கனாடாவானது இந்தியாவில் பெங்களூர், சண்டிகர் மற்றும் மும்பாய் ஆகிய பிராந்தியங்களிலுள்ள தனது துணைத்தூதரங்களில் வழங்கப்பட்டு வந்த விசா மற்றும் நேரடி தூதரக சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளது.
இந்திய காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி கனேடிய மண்ணில் வைத்துக் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ கடந்த மாதம் தெரிவித்தையடுத்து, இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் முறுகல் நிலையை அடைந்தன.
இந்தியாவானது மேற்படி குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்து தீவிரவாதிகளுக்கும் குற்றச்செயல்களில் ஈடுப்படுபவர்களுக்கும் கனடா புகலிடம் அளித்து வருவதாக சாடியிருந்தது.
இந்நிலையில், புதுடில்லியிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் மட்டுமே மேற்படி சேவைகளை தொடர்ந்து வழங்கவுள்ளது.
கனடா அந்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம் வியாழக்கிழமை வெளியிட்ட தனது இந்தியாவுக்கான மேம்படுத்தப்பட்ட பயண அலோசனையில் கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் அண்மையில் இடம் பெறும் விடயங்களுக்கு அமைவாக இந்தியாவில் கனடாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டு வருவதுடன் பாரம்பரிய ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் கனடா தொடர்பான எதிர்மறை மனோ பாவங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இராஜதந்திரிகள் வாபஸ்
இந்தியாவிலிருந்து 41 கனேடிய இராஜதந்திரிகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கனேடிய வெளிநாட்டு அமைச்சர் மெலானி ஜோலி கனேடிய நேரப்படி நேற்று முன்தினம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.
கனேடிய இராஜதந்திரிகளும் அவர்களில் தங்கி வாழ்பவர்களும் தற்போது இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்த அவர், அந்த இராஜதந்திரிகள் அனைவரதும் சிறப்புரிமை 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் ஒரு தலைப்பட்டசமான முறையில் நீக்கப்படவுள்ளதாக இந்தியா தெரிவித்திருந்ததாக கூறினார்.