இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகமான Firstpost க்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போது தெரிவித்துள்ளார். .

ராஜபக்சக்கள் தமது செயற்பாடுகளுக்காக மன்னிப்புக் கோர வேண்டுமா என வினவியபோது, அது அவர்களுக்கே உரியது எனவும், அவர்கள் அவ்வாறு செய்துள்ளதாக தாம் நம்புவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க “அவர்களின் காலத்தில் நெருக்கடி ஏற்பட்டது.

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியையும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியையும் இராஜினாமா செய்தபோது, ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் சரிந்தது. நாட்டை பொறுப்பேற்க வேண்டிய எதிர்க்கட்சிகள் பொறுப்பில் இருந்து நழுவின ,” என்றும் தெரிவித்துள்ளார்.

தான் ராஜபக்ஷக்களை பாதுகாப்பதாக விமர்சகர்களின் கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, அந்த கூற்றுக்களை மறுத்து, “நான் ராஜபக்சக்களை பாதுகாக்கவில்லை. . ஆனால் அதன் பிறகு நாட்டை பொறுப்பேற்க வேறு யாரும் இல்லை. இப்போது விமர்சிப்பவர்கள் பொறுப்பில் இருந்து ஓடியவர்கள் என்றார்

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, தானும் மகிந்த ராஜபக்சவும் எப்போதும் பிறந்தநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதுடன் பிறந்தநாளையும் கொண்டாடுவது பொதுவான நடைமுறை என தெரிவித்துள்ளார்.

“மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளுக்கு நான் எப்போதும் வாழ்த்து தெரிவிப்பேன் , அவர் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பார். இம்முறை நாமல் ராஜபக்ச தனது வீட்டிற்கு விருந்துக்கு வர முடியுமா என்று கேட்டதற்கு நான் ஆம் என்றேன். எந்த எம்.பி.யும் என்னை அழைத்தால், எனக்கு நேரம் கிடைத்தால், நான் பிறந்தநாள் விழாவிற்கு செல்வேன். சில சமயங்களில் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலோ அல்லது அமைச்சரவையிலோ நாமும் கேக் வாங்கி வெட்டுவோம். இது ஒரு பாரம்பரியம், ”என்று அவர் கூறினார்.

விமர்சகர்கள் கூறுவது போல் தாம் ராஜபக்சக்களுக்கு பினாமி அல்ல என்று கூறிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, தற்போது ராஜபக்சக்களின் கட்சி பிளவுபட்டுள்ளதையும் வெளிப்படுத்தினார்.

“ஒரு பாதி சமகி ஜன பலவேகயவுடனும், மற்ற பாதி என்னுடனும் வேலை செய்கின்றன. ஒட்டுமொத்த ராஜபக்ச கட்சியும் எனக்கு ஆதரவாக இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். சஜித் பிரேமதாசவுக்கு முழு சமகி ஜன பலவேகய ஆதரவளிக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்வேன். அனைத்து கட்சிகளும் பிளவுபட்டுள்ளன,” என்றார்.

நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுமாறு தான் வேண்டுகோள் விடுத்ததாகவும், இலங்கையின் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதற்கான பெரும்பான்மையைப் பெற்றதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version