ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து 3வது முறையாக சேஸிங் செய்து வென்று, புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சவாலாக மாறியுள்ளது.
லக்னௌவில் இன்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 179 ரன்கள் சேர்த்தது.
ஆப்கானிஸ்தான் அணி 180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. 31.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஆனால், நிகர ரன்ரேட் மட்டும் தொடர்ந்து மைனஸில்(-330) இருக்கிறது. இந்த ஆட்டத்தில் குறைந்த ஓவர்களில் சேஸிங் செய்திருந்தால், ஒருவேளை நிகர ரன்ரேட் நேர்மறையாக எழுந்திருக்கும்.
ஐந்தாவது இடத்தில் இருந்த பாகிஸ்தானை, இந்த வெற்றியின் மூலம், 6வது இடத்துக்கு துரத்தியுள்ளது ஆப்கானிஸ்தான். அடுத்து வரும் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான இரு போட்டிகளும் ஆப்கானிஸ்தானுக்கு சவால் நிறைந்தவை. இந்த ஆட்டங்களில் ஒன்றில் வென்றாலும் பிற அணிகளின் வெற்றி, தோல்வி அடிப்படையில் அரையிறுதிக்குக் கூட ஆப்கன் தகுதி பெற முடியும்.
கடைசி இடத்திற்கு நிலவும் கடுமையான போட்டி
பாகிஸ்தான் அணி தற்போது 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. இன்னும் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் மட்டும் பாகிஸ்தானுக்கு உள்ளன.
இரண்டிலும் பாகிஸ்தான் வென்றால்தான் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதில் ஏதாவது ஒன்றில் தோற்றாலும், பாகிஸ்தானின் நிலைமை பரிதாபம்தான்.
அதேநேரம், நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் வென்றால் 12 புள்ளிகளுடன் பாதுகாப்பாக அரையிறுதிக்குச் செல்லும். இல்லாவிட்டால், மற்ற அணிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்க நேரும், இழுபறியில் முடியும்.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை அடுத்து வரும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளை வென்றாலே 12 புள்ளிகளுடன் அரையிறுதி சென்றுவிடும். ஆனால், இப்போது கடைசி இடத்துக்காகத்தான் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தொடரும் ஆப்கானிஸ்தானின் சேஸிங் வெற்றி
பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை சேஸிங் செய்து ஆப்கானிஸ்தான் வென்று பேட்டிங் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றியபோதும், அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரஹ்மத் ஷா(52), கேப்டன் ஷாகிதி(56நாட்-அவுட்), ஓமர்ஜாய்(31) ஆகியோர் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
நெதர்லாந்து அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்த சுழற்பந்துவீச்சாளர் முகமது நபிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஏற்கெனவே பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக ரஹ்மத் ஷா,ஷாகிதி இருவரும் அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி சேஸிங்கில் வெற்றி கண்டனர்.
இப்போது 3வது போட்டியிலும் அசத்தியுள்ளனர். மூன்றாவது விக்கெட்டுக்கு ரஹ்மத் ஷா, ஷாகிதி கூட்டணி 74 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர். இந்தத் தொடரில் ரஹ்மத் ஷா 3வது முறையாக அரைசதம் அடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக மாறும் ஆப்கன் வீரர்கள்
ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் ஆகியவை இந்த உலகக்கோப்பைத் தொடரில் மாறுபட்ட கோணத்துடன் இருக்கிறது. அதிலும் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜெய் ஜடேஜா வந்த பிறகு ஆப்கானிஸ்தான் அணி ஒவ்வொரு போட்டிக்கும் வெற்றிக்கு கடைசி பந்துவரை முயல்வதை நிறுத்தவில்லை. அந்தப் போராட்டம்தான் சேஸிங்கிலும் சாதிக்க முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக 280 ரன்களுக்கு மேல் சென்னை ஆடுகளத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். இலங்கைக்கு எதிராக சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சை எதிர்கொண்டு நிதானமாக, ஒரு போட்டிக்கான தாத்பரியத்தோடு ஆடி வெற்றி பெற்றனர்.
மோசமான பந்துகளில் மட்டும் பவுண்டரி அடித்து, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஒரு ரன், 2 ரன்களாக சேர்த்து வெற்றியை ஒவ்வொரு படிக்கட்டாக நெருங்கி, எதிரணிக்கு நெருக்கடி அளித்து வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் அணியின் விஸ்வரூப வளர்ச்சி, போராட்டம், விடாமுயற்சி ஆகியவை அடுத்து வரும் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் நிச்சயம் சவாலாக மாறும். ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக எடுக்க மாட்டார்கள்.
