Site icon ilakkiyainfo

வரலாற்றுச் சமர் : 30 ஆண்டுகள்

முப்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இதே நாளில் உலக ஊட­கங்கள் பூந­கரி என்ற பெயரை உச்­ச­ரித்துக் கொண்­டி­ருந்­தன. பூந­க­ரியில் அமைந்­தி­ருந்த பாரிய கூட்டுப் படைத்­தளம் மீது விடு­தலைப் புலிகள் தொடுத்த பாரிய தாக்­குதல் தான் அதற்குக் காரணம்.

‘ஒப்­ப­ரேசன் தவளை’ என்ற பெயரில் விடு­தலைப் புலிகள் மேற்­கொண்ட தாக்­குதல், அந்தக் கால­கட்­டத்தில் சர்­வ­தேச அளவில் மிகப்­பெ­ரிய கவனத்தை ஈர்த்­தது.

நாக­தே­வன்­துறை, சங்­குப்­பிட்டி இறங்­கு­துறை, பூந­கரி, பள்­ளிக்­குடா, கூமர், கெள­தா­ரி­முனை, கல்­முனை என கிட்­டத்­தட்ட 16 கிலோ­மீற்றர் நீளத்தில், 29 கிலோ மீற்றர் சுற்­ற­ளவில், 30 கிலோ மீற்றர் பரப்­ப­ளவில், பரந்து விரிந்து கிடந்த அந்த படைத்­தளம் மீது விடு­தலைப் புலிகள் ஈரூ­டகத் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­தனர்.

வில்­ல­டியில் கட்­டளை முகாம், நாக­தே­வன்­து­றையில் படகுத் தளம், ஞானி­ம­டத்தில் கடற்­படைத் தளம், கூமரில் இறங்­கு­து­றை­யுடன் கூடிய முகாம், பள்­ளிக்­குடா மற்றும், ஆல­டியில் இரண்டு முகாம்கள், பள்­ளிக்­கு­டா­வுக்கும், கூம­ருக்கும் இடையில் ஒரு விநி­யோக முகாம் என- 7 பிர­தான இரா­ணுவ, கடற்­படை முகாம்­களைக் கொண்­டி­ருந்­தது அந்த பெருந்­தளம்.

12 அதி­கா­ரி­களும் 288 படை­யி­னரும் என, மொத்தம் 300 கடற்­ப­டை­யி­னரும், – 56 அதி­கா­ரி­களும், 2236 படை­யி­ன­ரு­மாக மொத்தம் 2292 இரா­ணு­வத்­தினர் என, மொத்தம் 2592 அரச படை­யினர் அங்கு நிலை­கொண்­டி­ருந்­தனர்.

லெப்.கேணல் ரஞ்சித் சில்வா தலை­மையில் 1ஆவது இலகு காலாட்­படை, மேஜர் லலித் தவு­ல­கல தலை­மையில் 3ஆவது கஜபா ரெஜிமென்ட் ஆகிய இரண்டு பற்­றா­லி­யன்கள் நிலை­கொண்­டி­ருந்த அந்த படைத்­த­ளத்தில் கடற்­ப­டையின் மூன்று உப படைப்­பி­ரி­வு­களும், 6 நீருந்து விசைப்­ப­ட­கு­களும், இரா­ணு­வத்தின், கவசப் படைப்­பி­ரிவின் இரண்டு ரி 55 பிர­தான சண்டை டாங்­கி­களும், 120 மில்லி மீற்றர் மோட்­டார்­க­ளுடன், ஆட்­டி­லறிப் படைப்­பி­ரிவின், ஒரு பட்­ட­ரியும் தளத்தின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக நிறுத்­தப்­பட்­டி­ருந்­தன.

படை­பலம் மற்றும் ஆயுத பலத்­தினால் வீழ்த்த முடி­யாத இலக்­காக அது கரு­தப்­பட்­டது. தேவைப்­படும் போது, பலா­லியில் இருந்தும், தீவ­கத்தில் இருந்தும் ஆனை­யி­றவில் இருந்தும் சூட்­டா­த­ர­வையும், உதவிப் படை­க­ளையும் வழங்கக் கூடிய நிலை­யிலும், பலா­லியில் இருந்து வான் படை­களின் உத­வியைப் பெறக் கூடிய நிலை­யிலும், காரை­நகர், காங்­கே­சன்­துறை கடற்­படைத் தளங்­களில் இருந்து கடற்­படை உத­வியை பெறக் கூடிய நிலை­யிலும்- அந்த பெருந்­தளம் இருந்­தது.

