இந்திய வம்சாவளி மலையக மக்கள் பாரதத்தில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதன் 200 ஆண்டுகள் பூர்த்தியினை முன்னிட்டு ”நாம் 200” எனும் தேசிய நிகழ்வு கொழும்பில் இன்று (02) நடைபெற்றது.

” நாம் 200 ” தேசிய நிகழ்வு நீர்வழங்கல், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் சர்வதேச மதத் தலைவர்களின் பங்கேற்புடன் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்ற இந்த தேசிய நிகழ்வின் சிறப்பு அதிதியாக இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டிருந்தார்.

நீர் வழங்கல், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழகத்தின் நிதி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன், பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை, கட்சியின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் கலாநிதி ராம் மாதவ் உள்ளிட்ட இந்திய பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.

மலையகத்தின் எழுச்சிக்காய் பல்வேறு துறைகளில் சேவையாற்றியவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்திய அன்பளிப்பான 10,000 வீட்டுத்திட்டத்தின் கீழ் மலையகத்தின் பல பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் இணைந்து காணொளியூடாக திறந்து வைத்தனர்.

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மண்டபமும் கணினிக் கூடமும் இதன்போது அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.

இதன்போது, மலையக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் , மலையக பாடசாலைகளுக்கான நீர் சுத்திகரிப்பு தொகுதிகளும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

மலையக மண்ணின் தொன்மைவாய்ந்த கலைகளையும் பாரம்பரியத்தையும் உலகறியச் செய்யும் நோக்கில், பல கிராமியக் கலை வடிவங்களும் ‘நாம் 200’ தேசிய நிகழ்வில் அரங்கேற்றப்பட்டன.

1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர்.

1824 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆளுநர் ஜோர்ஜ் பேர்ட்டினால் கோப்பி பயிர்ச்செய்கை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்நாளில் கோப்பிச் செய்கையும் செய்கையாளர்களும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர்.

இதனையடுத்து, ஜேம்ஸ் டெய்லர் கண்டிக்கு அண்மையிலுள்ள லூல்கந்துர எனும் பகுதியில் 1865 ஆம் ஆண்டு தேயிலைச் செய்கையை ஆரம்பித்தார்.

தேயிலைத் தோட்டங்களில் கூலித்தொழில் புரிவதற்காக தென்னிந்தியாவிலிருந்து கூலித் தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டனர்.

பெருந்திரளாக கப்பல்களில் அழைத்துவரப்பட்டு மன்னாரில் கரையிறங்கி, விலங்குகளின் தாக்குதல், கொள்ளை நோய் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே மலையகத்தை சென்றடைந்து, கூலி வேலை செய்த இந்திய வம்சாவளி மலையக மக்கள் எதிர்நோக்கிய துன்பங்கள் எண்ணிலடங்காதவையாகும்.

தேயிலை பணப்பயிர் அந்தஸ்தைப் பெறுவதற்காக எம்மவர்கள் தமது உடல், பொருள், ஆவி எனும் அனைத்தையும் உழைப்பு எனும் வேள்வித் தீயில் ஆகுதியாக்கினர்.

200 ஆண்டுகள்… ஈராயிரம் கதைகள்…

உதிரம், உழைப்பு, உன்னதம் என எம்மவர்களின் கதை இன்றும் நீள்கின்றது

Share.
Leave A Reply

Exit mobile version