ஆப்கானிஸ்தான் அணியில் உள்ள உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களான முகமது நபி, முஜிபுர் ரஹ்மான், நூர் அகமது, ரஷித் கான் ஆகியோரின் பந்துவீச்சு, நிச்சயம் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு நெருக்கடியாக அமையும். ஏற்கெனவே தென் ஆப்ரிக்கா அணி, நெதர்லாந்திடம் தோற்று கையைச் சுட்டுக்கொண்டதால், ஆப்கனை எளிதாக எடுக்கமாட்டார்கள்.
ஆப்கன் அணிக்கு சிக்கலாக மாறிய ரன்ரேட்
முகமது நபி சிறப்பான வீரர், அவரின் திறமையை வெளிப்படுத்திவிட்டார். நாங்கள் இந்த உலகக்கோப்பையில் ஒருங்கிணைந்து இருக்கிறோம். ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடுகிறோம், வெற்றியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம்.
அரையிறுதிக்குச் செல்ல எங்களால் முடிந்த அளவு முயல்வோம். அவ்வாறு நடந்தால் எங்கள் தேசத்துக்கு அது மிகப்பெரிய சாதனையாக அமையும். என்னுடைய தாய் 3 மாதங்களுக்கு முன் காலமாகிவிட்டார், நாங்கள் அரையிறுதி சென்றால் அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமையும்,” எனத் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 180 ரன்களை சேஸிங் செய்யப் புறப்பட்டாலும், 10 ஓவர்களில் ஜாத்ரன்(20), குர்பாஸ்(10) இருவரின் விக்கெட்டுகளையும் விரைவாக இழந்தது. ஆனால், 3வது விக்கெட்டுக்கு ரஹ்மத் ஷா, கேப்டன் ஷாகிதி கூட்டணி நங்கூரமிட்டது. இருவரும் நிலைத்து ஆடி அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றனர். 19 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது ஆப்கானிஸ்தான்.
ஆனால் அடுத்த 50 ரன்களை எட்டுவதற்கு 9 ஓவர்களை எடுத்துக்கொண்டதால் ரன்ரேட் திடீரென மந்தமாகியது. ரன்ரேட்டை 6 என்ற ரீதியில் கொண்டு சென்றிருந்தால், குறைந்த ஓவர்களிலேயே சேஸ் செய்திருக்கலாம்.
நெதர்லாந்து அணியின் பலவீனம்
அடுத்து வந்த, ஓமர்ஜாய், கேப்டன் ஷாகிதியுடன் இணைந்து நிதானமாக பேட் செய்தார். 59 பந்துகளில் ஷாகிதி அரைசதம் அடித்தார். 4வது விக்கெட்டுக்கு இருவரும் 52 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷாகிதி 56 ரன்களுடனும், ஓமர்ஜாய் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவு ஆப்கானிஸ்தான் பேட்டர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் இல்லை. நடுப்பகுதி ஓவர்களில் மட்டும் ரன்ரேட்டை இறுக்கிப் பிடிக்க சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தினர். மற்ற வகையில் நெதர்லாந்து பந்துவீச்சு ஸ்கோரை டிபெண்ட் செய்யும் விதத்தில் அமையவில்லை.
நெதர்லாந்து அணி பேட் செய்யும்போது, 4 ரன்-அவுட்கள் மூலம் பேட்டர்கள் ஆட்டமிழந்தது வேடிக்கையானது. பேட்டர்களுக்கு இடையே சரியான புரிதல் இல்லாமல் ஓடி விக்கெட்டுகளை இழந்தனர். பல உலகக்கோப்பைகளாக, பல பத்தாண்டுகளாக நெதர்லாந்து அணி கிரிக்கெட் விளையாடிய போதிலும், இன்னும் முதிர்ச்சியான கிரிக்கெட்டை ஆப்கானிஸ்தான் அணி வெளிப்படுத்திய அளவுக்கு வெளிப்படுத்த முடியவில்லை.
ஆடுகளம் எப்படி
இரவுநேரப் பனிப் பொழிவால் பந்துவீச்சு கடினமாகும் என்பதால், 250 ரன்களுக்கு மேல் சேர்த்தாலே சேஸிங் செய்வது கடினம் என்று கணிக்கப்பட்டது.
நெதர்லாந்து அணியின் ரன்-அவுட்கள்
நெதர்லாந்து பேட்டர்கள் வெஸ்லே, மேக்ஸ், ஆட்டத்தைத் தொடங்கினர். முஜிபுர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரின் கடைசிப் பந்தில் கால்காப்பில் வாங்கி வெஸ்லே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிகளில் முஜிபுர் ரஹ்மான் தனது 100வது விக்கெட்டை இதன்மூலம் வீழ்த்தினார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு வந்த ஆக்கர்மேன், மேக்ஸுடன் சேர்ந்து ரன்களை சேர்த்தார். இருவரும் பந்துகளை வீணடிக்காமல் ரன்களை சேர்த்தடடால், பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு நெதர்லாந்து 60 ரன்களை சேர்த்தது.