இவ்­வா­றா­ன­தொரு தளத்தின் முன்­ன­ரங்க நிலை­களை விடு­தலைப் புலி­களின் படை­ய­ணிகள், 1993 நவம்பர் 10ஆம் திகதி இர­வோடு இர­வாக ஊடு­ருவத் தொடங்­கின. மறுநாள் 11ஆம் திகதி அதி­காலை 1 மணி­ய­ளவில், பெரும் சமர் மூண்­டது.

விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் நேரடி நெறிப்­ப­டுத்­தலில், புல­னாய்­வுத்­துறை பொறுப்­பா­ள­ராக இருந்த பொட்­டம்மான் அந்த தாக்­கு­தலை ஒருங்­கி­ணைத்தார். கடல்­வழி நட­வ­டிக்­கை­களை கடற்­பு­லி­களின் தள­பதி சூசையும், தரை நட­வ­டிக்­கை­களை தள­பதி சொர்­ணமும் தலைமை தாங்கி முன்­னெ­டுத்­தனர்.

கிழக்கில் இருந்து பெரும் படை­ய­ணி­யுடன் சென்ற கருணா, மற்றும் அனைத்து மாவட்டத் தள­ப­தி­களும், தங்­களின் படை­ய­ணி­க­ளுடன் இந்த தாக்­கு­தலில் பங்­கெ­டுத்­தனர்.

தரை­வ­ழி­யா­கவும், கடல்­வ­ழி­யா­கவும் படைத்­த­ளத்­துக்குள் ஊடு­ருவி நடத்­தப்­பட்­டதால் அதற்கு ‘தவளை’ என்று பெய­ரி­டப்­பட்­டது.

இரா­ணுவ முன்­ன­ரண்­களை தாக்­கி­ய­ழித்துக் கொண்டு முன்­னேறிச் செல்லும் வழக்­கத்­துக்கு மாறாக, முன்­ன­ரங்க நிலை­களை ஊடு­ருவி நிலை கொண்ட பின்னர் தொடங்­கப்­பட்ட தாக்­குதல் அது.

ஏற்­கெ­னவே 1992 நவம்­பரில், பலாலிப் படைத்­த­ளத்தின் கிழக்குப் பகு­தியில், ஒட்­ட­கப்­புலம் தொடக்கம் வளலாய் வரை­யான சுமார் நான்­கரைக் கிலோ­மீற்றர் நீள­மான முன்­ன­ரங்க நிலைகள் மீதும் இதே வகை­யா­ன­தொரு தாக்­கு­தலை புலிகள் நடத்­தி­யி­ருந்­தனர். அந்த தாக்­கு­தலில் இருந்து அர­ச­ ப­டை­யினர் பாடம் கற்­றி­ருந்தால், பூந­க­ரியில் பெருந்­தோல்­வியைத் தவிர்த்­தி­ருக்­கலாம்.

பூந­கரிப் படைத்­தளம் மீது தாக்­குதல் தொடங்­கப்­பட்ட குறு­கிய நேரத்­துக்­குள்­ளா­கவே அதன் பிர­தான பகு­திகள் புலி­க­ளிடம் வீழ்ச்­சி­ய­டையத் தொடங்­கின.

நாக­தே­வன்­துறை, ஞானி­மடம் கடற்­படைத் தளங்கள் வீழ்ச்­சி­ய­டைய, அங்­கி­ருந்த 5 நீருந்து விசைப்­ப­ட­குகள் கடற்­பு­லி­களால் கைப்­பற்­றப்­பட்­டன.

இரண்டு டாங்­கி­களும் புலி­க­ளிடம் வீழ்ச்­சி­ய­டைந்­த­துடன், 120 மி.மீற்றர் மோட்­டார்­களும் புலி­களால் கைப்­பற்­றப்­பட்­டன.

கைப்­பற்­றப்­பட்ட டாங்­கி­களில் ஒன்று விமா­னப்­ப­டையின் குண்டு வீச்சில் சேத­ம­டைந்து கைவி­டப்­பட்­டது.

மற்­றது புலி­களால் பத்­தி­ர­மாக கொண்டு செல்­லப்­பட்டு, இறு­திக்­கட்டப் போர் வரையில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது,

இந்த டாங்­கினால், பல்­வேறு சம­யங்­களில் இரா­ணு­வத்­தினர் பெரும் இழப்­பு­களை எதிர்­கொள்ள நேரிட்­டது என்று ஜெனரல் கமல் குண­ரட்ண குறிப்­பிட்­டி­ருந்தார்.

