முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவின் பிணை விண்ணப்பம் கல்கிசை மேலதிக நீதவான் சஞ்சய எல்.எம்.விஜேசிங்கவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விஷேட பிரேரணையின் ஊடாக பிணை விண்ணப்பத்தை அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக, திங்கட்கிழமை (30) சமர்ப்பித்திருந்தார்.

குடிபோதையில் வாகனம் செலுத்தி இரண்டு வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) உத்தரவிடப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டியிலிருந்து தெஹிவளை நோக்கி முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஓட்டிச் சென்ற கார், வெள்ளவத்தை கடற்கரையோரத்தில் உள்ள மிராஜ் ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரையும் பஸ்ஸையும் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்.

சுவாச பரிசோதனையின் போது முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் குடிபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதனையடுத்தே, கல்கிசை நீதவான் நீதிமன்ற நீதவான் கோஷல சேனாதீர, அவரை நவம்பர் 1 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version