அ.இ.அ.தி.மு.க. தொடங்கப்பட்டதன் 52ஆம் ஆண்டு தினம் இன்று. தி.மு.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் அ.தி.மு.கவைத் துவங்கியபோது என்ன நடந்தது? எம்.ஜி.ஆர். திமுகவை விட்டு விலகி அதிமுகவை தொடங்கக் காரணமான நிகழ்வு எது? என்ன நடந்தது?

தி.மு.கவிலிருந்து பிரிந்துவந்த எம்.ஜி.ஆர். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் கொள்கைகளை உள்ளடக்கிய அண்ணாயிசமே கட்சியின் அடிப்படைக் கொள்கையாக இருக்கும் என எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

1972ல் துவங்கப்பட்டதிலிருந்து ஏழு முறை ஆட்சியைப் பிடித்து, தமிழ்நாட்டின் மிகவும் வெற்றிகரமான கட்சியாக விளங்குகிறது அ.தி.மு.க. இந்தக் கட்சியிலிருந்து எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகிய நான்கு பேர் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள் (தற்காலிக முதல்வராக இரா. நெடுஞ்செழியன் இரு முறை இருந்திருக்கிறார்).

 

கட்சி துவங்கப்பட்டதன் பின்னணி

நீண்ட காலமாகவே திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்றுக்கொண்டிருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் தி.மு.கவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.

தி.மு.கவின் பொதுச் செயலாளர் அண்ணாவுக்கும் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மு. கருணாநிதிக்கும் நெருக்கமானவராக இருந்தார்.

அண்ணா மறைந்த பிறகு, கட்சியின் அடுத்த தலைவராகவும் முதலமைச்சராகவும் மு. கருணாநிதி பொறுப்பேற்க, கட்சியின் பிற தலைவர்களின் ஆதரவைத் திரட்டியதில் எம்.ஜி.ஆரின் பங்கு முக்கியமானது.

ஆனாலும்ம் தி.மு.க. இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தபோதே, முதலமைச்சரும் கட்சியின் தலைவருமான மு. கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில், கட்சி இரண்டாக உடைந்தது. புதிதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் துவங்கினார் எம்.ஜி.ஆர்.

இந்த மோதலுக்கு அடிப்படையாக பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பொருத்தவரை, மத்தியில் ஆட்சியில் இருந்த இ. காங்கிரசின் தூண்டுதலே கட்சி உடையக் காரணம் என்றார்.

எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவைத் துவங்கியபோது என்ன நடந்தது?

இது குறித்து தனது, வாழ்க்கை வரலாற்று நூலான ‘நெஞ்சுக்கு நீதி’யில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் மு. கருணாநிதி.

“1972 ஆகஸ்ட்டில் மதுரை மாவட்ட மாநாடு முரசொலி மாறன் தலைமையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மாவட்டச் செயலாளர் மதுரை முத்துவால் துவங்கப்பட்டன.

அப்போது கழகப் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். என்னை வந்து வீட்டில் சந்தித்தார். அவருடன் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணியை கழகத்தில் உறுப்பினராகச் சேர்க்க விரும்புவதாகவும் அந்தப் பெண்மணி மதுரை மாநாட்டுக்கு வர வேண்டும் என்றும் மாநாட்டு மேடையிலேயே அந்தப் பெண்மணிக்கு முன்வரிசையில் இடம் தர வேண்டுமென்றும் மதுரை முத்துவுக்கு நான் கட்டளையிட வேண்டுமென எம்.ஜி.ஆர். வலியுறுத்தினார்.

‘திராவிட இயக்கம் இதையெல்லாம் தாங்காது, கொஞ்சம் பொறுமையாக இருந்து சிந்தியுங்கள்’ என்று விளக்கமளித்தேன். ‘நண்பர் முத்துவை உங்களுக்குத் தெரியாதா, அவரிடமே இதுகுறித்துப் பேசுங்கள். ஆனால், அவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்’ என்று தெரிவித்தேன்.

