ராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நாளை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு படையெடுக்கவுள்ளதால் அக்கிராமமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

ஏழாம் படை வீடு: முக்குலத்தோர் சமுதாய மக்களை பொறுத்தவரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தை தங்களின் ஏழாம் படை வீடாக கருதுகின்றனர்.

இதனால் தான் ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி விழாவையும், குருபூஜையையும் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

இதனிடையே தமிழக அரசியல் கட்சி தலைவர்களை பொறுத்தவரை ஆண்டு தவறாமல் கட்சியில் உள்ள முக்குலத்தோர் சமுதாய முக்கியப் பிரமுகர்களை தங்கள் பிரதிநிதிகளாக தேவர் குருபூஜையில் பங்கேற்க அனுப்பி வைத்து மரியாதை செலுத்த வைப்பார்கள்.

கருணாநிதி: இதுவே தேர்தல் நேரமென்றால் தாங்களே பசும்பொன் கிராமத்திற்கு நேரடியாக சென்று தேவர் குருபூஜையில் பங்கேற்று கவனம் ஈர்ப்பார்கள்.

இதில் திமுக தொடங்கி பாஜக வரை எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. கருணாநிதியை பொறுத்தவரை முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் நேரடியாக கலந்துகொள்ள ஆர்வம் காட்டாதவர் என்றாலும், முத்துராமலிங்க தேவரை எந்தளவுக்கு பெருமைப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு தனது ஆட்சிக்காலங்களில் பெருமைப்படுத்தினார்.

குறிப்பாக குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரியை மதுரை அழைத்து வந்து முத்துராமலிங்கத் தேவர் சிலையை திறக்க வைத்தவர் கருணாநிதி.

ஜெயலலிதா: ஜெயலலிதாவை பொறுத்தவரை முதலமைச்சராக இருந்த போதே பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்துகொண்டவர்.

ஆனால் ஆண்டு தவறாமல் இவர் பசும்பொன் சென்றாரா என்றால் இல்லை என்பது தான் பதில். இருப்பினும் தென் மாவட்ட முக்குலத்தோர் சமுதாய மக்களின் வாக்குவங்கியை தொடர்ந்து அதிமுக பக்கம் தக்க வைத்தவர் ஜெயலலிதா.

இது எப்படி சாத்தியம் என்றால் தனது அமைச்சரவையில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தை வழங்கி அதன் மூலம் தென் மாவட்டங்களில் அதிமுகவை வலிமைப்படுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி: கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் 13 கிலோ எடையில் 4 கோடி ரூபாய் மதிப்பில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் செய்து கொடுத்ததன் மூலம் அதிமுகவுக்கு முக்குலத்தோர் சமுதாய மக்களின் வாக்குகளை அள்ளினார் ஜெயலலிதா.

இதனிடையே அவரது மறைவுக்கு பிறகும் அதிமுக சார்பில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

இடையே அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி விரிசல் காரணமாக பசும்பொன் பக்கம் ஓரிரு ஆண்டுகளாக வராதவர் இந்தாண்டு மீண்டும் குருபூஜையில் பழைய உற்சாகத்துடன் நாளை கலந்துகொள்கிறார்.

ஸ்டாலின்: முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை கடந்த 2008ஆம் ஆண்டு துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்துகொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

ஆண்டுதோறும் முடிந்தவரை தாமே நேரில் சென்று தேவர் குருபூஜையில் கலந்துகொள்கிறார் ஸ்டாலின். கடந்த ஆண்டு தனது பிரதிநிதியாக உதயநிதி ஸ்டாலினையும், துரைமுருகனையும் அனுப்பி வைத்தார். ஆனால் இந்தாண்டு அவரே நேரடியாக நாளை பசும்பொன் செல்கிறார்.

காங்கிரஸ் -பாஜக: தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் மாநிலத் தலைவர்களாக இருப்பவர்கள் செல்வார்கள் அல்லது தங்கள் பிரதிநிதியாக காங்கிரஸில் உள்ள முக்குலத்தோர் சமுதாய பிரமுகர்களை அனுப்பி வைப்பார்கள்.

அந்த வகையில் கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் பிரதிநிதியாக திருநாவுக்கரசர் எம்.பி.யை தேவர் குருபூஜையில் பங்கேற்க நாளை அனுப்பி வைக்கிறார்.

பாஜகவை பொறுத்தவரை கடந்தாண்டு அண்ணாமலை நேரடியாக சென்று தேவர் குருபூஜையில் கல்ந்துகொண்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தாண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாஜக சார்பில் தேவர் குருபூஜையில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆண்டு தவறாமல்: வைகோவை பொறுத்தவரை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

என்னதான் உடல்நலம் தளர்ந்தாலும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் செல்ல தவறமாட்டார்.

இதேபோல் தான் டிடிவி தினகரன் உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஆண்டு தவறாமல் தேவர் குருபூஜையில் கலந்துகொண்டு வருகின்றனர்.

தேவருக்கு மரியாதை செலுத்துவது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் முக்குலத்தோர் சமுதாய மக்களின் வாக்கு வங்கியை அறுவடை செய்ய வேண்டும் என்பதே அரசியல் கட்சிகளின் ஹிட்டன் அஜெண்டாவாக உள்ளது.

மதுரை விமான நிலையம்: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மட்டும் திமுக, அதிமுக, பாஜக, என அரசியல் கட்சிகளும் சொல்லி வைத்தாற்போல் செயல்படுவது கவனிக்கத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version