யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பொலிகண்டி தெற்கில் அமைந்துள்ள கிணறு ஒன்று நேற்றையதினம் (03) திடீரென தாழிறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிகண்டி தெற்கு J/395 கிராமசேவையாளர் பிரிவில் வீரபத்திரர் ஆலயத்துக்கு அருகில் நேற்று காலை இச்சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து அருகிலுள்ள நிலங்கள், மதிலில் வெடிப்பு ஏற்பட்டது.
பிரதேச சபை மேலதிக செயலாளர் கம்சநாதன் உடனடி நடவடிக்கை
தாழிறங்கிய கிணற்றிற்கு மிக அருகில் ஆலயமும், வீடும் காணப்படும் நிலையில் பிரதேச மக்களுக்கு, மேலும் ஏதாவது அனர்த்தம் நிகழுமோ என்ற அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உடனடியாக அப்பகுதி பொதுமக்களால் பருத்தித்துறை பிரதேச சபையினருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் அங்கு சென்ற பருத்தித்துறை பிரதேச சபையின் மேலதிக செயலாளர் கம்சநாதன் உள்ளிட்ட சபையின் அலுவலர்கள் அங்குள்ள நிலைமையை பார்வையிட்டு மேலும் அப்பகுதியில் அனர்த்தம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் உடனடியாக செயற்பட்டனர்.
நேற்றுக் காலை பிரதேச சபையின் வாகனங்களுடன் சென்ற பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு வரை கனரக வாகனங்கள் மூலம் மண்ணை கொண்டுவந்து கொட்டியும், மழை வெள்ளம் குறித்த பகுதிக்குள் நுழையாமல் தடுக்கும் நோக்கில் உரப் பைகளில் மண்ணை இட்டு மண் தடுப்பணையை ஏற்படுத்தி மீண்டும் அனர்த்தம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
அதன் பின் நேற்றிரவு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற உயர்மட்ட உத்தரவை அடுத்து மேற்படி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அதேவேளை அப்பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் தாழிறங்கிய கிணற்றை தொடர்ந்து அருகிலுள்ள வீடு, கோயில் என்பனவும் தாழிறங்கும் பட்சத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
சம்பவம் தொடர்பில் உடனடியாக பருத்திதுறை பிரதேசசபைக்கு மக்கள் அறிவித்த நிலையில், பிரதேச சபை மேலதிக செயலாளரின் வழிகாட்டலில் பிரதேச சபை ஊழியர்கள் மட்டுமே முன்னின்று சீரமைக்கும் பணியில் இடுபட்டதாகவும் , அக்கறை செலுத்தக்கூடிய இத்துறைசார்ந்த அரச அதிகாரிகள் அப்பகுதிக்கு உடனடியாக செல்லவில்லை எனவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.