எம்.ஜி.ஆர். மதுரை முத்துவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அவர் அனுமதிக்க மாட்டேன் எனக் கூறிவிட்டார். எஸ்.எஸ். ராஜேந்திரனும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டார் எம்.ஜி.ஆர்.

ஆனால், அவரது மனதில் ஏற்பட்ட ஏமாற்றம், வெறுப்புணர்வாக மாறிவிட்டது என்பதை பிற்கால நடவடிக்கைகள் எடுத்துக் காட்டின.” என்று மு.கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

திமுகவிலிருந்து விலக காரணமான எம் ஜி ஆர் பேச்சு

நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் மு.கருணாநிதி இதுகுறித்து மேலும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். ” சினிமாவில் நடித்துக்கொண்டே அமைச்சராக வேண்டுமென்றார். படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு அமைச்சராவதில் எந்தத் தடையுமில்லையென்று கூறினேன். அதன் காரணமாகவும் அவரது உள்ளத்தில் புகைச்சல் இருந்தது.

இதற்கிடையில்தான் கழகத்தில் பிளவு ஏற்படுத்த மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

மத்திய அமைச்சர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த ரகசியத் தொடர்புகளைப் பற்றி சேலம் மாவட்டக் கழக அவைத் தலைவர் எஸ்.எஸ்.எம். சுப்பிரமணியம் சென்னையில் உள்ள தனது நண்பருக்கு கடிதம் எழுதி, அதனை எதிர்க்கட்சிப் பத்திரிகையில் வெளியிடுமாறு குறிப்பிட்டிருந்தார்.

ரகசியத் தொடர்பு என்பது அந்நியச் செலாவணிச் சிக்கல், வருமானவரிச் சிக்கல் போன்றவைகளாகும்.

இந்த விவகாரம் வெளியானதும் ‘கட்சியில் நான் இருக்க வேண்டுமா, எஸ்.எஸ்.எம். இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள்’ என்றார் எம்.ஜி.ஆர்.

இதையடுத்து எஸ்.எஸ். எம். ஐந்தாண்டு காலத்திற்கு சாதாரண உறுப்பினர் பொறுப்பில் துவங்கி அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைப்பதாக செயற்குழு தீர்மானித்தது.

இந்த சம்பவம் ஜூன் மாதம் நடந்தது. இதற்குப் பிறகுதான் ஆகஸ்ட் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் எம்.ஜி.ஆரின் பேச்சு மத்திய அரசுக்கு எதிரான போர் முழக்கமாக இருந்தது. கழக அரசு தூய்மையானது என அழுத்தம் திருத்தமாகப் பேசினார்.

இதற்குப் பிறகு சென்னையில் அண்ணா பிறந்த நாள் விழாவும் எம்.ஜி.ஆர். ‘பாரத்’ பட்டம் பெற்றதற்கான பாராட்டுவிழாவும் நடைபெற்றன.

இதில் பேசிய எம்.ஜி.ஆர். ‘மந்திரிகள் – சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குக் காட்டவேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.க.

கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக்கூடாது?

ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான், சம்பாதிக்கிறான். நீ சம்பாதித்தால் அதற்குக் கணக்குக் காட்டு’ என்று பேசினார்” என்று நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிடுகிறார் மு. கருணாநிதி.

எம்.ஜி.ஆரின் இந்தப் பேச்சே பிரச்னையின் துவக்கமாக அமைந்தது. அதற்குப் பிறகு, எம்.ஜி.ஆரை கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் கட்சியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கும் அறிக்கையை நெடுஞ்செழியன் பத்திரிகைகளுக்கு அளித்தார். இதற்குப் பிறகு விளக்கம் கேட்டு எம்.ஜி.ஆருக்கு கடிதம் ஒன்று அளிக்கப்பட்டது.

