யாழில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி, புடவைக்கடை ஒன்றில், 23 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கந்தர்மடம் பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் நேற்று புதன்கிழமை (18) மாலை சென்ற நால்வர் தம்மை பொலிஸார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

அந்தக் கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றது என்று தகவல் கிடைத்துள்ளது என்றும் தேடுதல் நடத்த வேண்டும் என்றும் கூறி, கடைக்குள் அத்துமீறி நுழைந்த அவர்கள் அங்கு தேடுதல் நடத்தியுள்ளனர்.

அதன் போது, கடையில் இருந்த 23 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு, கடையிலிருந்தவர்களை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இன்று வியாழக்கிழமை (19) இருவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version