காஸாவை மைய­மாகக் கொண்ட இஸ்­ரே­லிய, பலஸ்­தீன ஆயுத நெருக்­கடி. அதற்குத் தற்­கா­லி­க­மா­க­வேனும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்­பது உலக மக்­களின் அபி­லாஷை. சம­கா­லத்தின் சர்­வ­தேச அர­சியல் ஒழுங்கில் அதற்கு வாய்ப்பே இல்லை என்­பது கண் முன்னே நிற்கும் கசப்­பான உண்மை.

ஆயு­த­நெ­ருக்­கடி காட்­டாற்று வெள்­ள­மெனில் கையில் கிடைக்கும் சிறு துரும்­பேனும் காப்­பாற்ற உத­வுமா என்ற ஆசை எழு­வது இயல்பு.

இன்­றைய சூழ்­நி­லையில், அந்த சிறு துரும்பு சீனாவா என்ற கேள்வி எழு­வது இதனால் தான்.

கடந்த வாரம் சீன ஜனா­தி­பதி ஸி ஜின்பிங் மௌனம் கலைத்­தி­ருந்தார். மத்­திய கிழக்கில் உட­னடி போர் நிறுத்தம் அவ­சியம் என்­றி­ருந்தார். சீனத் தலை­ந­கரில் எகிப்­திய பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பைத் தொடர்ந்து, ஸி ஜின்பிங் விடுத்த கோரிக்கை அது.

இரு தேசங்கள் அரு­க­ருகே இருக்­கக்­கூ­டிய தீர்வு. அதன்­மூலம் சுதந்­திர பலஸ்­தீன இராச்­சியம். இதுவே நெருக்­க­டியில் இருந்து வெளியே வர அடிப்­ப­டை­யான வழி என்றார், சீனத் தலைவர். இது வழ­மைக்கு மாறா­ன­தாக இருந்­தது.

தேவை­யென்றால் பொரு­ளா­தார உதவி செய்­வ­தாகக் கூறிக் கொண்டு, நிபந்­த­னை­க­ளுடன் கடன் வழங்கும். அதன்­மூலம் ஒரு நாட்­டையே மண்­டி­யிடச் செய்து வளங்­களை விழுங்கி விடு­வது சீனாவின் தந்­தி­ரோ­பாயம்.

இருந்­த­போ­திலும், அர­சியல் நெருக்­கடி என்று வரு­கையில், எந்­த­வொரு தேசத்தின் உள்­வி­வ­கா­ரங்­க­ளிலும் தலை­யி­டு­வ­தில்லை என்ற நிலைப்­பாட்டை உரத்துக் கூறி, இதுவே வெளி­வி­வ­காரக் கொள்­கை­யென கடந்த காலம் முழு­வதும் சீனா வலி­யு­றுத்தி வந்­தது.

சம­கால மத்­திய கிழக்கு நெருக்­க­டியைப் பொறுத்­த­வ­ரையில், இரு தேச தீர்வை முன்­மொ­ழி­வ­துடன் சீனா நிற்­க­வில்லை. ஐக்­கிய நாடுகள் சபை­யிலும் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யது.

மத்­திய கிழக்கில் உட­ன­டி­யாக போர் நிறுத்தம் அவ­சியம் என்ற கோரிக்­கை­யுடன் ரஷ்யா பிரே­ர­ணையைக் கொண்டு வந்­த­போது, அமெ­ரிக்கா வீட்டோ அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி ரத்துச் செய்­தது. அதற்கு சீனா வெளிப்­ப­டை­யாக அதி­ருப்­தியை வெளி­யிட்­டது.

இதன்­மூலம், இரா­ஜ­தந்­திர ரீதி­யாக இரண்டு நோக்­கங்­களை நிறை­வேற்ற சீனா விரும்­பு­கி­றது எனலாம்.

வளர்­முக நாடு­களின் ஆபத்­பாந்­தவன் தோற்­றப்­பாட்டை நிலை­நி­றுத்­து­வது முதல் நோக்கம். அர­சியல் ரீதி­யாக முனை­வாக்­கப்­பட்ட உலகில், அமெ­ரிக்­கா­வுக்கு மாற்­றாகத் திகழும் வல்­ல­ர­சாக நிலைப்­ப­டுத்திக் கொள்­வது அடுத்த நோக்கம்.