தொலைபேசி மணி அடித்த பிறகு என்னவாயிற்று?

“தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தால், எம்.ஜி.ஆர். மீதான நடவடிக்கையைக் கைவிட முடிவு செய்யப்பட்டது.

இதற்குப் பிறகு முரசொலி மாறனும் நாஞ்சில் மனோகரனும் சென்று எம்.ஜி.ஆரைச் சந்தித்தார்கள்.

அப்போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பொதுச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுத எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார்” என்று குறிப்பிடுகிறார் மு. கருணாநிதி.

“ஆனால், அப்படி ஒரு கடிதம் எழுதத் தொடங்குவதற்கு முன்பாக தொலைபேசி மணி அடித்திருக்கிறது.

எம்.ஜி.ஆர். எடுத்துப் பேசியிருக்கிறார். யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பது தெரியாது.

அது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும். மறுமுனையில் இருந்தவர்கள் சமரச முயற்சியை முறியடித்துவிட்டார்கள் என்பதும் நாஞ்சிலாருக்கும் முரசொலி மாறனுக்கும் புரிந்துவிட்டது.

தொலைபேசி ரிசீவரைக் கீழே வைத்தவுடன் எம்.ஜி.ஆர். அப்படி ஒரு கடிதத்தைத் தர முடியாது என்றும் நடந்தது நடந்ததுதான் என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்” என்கிறார் மு. கருணாநிதி.

இதற்குப் பிறகு, தி.மு.கவின் செயற்குழுவில் அவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருவருக்கும் இடையில் சமரசம் செய்துவைக்க பெரியார் முயற்சி செய்தார். ஆனால், அதில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

இதற்குப் பிறகு அவருடைய ஆதரவாளர்களும் ரசிகர்களும் வலியுறுத்த புதிய கட்சியைத் துவங்கினார் எம்.ஜி.ஆர்.

ஆர்.எம். வீரப்பன் சொல்வது என்ன?

முரசொலி மாறனும் நாஞ்சில் மனோகரனும் சமாதான முயற்சிகளை மேற்கொண்ட தினத்தில் என்ன நடந்தது என்பதை வேறொரு பார்வையில் சொல்கிறார் அன்றைய தினத்தில் எம்.ஜி.ஆருடன் இருந்த ஆர்.எம். வீரப்பன். ராணி மைந்தன் எழுதிய ‘ஆர்.எம்.வீ. ஒரு தொண்டர்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூல் இதைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறது.

“மாறன், ஆர்.எம்.வீ. எம்.ஜி.ஆர். ஆகியோர் சென்னை தியாகராய நகரில் எம்.ஜி.ஆரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்கள்.

அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி என்று சொல்ல முடியாதபடி மதியம் உணவு வேளைவரை நீண்டு, பிரச்சனை தீர்க்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஓர் ஒப்பந்தம் ஏற்படும் நிலையில், ஒப்பந்தத்துக்கான வரைவைப் பகலுணவுக்குப் பின் முடிவுசெய்து எழுதலாம் என்று முடிவெடுத்து அவரவர் வீட்டுக்குக் கிளம்பினார்கள். ஆர்.எம். வீரப்பனுக்கோ மிகவும் சந்தோஷம்.

திடீரென ஆர்.எம்.வீ. வீட்டில் தொலைபேசி ஒலித்தது.

“தெரியுமா? நம்ம ரசிகர்கள் பயங்கரமாக தாக்கப்படுகிறார்களாம். இந்த நிலையில் என்ன பேச்சுவார்த்தை வேண்டிக் கிடக்கிறது? என்ன ஒப்பந்தம் வேண்டிக் கிடக்கிறது?

பிற்பகலில் பேச்சுவார்த்தை ஏதும் வேண்டாம். மாறனுக்குச் சொல்லிவிடுங்கள்.” என்று மறுமுனையில் சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். போனை வைத்துவிட்டார்.