புலி­களின் தாக்­கு­தலில் படை­யினர் சித­றி­யி­ருந்த நிலையில் அவர்­களை ஒன்­றி­ணைக்­கவோ மேல­திக உத­வி­களை வழங்­கவோ முடி­யாத நிலை காணப்­பட்­டது.

இந்த தாக்­குதல் ஆரம்­பிக்க முன்­னரே பலாலி பெருந்­த­ளத்­துக்­குள்­ளேயும், 30 பேர் கொண்ட ஒரு கரும்­புலி அணியை புலிகள் ஊடு­ருவச் செய்­தி­ருந்­தனர்.

கடல்­வ­ழி­யாக பலாலி தளத்­துக்குள் ஊடு­ரு­விய அந்த அணி­யினர், பூந­க­ரியில் தாக்­குதல் தொடங்­கி­யதும், பீரங்கிச் சூட்டு ஆத­ர­வையோ விமா­னப்­ப­டையின் விமா­னங்கள், ஹெலி­களின் ஆத­ர­வையோ பெற்றுக் கொள்ள முடி­யாது, தொலைத்­தொ­டர்பு கோபு­ரத்தை தாக்கி அழித்து, வட­புலப் படைத் தலை­மை­ய­கத்தை குழப்­பத்­துக்­குள்­ளாக்கும் திட்­டத்தைக் கொண்­டி­ருந்­தனர்.

புலி­களின் இரண்டு அணி­களில் ஒன்று வழி தவறிப் போனது.

மற்­றொரு அணி கரும்புத் தோட்டம் ஒன்றின் ஊடாக விமா­னப்­படைத் தளத்தை நெருங்­கிய போது இரா­ணு­வத்­தி­னரின் கண்ணில் பட்டு விட, அங்கு நடந்த சண்­டையில் 13 கரும்­பு­லிகள் சாவ­டைந்­தனர்.

ஏனை­ய­வர்கள் தாக்­கு­தலை முன்­னெ­டுக்க முடி­யாமல் தளம் திரும்­பினர்.

இதனால் பலா­லியில் இருந்து புக்­காரா, மற்றும் சியா­மா­செற்றி குண்டு வீச்சு விமா­னங்­களும் சீனக்­கு­டாவில் இருந்து எவ் 7 ஜெட் போர் விமா­னங்­களும் விரைந்து சென்று- பூந­க­ரியில் படை­யி­ன­ருக்கு உத­வி­யாக தாக்குல் தொடுக்க முயன்­றன.

ஆனால், புலி­களின் விமான எதிர்ப்பு பீரங்­கிகள் விமா­னங்­களின் தாக்­குதல் ஆத­ரவை பெற­மு­டி­யாமல் செய்­தது.

அது­போல கடல் வழி­யாக உதவ முற்­பட்ட கடற்­ப­டை­யி­னரை கடற்­பு­லி­களின் சண்டைப் பட­குகள் வழி­ம­றித்து தாக்­கின.

கடற்­க­ரை­யோ­ரங்­களில் புலிகள் நிலை­யெ­டுத்து நின்று கன­ரக ஆயு­தங்­க­ளினால் தாக்­குதல் நடத்­தினர்.

இதனால் 11, 12ஆம் திக­தி­களில் உத­விப் படை­களை தரை­யி­றக்க முடி­ய­வில்லை.

அதே­வேளை தளம் முழு­வ­தையும் கைப்­பற்றி அழிக்கும் புலி­களின் முயற்­சி­களும் முழு வெற்றி அளிக்­க­வில்லை.

பரந்த பிர­தே­சத்தில் தப்­பி­யோ­டி­யி­ருந்த படை­யி­னரை தேடித் தேடி அழிப்­பது புலி­க­ளுக்கு கடி­ன­மாக இருந்­தது. பற்­றைக்­கா­டுகள் நிறைந்த பகு­தியில் அது கடி­ன­மான காரி­ய­மாக இருந்­தது. 13ஆம் திகதி அதி­கா­லையில் கடற்­ப­டையின் விசேட படகுப் படை­ய­ணியின் தலா 15 கொமாண்­டோக்­க­ளுடன் இரண்டு நீரூந்து விசைப்­ப­ட­குகள், லெப்.கொமாண்டர் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்ன தலை­மையில் கல்­மு­னையில் தரை­யி­றங்க, அதனைத் தொடர்ந்து, தலா 6 கொமாண்­டோக்­க­ளுடன், டிங்கிப் பட­குகள் தரை­யி­றங்­கின. அதை­ய­டுத்து கடற்­படை கொமாண்­டோக்­களின் பாது­காப்­புடன், மேல­திக உதவிப் படை­களை தரை­யி­றக்க முடிந்­தது.

