தன்னை வளர்த்தவர் உயிரிழந்துவிட்டது தெரியாமல் ஒரு நாய் கேரளா கண்ணூர் மருத்துவமனை பிணவறை முன்பு 4 மாதங்களாகக் காத்திருக்கிறது.
மனிதர்களிடம் அதிக அன்புடன் வாழும் ஓர் உயிரினம் நாய் என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனை பிணவறை முன்புள்ள வறாண்டாவில் ஒரு நாய் நீண்ட நாள்களாக உலாவிக் கொண்டிருக்கிறது.
தொடக்கத்தில் அந்த நாயை யாரும் கண்டுகொள்ளவில்லை. மற்ற நாய்களுடன் இணையாமல், யாருக்காகவோ காத்திருப்பது போன்ற உணர்வு வெளிப்படவே மருத்துவமனை ஊழியர்கள் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், “தொடக்கத்தில் அந்த நாயை நாங்கள் கண்டுகொள்ளவில்லை.
அந்த இடத்தை விட்டு அது பெரிதாக எங்கும் செல்லவில்லை. விசாரணையில், அது தன்னை வளர்த்தவருடன் மருத்துவமனைக்கு வந்துள்ளதாகவும், சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
கடைசியாக அவரின் உடலை இந்த வழியாக தான் பிணவறைக்கு கொண்டு சென்றனர். பிறகு பிணவறையில் உள்ள மற்றொரு நுழைவு வழியாக அவரின் உடலை எடுத்துச் சென்றுவிட்டனர்.
அது நாய்க்கு தெரியவில்லை. அவர் இன்னும் உள்ளே இருக்கிறார் என்று நினைத்து கடந்த 4 மாதங்களாக வெளியிலேயே காத்திருக்கிறது.
அவ்வப்போது ஃபிசியோதெரபி பிரிவு கட்டடம் அருகே செல்லும். தொடக்கத்தில் உணவுகூட உட்கொள்ளவில்லை. சில நாள்களுக்குப் பிறகு நாங்கள் கொடுத்த பிஸ்கெட் உள்ளிட்டவற்றை சாப்பிடத் தொடங்கியது.
இதற்கு ‘ராமு’ என்று பெயர் வைத்துள்ளோம். இங்குள்ள மருத்துவர் அதற்கு தினமும் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருகிறார். கண்ணூரில் உள்ள ஒருவர் இந்த நாயைத் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.” என்றனர்.
100 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானைச் சேர்ந்த ‘ஹச்சிகோ’ (Hachiko) என்ற நாயின் உரிமையாளர் இறந்துள்ளார். ஆனால், அவருக்காக அந்த நாய் ரயில் நிலையம் முன்பு சுமார் 9 ஆண்டுகள் காத்திருந்தது. அது பிற்காலத்தில் படமாகவும் எடுக்கப்பட்டது.
நாய்கள் மிகவும் நன்றியுள்ளவை என்பதற்கு உதாரணமாகச் சொல்லப்படும், அந்த சம்பவத்துடன் இது கேரளாவின் ஹச்சிகோ என்று சேட்டன்கள் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.