ஒருத்தரும் வரலை என்றால், நிஜமாகவே ஒருத்தர் கூட திருமணத்திற்கு வாழ்த்துவதற்காக நேரில் செல்லவில்லை. சுமார் 1000 பேருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தும் ஒருவர் கூட திருமண நிகழ்வில் கலந்து கொள்ளாததால், திருமணம் நடைப்பெற்ற மைதானமே வெறிச்சோடி போயிருந்தது. ஆயிரம் பேருக்கு சமைத்து வைத்திருந்த உணவு வகைகள் வீணானது. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் யாருமே தென்படாததால், மணமேடையில் இருந்த கல்யாண மாப்பிள்ளைக்கு பேரதிர்ச்சியுடன் கண்ணீரே வர துவங்கியிருந்தது.

“மனிதன் ஒரு சமூக விலங்கு” இந்த வாசகத்தை நம்மில் அனைவருமே கேட்டிருப்போம்.. என்னதான் நான் உலக விஷயங்களில் எல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லாதவன் என்று கூறினாலும் எதார்த்தத்தில் சமூகத்துடன் சில விஷயங்களில் ஒத்து வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

அதே போல் மகிழ்ச்சி பகிரும் போதுதான் பெருகும். திருமணம் போன்ற வாழ்வின் முக்கிய நிகழ்வுகளில் உற்றார் உறவினர், அக்கம்பக்கத்தினர், நலம் விரும்பிகள் என அனைவரையும் அழைத்து விருந்திட்டு மகிழ்வோம். இவ்வாறு செய்கையில் நமது உள்ளம் மனநிறைவடையும், அதே போல் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். இதனால்தான் மக்கள் இன்று வரை இந்த கலாச்சாரத்தை அனைத்து நாடுகளிலும் பின்பற்றி வருகின்றனர்.. இவ்வாறு சமூக வாழ்க்கையில் இவற்றை செய்யாமல் இருந்தால் என்ன நேரும் என்பதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது சீனாவில் அரங்கேறியுள்ள இந்த நிகழ்வு.

சீனாவில் உள்ள இளைஞர் ஒருவர் தனது சொந்த கிராமத்தில் இருந்து சில தூரம் தள்ளி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் உறுதி செய்யப்படவே தனது திருமணத்தை சொந்த கிராமத்தில் நடத்த திட்டமிட்டு கிராமத்தில் உள்ள 1000 குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திருமணத்தில் 1000 பேருக்கு உணவு, 1000 பேர் உட்கார எதுவாக இருக்கைகள் என பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண தேதி அன்று விருந்தினர்களை உபசரிக்க காத்திருந்த இவர்களுக்கு எஞ்சியது பேரதிர்ச்சிதான். ஆம் கிராமத்தில் இருந்து ஒருவர் கூட திருமணத்திற்கு வரவில்லை.

”1000 பேருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு, இருக்கைகள் என அனைத்தும் வீணாகிவிட்டது எனது மகனுக்கும் இது மிக பெரிய அசிங்கமாகிவிட்டது” என மணமகனின் தாயார் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். ஒருவர் கூடவா வரவில்லை என்றால்.. ஆம்.. ஒரு நபர் கூட வரவில்லை, வெறிச்சோடி காணப்பட்டது அந்த திருமண நிகழ்வு.

அப்படி என்ன காரணமாக இருக்கும்..? திருமணத்திற்கு ஒரு பத்திரிக்கையை கூட மணமகன் வீட்டில் அச்சடிக்கவில்லை.. ஆம், வாய்மொழியில் அழைத்தாலே போதுமானது, அனைவரும் பங்கேற்பார்கள் என்று நினைத்து, திருமணத்திற்கு வந்துவிடுங்கள் என்று வாயால் மட்டுமே அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் கிராமத்தை விட்டு வெளியே இருந்ததால் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் இவர்கள் எந்த ஒரு நிகழ்வுகளிலும் பங்கேற்காமல், கிராமத்தினருடன் பெரிதாக தொடர்பு வைத்துக்கொள்ளாமல் இருந்துள்ளனர். இதுதான் ஒருவர் கூட அந்த திருமணத்தில் பங்கேற்காததற்கு காரணம். இதனால் மொத்த உணவுகளும் வீணானதுதான் மிச்சம். இப்போது புரிந்திருக்கும் மனிதன் ஏன் சமூக விலங்காக இருக்க வேண்டும் என்று.

 

Share.
Leave A Reply

Exit mobile version