இதை­ய­டுத்து புலிகள் 13ஆம் திகதி மாலை தாக்­கு­தலை முடித்துக் கொண்டு வெளி­யே­றினர். இந்த தாக்­கு­தலில், ஆயிரம் படை­யினர் வரை கொல்­லப்­பட்­ட­தாக விடு­தலைப் புலி­களால் அறி­விக்­கப்­பட்­டது.

எனினும், இரா­ணுவத் தரப்பில் 8 அதி­கா­ரி­களும் 225 படை­யி­னரும்- கொல்­லப்­பட்­ட­தா­கவும், 302 பேர் காணாமல் போன­தா­கவும், 17 அதி­கா­ரி­களும் 544 படை­யி­னரும் காய­ம­டைந்­தனர் என்றும்-

கடற்­ப­டை­யினர் தரப்பில், 14 கடற்­ப­டை­யினர் கொல்­லப்­பட்டு, 88 பேர் காணாமல் போயினர் என்றும் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டது.

50 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான ஆயு­தங்கள் அப்­போது புலி­க­ளிடம் சிக்­கி­ய­தாக ஜெனரல் கமல் குண­ரட்ண குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

விடு­தலைப் புலிகள் இந்த தாக்­கு­தலில், 469 பேரை இழந்­தனர்.

1993 நவம்பர் 14ஆம் திகதி வெளி­யான அர­சாங்க வார­இ­த­ழான சண்டே ஒப்­சேவர், “பூந­க­ரியில் புலிகள் ஈட்­டிய வெற்றி” என்ற தலைப்புச் செய்­தி­யுடன் தான் வெளி­யா­னது.

அந்­த­ள­வுக்கு அது பெருந்­தோல்­வி­யாக அர­ச­த­ரப்­பி­னா­லேயே ஒப்புக் கொள்­ளப்­பட்­டது.

இந்த தாக்­கு­தலில் ஏற்­பட்ட பின்­ன­டை­வுகள் குறித்து விசா­ரிக்க நான்கு பேர் கொண்ட இரா­ணுவ நீதி­மன்றம் ஒன்றை அப்­போ­தைய இரா­ணுவத் தள­பதி ஜெனரல் சிசில் வைத்­தி­ய­ரத்ன நிய­மித்­தி­ருந்தார்.

கவ­சப்­ப­டைப்­பி­ரிவைச் சேர்ந்த அவர், டாங்­கிகள் புலிகள் வசம் வீழ்ந்­த­தற்கு பொறுப்­பேற்று இரா­ணுவத் தள­பதி பத­வியில் இருந்து வில­கு­வ­தாக அறி­வித்தார்.

அவர் நிய­மித்த விசா­ரணை நீதி­மன்றம், அப்­போ­தைய வட­பி­ராந்­திய இரா­ணுவத் தள­ப­தி­யான மேஜர் ஜெனரல் ரொஹான் தளு­வத்த, யாழ். மாவட்ட இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த பிரி­கே­டியர் ஜாலிய நமுனி, பிரி­கே­டியர் லயனல் பல­கல்ல, பிரி­கே­டியர் கெமுனு குல­துங்க, பிரி­கே­டியர் சாந்த கொட்­டே­கொட, கேணல் ரஞ்சித் டி சில்வா, லெப்.கேணல் லலித் தவு­ல­கல ஆகி­யோரே பூந­கரி தோல்­விக்கு பொறுப்பு என குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தி­ருந்­தது.

தாக்­குதல் குறித்த முன்­னெச்­ச­ரிக்கை வழங்­கப்­பட்ட போதும் அதனை முறி­ய­டிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்று இவர்­க­ளுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுகள் கூறப்­பட்­டன.

எனினும், இவர்கள் மீது துறைசார் நட­வ­டிக்­கைகள் எதையும் அர­சாங்கம் எடுக்­க­வில்லை. அதனால் பிற்­கா­லத்தில் இவர்கள் பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக, இரா­ணுவத் தள­ப­தி­யாக, இரா­ணுவத் தலைமை அதி­கா­ரி­யாக, மேஜர் ஜென­ரல்­க­ளாக பதவி உயர்­வு­களைப் பெற்­றி­ருந்­தனர்.