காரணம், அன்று பிற்பகல் மேட்னி ஷோவின்போது எங்கெங்கு எம்.ஜி.ஆர். படங்கள் ஓடிக் கொண்டிருந்தனவோ அந்தத் திரையரங்குகளில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று ஒரே ரகளையாகிவிட்டது.

குறிப்பாக சென்னையில் பிளாஸா தியேட்டரில் அப்படிப்பட்ட தாக்குதல் அதிகமாக இருந்ததாக எம்.ஜி.ஆருக்கு தகவல் கிடைத்திருந்ததால்தான் இந்த முடிவு.

இனி தி.மு.கவுடன் எம்.ஜி.ஆர். ஒட்டமாட்டார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவர் ஏதேனும் செய்தாக வேண்டும் என அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் பெரிதும் விரும்பினார்கள்.

இதற்கிடையில் ‘தென்னகம்’ பத்திரிகையை நடத்திவந்த கே.ஏ. கிருஷ்ணசாமியும் தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டார். தனியாக ஒரு கட்சி ஆரம்பித்தாக வேண்டும் என்ற நிலையை மக்களே உருவாக்கிவிட்டார்கள்.

தவிர்க்க முடியாத அந்தச் சூழலில்தான் 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதியன்று அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர். தொடங்கினார்” என்கிறது ஆர்.எம்.வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று நூல்.

செய்தியாளர்களுக்கு பாயசம் வழங்கிய எம்.ஜி.ஆர்.

தான் தி.மு.கவைவிட்டு நீக்கப்பட்ட செய்தி வெளியானதும் செய்தியாளர்களுக்கு எம்.ஜி.ஆர். பாயசம் வழங்கியதாக ஆர். கண்ணன் எழுதிய M.G.R. A Life என்ற நூல் குறிப்பிடுகிறது.

“அக்டோபர் பத்தாம் தேதி ‘நேற்று இன்று நாளை’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு இடைநீக்கம் என்ற செய்தியை அமைதியாக எதிர்கொண்டார்.

அங்கிருந்த செய்தியாளர்களைத் தன்னுடன் சாப்பிட அழைத்தார். அவர்கள் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டதாகச் சொல்ல, அவர்களிடம் பாயசம் மட்டுமாவது சாப்பிடும்படி சொன்னார் எம்.ஜி.ஆர். பிறகு தன் கையாலேயே பாயசம் வழங்கிய எம்.ஜி.ஆர். ‘என் வாழ்விலேயே மகிழ்ச்சியான நாள்’ என்று குறிப்பிட்டார்.

‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மறுபடியும் தர்மமே வெல்லும்’ என்ற வாசகங்கள் அடங்கிய அறிக்கை பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டது.

அக்டோபர் 18ஆம் தேதி புதிய கட்சி ஆரம்பிக்கும் முடிவை அறிவித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர், ‘தலைவா, அது கருணாநிதி தி.மு.க. நம்முடையது அண்ணா தி.மு.க. என்று கூறிவந்தார்.

ஆகவே, அதற்கு முந்தைய தினமே பல தி.மு.க. கிளைக் கழகங்கள் அ.தி.மு.க. கிளைக் கழகங்களாக பெயர் மாற்றப்பட்டுவிட்டன. ஆகவே அக்டோபர் 17ஆம் தேதியே அ.தி.மு.க. உருவான நாளாக கருதப்படுகிறது’ ” என்கிறது ஆர். கண்ணனின் நூல்.

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக எம்.ஜி.ஆரும் அமைப்புச் செயலராக கே.ஏ. கிருஷ்ணசாமியும் அறிவிக்கப்பட்டார்கள். தென்னகம் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாக அறிவிக்கப்பட்டது.

(மூலம்- பிபிசி தமிழ் செய்தி-முரளிதரன் காசி விஸ்வநாதன் -பிபிசி செய்தியாளர்)

Share.
Leave A Reply

Exit mobile version