ரஷ்ய, உக்­ரே­னிய நெருக்­க­டி­யிலும் சீனாவின் நேரடித் தலை­யீட்டைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இரு நாடு­க­ளுக்கும் இடையில் அர­சியல் தீர்­வையும் சீனா முன்­மொ­ழிந்­தது.

இப்­போது, இஸ்ரேல், பலஸ்­தீனம் ஆகிய இரு­த­ரப்­பு­க­ளுக்கும் நட்பு நாடாக தன்னை வர்­ணித்துக் கொண்டு, இரா­ஜ­தந்­திர முனைப்­புக்­களை சீனா ஆரம்­பித்­துள்­ளது.

சீன வெளி­வி­வ­கார அமைச்­சரின் அமெ­ரிக்க விஜ­யத்­தையும் இத்­த­கைய இரா­ஜ­தந்­திர முயற்­சியின் ஓரம்­ச­மா­கவே பார்க்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

மத்­திய கிழக்கின் அர­சியல் வர­லாற்றில் சீனாவின் பங்­க­ளிப்பைப் பார்க்­கலாம்.

மாவோ சே துங்

1949ஆம் ஆண்டு காலப் பகு­தியில் இஸ்­ரே­லுடன் இரா­ஜ­தந்­திர உற­வு­களை ஏற்­ப­டுத்த சீனா முயன்­ற­தென்­னவோ உண்­மையே.

எனினும், 1960களில் அப்­போ­தைய தலைவர் மாவோ சே துங் பலஸ்­தீன விடு­தலைப் போரா­ளி­க­ளுக்கு ஆயுதம் வழங்கி உதவி செய்தார். பலஸ்­தீ­னர்­க­ளுக்கும், அரே­பிய நாடு­க­ளுக்கும் சீனா வெளிப்­ப­டை­யா­கவே ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யது.

மாவோ மறைந்து, வெளி­யு­லகத் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தத் தொடங்­கி­யதை அடுத்து, சீனாவின் கொள்­கை­களும் மாறின.

1992இல் இஸ்­ரே­லுடன் இரா­ஜ­தந்­திர உறவை ஏற்­ப­டுத்­தி­யது. இஸ்ரேல், பலஸ்­தீ­னர்கள் ஆகிய இரு தரப்­பு­க­க­ளு­ட­னான உற­வு­களில் சம­நி­லையைப் பேண முனைந்­தது.

வேறு நாடு­களில் பிரச்­சி­னை­களைத் தீர்க்க, சீனா இரா­ஜ­தந்­தி­ரிகள் தீர்வு யோச­னை­களை வரை­வார்கள். ஆனால், இன்­னொரு நாட்டின் உள்­வி­வ­கா­ரங்­களில் தலை­யி­டாமை என்ற கொள்கை கார­ண­மாக தீர்வு முயற்­சிகள் தேக்க நிலையை அடை­வது வழக்கம்.

எனினும், ஸி ஜின்பிங் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வாகி, சீனாவின் பொரு­ளா­தார ஆதிக்­கத்தை உலகம் முழு­வதும் வியா­பிக்க செய்­த­போது, கொள்­கைகள் மாற்றம் கண்­டன.

அரபு நாடு­களைத் தம்­பக்கம் ஈர்த்துக் கொண்டு, இஸ்­ரே­லி­யர்­களும், பலஸ்­தீ­னர்­க­ளுக்கும் இடை­யி­லான நெருக்­க­டியில் மத்­தி­யஸ்தம் செய்­யவும் சீனா முன்­வந்­தது.

கடந்த ஜூன் மாதம் பலஸ்­தீன அதி­கார சபையின் தலைவர் மஹ்மூத் அப்­பா­ஸுடன் சீன ஜனா­தி­பதி உடன்­ப­டிக்­கை­யொன்றை ஏற்­ப­டுத்­தினார். உத­விக்­காக கையேந்தி நின்ற மஹ்மூத் அப்பாஸ், சீனா­வுக்கு அதீத விசு­வா­சத்தைக் காண்­பிக்க முனைந்த விதம் வேடிக்­கை­யா­னது.