பூந­கரி பின்­ன­டைவு குறித்து விசா­ரித்த இரா­ணுவ நீதி­மன்­றத்தின் அறிக்­கையில் இடம்­பெற்­றி­ருந்த சில விட­யங்கள் முக்­கி­ய­மா­னவை.

“நவம்பர் 11 ஆம் திகதி அதி­காலை 1.30 மணிக்கு தாக்­குதல் தொடங்கி, சுமார் 15 நிமி­டங்­க­ளுக்குள் பூந­கரி படைத்­த­ளத்தின் முழு கட்­டளை அமைப்பும் உடைந்து விட்­டது.

அங்கு படைப்­பி­ரி­வுகள், அல்­லது பட்­டா­லி­யன்கள், கொம்­ப­னிகள், பிளட்­டூன்கள் என்று எதுவும் இருக்­க­வில்லை. படை­யி­னரும் அதி­கா­ரி­களும் மட்டும் குழப்­பத்­துடன் ஓடிக்­கொண்­டி­ருந்­தனர். அவர்­க­ளுக்கு யார் நண்பன் யார் எதிரி என்று தெரி­ய­வில்லை.

சங்­கேத சொற்கள் கொடுக்­கப்­ப­டா­ததால் இருட்டில் யாரையும் அடை­யாளம் காண முடி­ய­வில்லை. புலிகள் தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்­காக வெள்ளை நிற பட்­டி­களை கைகளில் அணிந்­தி­ருந்­தனர். பகல் நேரங்­களில் பச்சை நிற டோர்ச் லைட்­க­ளையும் மஞ்சள் கொடி­க­ளையும் பயன்­ப­டுத்­தி­னார்கள்.

11ஆம் திகதி காலை 6 மணி­ய­ள­வி­லேயே, முன்­ன­ரங்க பாது­காப்பு நிலைகள் வீழ்ச்­சி­ய­டைந்து விட்­டன. படை­யினர் அச்­சத்தில் தங்கள் உயிர் ­வாழ்­விற்­காக மட்­டுமே போரா­டினர். தாக்­குதல் நடப்­ப­தற்கு முன்னர் சுமார் 400 புலிகள் முன்­ன­ரங்க நிலை­களை ஊடு­ருவி முகா­முக்குள் நுழைந்­தி­ருப்­பார்கள் என்று நீதி­மன்றம் கரு­து­கி­றது.

ரி 55 போர் டாங்கிகளே முதலில் எதிரிகளின் (புலிகள்) கைகளில் சிக்கின.

டாங்கிகள் எந்த எதிர்ப்பும் இன்றி கைவிடப்பட்டன. கவசப் படைப்பிரிவு துருப்பினர் தங்கள் தனிப்பட்ட ஆயுதங்களைக் கூட இழந்தனர், ஒரு அதிகாரி தனது தொலைத்தொடர்பு கருவியையும் இழந்தார். முதல் தாக்குதலுடன், படையினர் குழப்பத்தில் சிதறி, சிறியளவிலான குழுக்களாகினர் என்று விசாரணை நீதிமன்றம் கண்டறிந்தது.

தாக்குதல் தொடர்ந்ததால் அவை இன்னும் சிறிய குழுக்களாக உடைந்தன, இறுதியில் ஒவ்வொரு படையினரும் தனக்காகவே போரிட்டனர். படையினர் உயிர்வாழ்வதற்காக மட்டுமே போராடினர்.

பயத்தினால் அவர்களுக்கு வேறெந்த நோக்கமும் இருக்கவில்ல என கண்டறியப்பட்டது.

விசாரணை நீதிமன்றத்தின் கூற்றுப்படி, கட்டளை அமைப்பில் இருந்து பிரிந்த படையினர், பயத்தின் காரணமாக இரவில் எந்த இலக்கும் இன்றி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் வெடிமருந்துகள் தீர்ந்து போயின. மறுநாள் அவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்.” என்றும் இராணுவ நீதிமன்றம் அறிக்கையிட்டது.

இலங்கையின் போர் வரலாற்றில் பூநகரிச் சமர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, இராணுவ நீதிமன்றத்தின் அந்த விசாரணை அறிக்கையே ஒப்புவிக்கிறது.

சுபத்ரா (virakesari)

Exit mobile version