பன்னிரண்டாவது ஓவரில் மேக்ஸ் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்-அவுட் ஆனார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்த சில ஓவர்களில் ஆக்கர் மேன் 29 ரன்களில் விக்கெட் கீப்பர் இக்ரம் அலியால் ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸும் ரன்-அவுட் முறையில் டக்-அவுட்டாகி வெளியேறினார்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு வந்த பாஸ்டே லீட் 3 ரன்னில் முகமது நபி பந்துவீச்சிலும், அடுத்து களமிறங்கிய ஜுல்பிகர் 3 ரன்னில் நூர் அகமது பந்துவீச்சிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
நெதர்லாந்து அணி 73 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. ஆனால், அதற்கு அடுத்த 40 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 92 ரன்களில் இருந்தபோது அடுத்த 5 ரன்களை சேர்ப்பதற்கு உள்ளாகவே 3 விக்கெட்டுகளை நெதர்லாந்து அணி இழந்தது.
இருபது ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்த நெதர்லாந்து அணி, 30 ஓவர்கள் முடிவில், கூடுதலாக 33 ரன்கள் சேர்த்து மேலும் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
லோகன் வேன் பீக் 31வது ஓவரில், 2 ரன்கள் சேர்த்த நிலையில், முகமது நபி பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இதனால் 134 ரன்களுக்கு 7வது விக்கெட்டை நெதர்லாந்து இழந்தது.
விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும், நிதானமாக பேட் செய்த சைபேண்ட் எஞ்சல்பிரெச்ட் அரை சதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கடைசி வரிசை பேட்டர்களான வென் டெர் மெர்வ் 11 ரன்களில் நூர் அகமது பந்துவீச்சிலும், மீக்ரன் 4 ரன்னில் முகமது நபி பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்தனர்.
46.3 ஓவர்களில் நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 134 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நெதர்லாந்து, அடுத்த 35 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
வெற்றி பெற்றாலும் ஆப்கானிஸ்தானுக்கு சிக்கலா?
அடுத்து வரும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான ஆட்டங்களும் சவால் நிறைந்தவை. இதில் ஏதாவது ஒரு போட்டியில் வென்றால்கூட ஆப்கானிஸ்தான் 10 புள்ளிகள் பெறும், ரன்ரேட்டும் பிளசில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
அதேநேரம், நியூசிலாந்து அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள்தான் மீதம் உள்ளன. இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் இரண்டிலும் வென்றால் நியூசிலாந்து அரையிறுதி செல்வதில் சிக்கல் இருக்காது.
ஆனால் பாகிஸ்தானிடம் தோற்று, இலங்கை அணியை வென்றாலோ அல்லது பாகிஸ்தானை வென்று இலங்கையிடம் தோற்றாலோ 10 புள்ளிகளுடன் நியூசிலாந்து நின்றுவிடும்.
ஆப்கானிஸ்தான் ஒருவேளை தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் தென் ஆப்ரிக்கா அல்லது ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளில் ஏதேனும் ஒன்றைச் சாய்த்தாலும் 10 புள்ளிகளுடன் நின்றுவிடும்.
அதன் நிகர ரன்ரேட் மோசமான தோல்வியை அடைந்தால்தான் மைனஸில் செல்லும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஒரு தோல்வி அடைந்தால்கூட நிகர ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஆப்கானிஸ்தான் நிகர ரன்ரேட் குறைவாக இருந்தால், 10 புள்ளிகள் பெற்றாலும் அரையிறுதிக்குள் நுழைய முடியாத நிலை வரலாம்.
பாகிஸ்தான் அணிக்கு 2 போட்டிகள் மீதம் உள்ளன. 6 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான் அணி அடுத்து வரும் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் கண்டிப்பாக நல்ல ரன்ரேட்டில் வெல்ல வேண்டும். அவ்வாறு வென்றால்தான் அரையிறுதிக்குள் சிக்கலின்றி நுழைய முடியும். இதில் ஒன்றில் தோற்றாலும், திரும்பிச் செல்ல டிக்கெட் போட வேண்டியதுதான்.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக 3 ஆட்டங்கள் மீதம் உள்ளன.
இங்கிலாந்துக்கு எதிராக தோற்றால்கூட, மற்ற இரு ஆட்டங்களில் வென்றாலும் 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் எளிதாகச் செல்லும். 4வது இடத்துக்கான போட்டியில்தான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மல்லுக்கட்டுகின்றன.