சீனா உய்கூர் முஸ்­லிம்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் தவ­றில்லை. அது கடும்­போக்­கு­வா­தம் சம்­பந்­தப்­பட்­ட­தாகும். அதில் மனித உரி­மைகள் பற்­றி­யெல்லாம் பேச முடி­யா­தென அப்பாஸ் துதி பாடினார்.

கடந்த மூன்று வார கால­மாக மத்­திய கிழக்கில் நிகழும் ஆயு­த­மோ­தல்கள் தொடர்­பிலும் சீனா கவ­ன­மா­கவே நடந்து கொள்­கி­றது.

மேலைத்­தேய நாடுகள் ஹமாஸ் இயக்­கத்தை மிகவும் கடு­மை­யான கண்­டித்­த­போ­திலும், சீன அதி­கா­ரிகள் ஹமாஸ் என்ற சொல்­லையே தவிர்த்து வந்­தி­ருக்­கி­றார்கள்.

அமெ­ரிக்­காவும், பிரிட்­டனும் காஸா­வா­சிகள், மேற்குக் கரை­வா­சிகள் என்று பிரித்­தாளும் இரா­ஜ­தந்­தி­ரத்தை அனு­ச­ரித்து காஸாவில் உள்­ள­வர்­களை பயங்­க­ர­வா­தத்­துக்கு உடந்­தை­யாக நிற்­ப­வர்கள் என்ற சித்­தி­ரத்தை ஏற்­ப­டுத்த முனை­கையில், சீனாவோ இஸ்­ரே­லிய- – – பலஸ்­தீன நெருக்­கடி என்றே கூறு­கி­றது.

சீன வெளி­வி­வ­கார அமைச்சர் இஸ்­ரேலை நேர­டி­யாக கண்­டிக்­கிறார். சுய­பா­து­காப்பு என்ற தேவையைத் தாண்டிச் செல்­வ­தாக இஸ்ரேல் மீது விரல் நீட்­டி­விட்டு, காஸா மக்கள் மீதான கூட்­டுத்­தண்­ட­னையை நிறுத்­துங்கள் என்று கோரிக்கை விடு­கிறார்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக குரல் கொடுத்தல் என்ற தார்­மீ­கத்தைத் தாண்­டிய ராஜ­தந்­திரம் அவ­ரது கோரிக்­கையில் இருக்­கி­றது. இஸ்­ரே­லுடன் கூட்டு சேர்ந்து மத்­திய கிழக்கில் அமெ­ரிக்கா நிலை­நாட்­டி­யுள்ள ஏகா­தி­பத்­தி­யத்தி;ற்கு எதி­ராக குரல் எழுப்­ப­வது அவ­ரது சாணக்­கியம்.

மத்­திய கிழக்குப் பிராந்­தி­யத்தில் இழு­பட்டு நீடிக்கும் நெருக்­க­டி­களில் இருந்து சீனா எப்­போதும் தூர வில­கியே நின்­றது. எனினும், சமீ­ப­கா­ல­மாக சீனாவில் போக்கு மாறி­யி­ருக்­கி­றது.

இங்கு பொரு­ளா­தார ரீதி­யாக காலூன்­றினால் மாத்­திரம் போதாது, அர­சியல் ரீதி­யாக ஆதிக்கம் செலுத்­தக்­கூ­டிய சக்தி இருக்க வேண்­டு­மென சீனத் தலை­வர்கள் நினைப்­ப­தாக இருக்­கக்­கூடும்.

உலக ஒழுங்கை தனக்குச் சார்­பா­ன­தாக மாற்றிக் கொள்ளும் வகையில் அரே­பிய நாடு­களின் ஆத­ரவை வென்­றெ­டுப்­பதும் இன்­னொரு நோக்­க­மாக இருக்­கலாம்.

இன்று ஐக்­கிய நாடுகள் சபையின் ஊடாக காஸா மக்­க­ளுக்கு உணவு, மருந்து முத­லான பொருட்­களை வழங்கப் போவ­தாக சீனா உறு­தி­ய­ளித்­துள்­ளது.

