா, மேற்கு கறை தவிர ஜோர்டான், லெபனான், சிரிய அரபு குடியரசு ஆகிய நாடுகளில் மொத்தம் 58 முகாம்கள் உள்ளன. 1967 மோதலுக்கு பின் மேற்கு கரை மற்றும்‌ காசா பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்த பின் 10 முகாம்கள் உருவாக்கப்பட்டன.

ஜபாலியா, ஷதி, புரேஜ், மகசி, நுசேரத், தேர் அல் பாலா, கான் யூனிஸ்,ரஃபா என 8 முகாம்கள்‌ காசா பகுதியில் உள்ளன. காசா பகுதியின் வடக்கில் அமைந்த ஜபாலியா அகதிகள் முகாமில் அதிகமானோர் வாழ்கின்றனர். இந்த முகாம் மீது சில நாட்கள் முன் இஸ்ரேல்‌ நடத்திய தாக்குதலில் 15 பேர் இறந்துபோயினர்.

பிணவறைகளாக மாறும் மருத்துவமனைகள்

காசாவின் வடக்கு பகுதியில்தான்‌ கூடுதலாக மருத்துவமனைகள்‌ உள்ளன. போர்க்காலத்தில் பொதுவாக‌ மருத்துவமனைகள்‌ பாதுகாப்பான‌ இடங்களாகும்.

அச்சமடைந்த மக்கள் மருத்துவமனைகளில் தஞ்சமாகினர். இப்போது இஸ்ரேல்‌ வடக்கில் வாழும் மக்களை‌ நோயாளர்கள்‌ உட்பட‌ தெற்கு நோக்கி நகரும்படி எச்சரித்துள்ளது. இது மரண தண்டனைக்கு சமமானது என‌‌ ஐ.நா கூறியுள்ளது.

தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை இஸ்ரேல் மறுத்து வருகிறது. ஜெனரேட்டர் மின்சாரத்தை மட்டுமே நம்பி காசாவின் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.

இதுவும் வெகுகாலம் நீடிக்காது. ஏற்கனவே இதனால் சிறுநீரக நோயாளர்களுக்கு டயாலிசிஸ் நிறுத்தப்பட்டுள்ளது, இன்குபேட்டரில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு ஆபத்து உருவாகியுள்ளது. குளிரூட்டும் அறைகள் இயங்காததால் மருத்துவமனை வளாகங்களில் பிணங்கள் நிறைகின்றன இதனால் மருத்துவமனைகளே பிணக்கிடங்குகளாக மாறிப்போகும் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.

காசாவில் உள்ள பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா நிரம்பி வழிவதாக அங்குள்ள மருத்துவர் பி.பி.சி இடம் தெரிவித்தார்.

ஐ.நா சபை நடத்துவரும் பள்ளிகளிலேயே அதிக மாணவர்கள் படித்து வந்தனர், இப்போது பள்ளி வளாகங்கள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. ஐ.நா நடத்தி வரும் 278 பள்ளிகளில் 71% பள்ளிகள் இரண்டு ஷிப்ட்களில் இயங்குவதாக ஐ நா தெரிவித்துள்ளது .

Share.
Leave A Reply

Exit mobile version