இஸ்­ரே­லி­யர்­களைப் பொறுத்­த­வ­ரையில், சீனா­வுடன் உறவைப் பேண விரும்­பி­னாலும் அவர்கள் சீனாவை நடு­நி­லை­யான சமா­தான தர­க­ராக பார்ப்­பது கிடை­யாது.

கடந்த ஏழாம் திகதி ஹமாஸ் இயக்கம் இஸ்­ரே­லி­யர்­களைத் தாக்­கி­யதைத் தொடர்ந்து, சீனா­வுக்­கான இஸ்­ரே­லியத் தூதுவர் சற்றுக் கடு­மை­யான தொனியில் பேசினார்.

ஆட்கள் வீதி­களில் கொல்­லப்­ப­டும்­போது, இரு தேசத் தீர்­வுகள் பற்றி பேச­லாமா என்று அவர் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

வர­லாற்று ரீதி­யான சார்பு கார­ண­மா­கவோ என்­னவோ, சீனர்­களின் தலை­யீட்டை பலஸ்­தீ­னர்கள் விரும்­பு­கி­றார்கள். பலஸ்­தீன அதி­கா­ர­ச­பையின் பிர­தி­நி­திகள், சீனாவின் மீது பலஸ்­தீ­னர்­க­ளுக்கு உள்ள நம்­பிக்கை வெளிப்­ப­டை­யா­கவே விப­ரித்­துள்­ளார்கள்.

இத்­த­கைய பின்­பு­லத்தில், தற்­போது காஸாவில் தொடரும் அவ­லத்தை நிறுத்தும் ஆற்றல் சீனா­விற்கு இருக்­குமா என்­பது கேள்­விக்­கு­ரிய விட­யமே.

வர­லாறு நெடு­கிலும் பகை­யா­ளி­க­ளாகத் திகழ்ந்த சவூதி அரே­பி­யா­வையும், ஈரா­னையும் இணங்கச் செய்து, இரு­நா­டு­க­ளுக்கும் இடை­யி­லான இரா­ஜ­தந்­திர உற­வு­களைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் சீனா வெற்றி பெற்­ற­தென்­னவோ உண்­மையே.

ஆனால், ரஷ்ய – உக்­ரே­னிய ஆயு­த­மோ­தலை நிறுத்­து­வதில் சீனா­விற்கு எத­னையும் சாதிக்க முடி­ய­வில்லை. உக்­ரே­னிய மக்கள் சீனாவை நம்­ப­வில்லை என்­பது கார­ண­மாக இருக்­கலாம்.

ஹமா­ஸுக்கும், இஸ்­ரே­லுக்கும் இடையில் போர் நிறுத்­தத்தை சாத்­தி­யப்­ப­டுத்த வேண்­டு­மாயின், ஈரானின் உத­வி­யுடன் ஹமாஸ் இயக்­கத்தின் மீது சீனா அழுத்தம் கொடுக்க வேண்டியதாக இருக்கும். இதனை செய்ய சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை இடமளிக்குமா என்பது தெரியவில்லை.

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி அமெரிக்கா சென்றிருக்கிறார்.

இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு காண சர்வதேச சமாதான மாநாட்டை நடத்த வேண்டும் என்ற விடயத்தை அவர் எடுத்துச் சென்றிருப்பதாகத் தெரிகிறது.

இன்று காஸா மனிதப் பேரவலங்களில் உயிர்கள் பலியாகும் பெரும் மயான பூமியாகிக் கொண்டிருக்கிறதாயின், இஸ்ரேலிய – பலஸ்தீன நெருக்கடியின் எல்லா கட்டடங்களிலும் அமெரிக்கா விட்ட தவறு தான் முக்கிய காரணம் என்பதை உலக மக்கள் அறியத் தலைப்பட்டுள்ளனர். அதை வெளிப்படையாகக் கூறியும் வருகிறார்கள்.

இன்று வல்லரசு போட்டிகளை ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு, இதயசுத்தியுடன் சீனாவின் திட்டத்தை ஆதரித்தால், அது காஸாவில் வாழும் மக்களுக்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் நன்மை பயக்கும்.

-சதீஷ் கிருஷ்ணபிள்ளை

 

Share.
Leave A Reply

Exit mobile version